அதிமுகவின் மூத்த தலைவரும் ராமநாதபுரம் எம்.பி.யுமான அன்வர் ராஜாவின், ‘முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல் ’ என்ற புத்தகம் அக்டோபர் 22 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. மும்முறை தலாக் சொன்னால் அப்படிச் சொல்கிற முஸ்லிம் ஆண் , சிறைக்கு அனுப்பப்படுவார் என்கிற சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வருடம் மத்திய அரசு கொண்டுவந்தபோது, அதை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசியவர் அன்வர் ராஜா. அவரது நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு, ‘முத்தலாக் மசோதா ; உரிமை மீறும் செயல்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், உருது என்ற மும்மொழிகளில் அக்டோபர் 22 சென்னையில் வெளியிடப்பட்டது. இதனை ஷா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறது.
மக்களவையின் துணை சபாநாயகரும், அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான
தம்பிதுரை தலைமை வகித்த இந்த நிகழ்வில் அவரே நூலையும் வெளியிட்டார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வக்பு வாரிய உறுப்பினர் பாத்திமா முசாபர் உள்ளிட்ட 5 முஸ்லிம் பெண்மணிகள் நூலைப் பெற்றுக் கொண்டனர். வரவேற்புரையாற்றிய இஸ்லாமியக் கூட்டமைப்பின் தலைவர் அப்பலோ அனிபா, “முத்தலாக் சட்டத்தை எதிர்த்து பலர் எங்கெங்கோ குரல் கொடுத்துள்ளனர்.
ஆனால், அன்வர் ராஜா எங்கு குரல் கொடுத்தால் அரசை சென்று அடையுமோ அங்கே குரல் கொடுத்துள்ளார். விசுவரூபம் படம் இஸ்லாமிய சமுதாயத்தை அவமதிக்கிறது என்று முறையிட்டவுடன் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து படத்தை வெளியிட தடை விதித்தவர் ஜெயலலிதா. சிறுபான்மை மக்களை மதிப்பதில் அவருக்கு இருந்த உணர்வு இப்போதைய அதிமுகவுக்கும் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் வேலுமணி வாழ்த்துரைத்தபோது, “அன்வர் ராஜாவின் நாடாளுமன்ற உரை வீரம் மிக்கது. இப்படி ஒரு உரையை நாடாளுமன்றத்தில் பேசி நமது நிலைப்பாட்டை எடுத்துரைக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அன்வர் ராஜாவுக்கு அனுமதி அளித்தார். தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள் எதையும் நாம் விட்டுக் கொடுப்பதாக இல்லை. சிறுபான்மை மக்கள் நமது சகோதரர்கள், அவர்களுக்கு எடப்பாடியார் என்றும் உறுதுணையாக இருப்பார்” என்று கூறினார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அன்வர் ராஜா சிறந்த பேச்சாளர். அம்மாவிடம் நாங்கள் பயபக்தியோடு இருந்தநிலையில் அன்வர் ராஜா மட்டுமே அம்மாவிடம் கூட தைரியமாக சில விஷயங்களைப் பேசுவார். அவர் முத்தலாக் மட்டுமல்ல தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்னைகளில் எல்லாம் விரிவான, ஆதாரமான, ஆணித்தரமான வாதங்களை அடுக்குபவர்” என்று குறிப்பிட்டார்.
விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார். “1991-96 ஆட்சிக் காலத்தில் இதே கலைவாணர் அரங்கத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழா மேடையிலேயே இரு கோரிக்கைகள் அப்போதைய முதல்வர் அம்மாவின் முன் வைக்கப்பட்டன. காயிதே மில்லத்
பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், உலமாக்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற அந்த இரு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றினார் ஜெயலலிதா. அன்று முதல் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது அந்த காட்சி என் கண்ணில் நிழலாடுகிறது. நாங்கள் ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். தமிழ் மக்களின் உணர்வு , உரிமை சம்பந்தப்பட்டது என்றால் நிச்சயம் எதிர்ப்போம். உங்களோடு நாங்கள் என்றும் இருப்போம்” என்று கூறினார்.
அடுத்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, “ ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருக்கும். அதிமுகவின் கொள்கை என்று வரும்போது நாங்கள் என்றும் ஜெயலலிதாவின் வழியில் உறுதியாக இருப்போம்” என்று கூறினார்.
ஏற்புரையாற்றிய எம்.பி. அன்வர் ராஜா, “வெள்ளைக் காரர்களின் ரௌலட் சட்டத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதன் மூலம் அதை ஒரு செத்த சட்டமாக மாற்றினார் காந்தியடிகள். அதேபோல இந்த முத்தலாக் சட்டத்தை நாம் நினைத்தால் செத்த சட்டமாக மாற்ற முடியும். இந்த சட்டத்தின் படி ஒரு முஸ்லிம்பெண்ணும் காவல் நிலையத்துக்கு செல்லமாட்டேன். என்று உறுதியெடுத்தால், இது செத்த சட்டமாக மாறிவிடும். ஜமாத்களின்
தீர்ப்புக்கு கட்டுப்பட்டு இருந்தாலே முத்தலாக் சட்டத்தை செத்த சட்டமாக மாற்றிவிட முடியும்.
இந்தியாவில் மொத்தம் 34 தனியார் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மோடி ஷரியத் சட்டத்தில் மட்டுமே கை வைக்க காரணம் என்ன? நாடாளுமன்றத்தில் அதிமுக மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. முத்தலாக் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம், நில அபகரிப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம், நீதிபதிகள் நியமன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்தோம். உதய் திட்டதில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்தோம். ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே கட்சி இந்தியாவில் அதிமுகதான்.
99 ஆம் ஆண்டு டெல்லி சென்ற ஜெயலலிதா, பத்து நாட்கள் தங்கியிருந்து பாஜக அரசைக் கவிழ்த்துவிட்டுத்தான் சென்னை திரும்பினார். அவ்வாறு அவர் அரசைக் கவிழ்க்காமல் இருந்திருப்பாரேயானால், சென்னை வந்து இறங்கியவுடன் ஜெயலலிதாவை கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இப்போதும் சொல்கிறோம்... இந்த மத்திய அரசை வீழ்த்த முடியுமானால் நாங்கள் வீழ்த்தியிருப்போம். அதனால் மீண்டும் மீண்டும் அதிமுக பாஜக உறவு என்றெல்லாம் சொல்லாதீர்கள். இனிமேல் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் உறவு
என்று சொன்னால் அது ஹராம் ஆகும். இந்த புத்தகம் ஒவ்வொரு இஸ்லாமியர் கைகளுக்கும் சென்று சேர வேண்டும். அதற்கு இஸ்லாமிய அமைப்புகளும் தனவந்தர்களும் உதவ வேண்டும்” என்று பேசி முடித்தார் அன்வர் ராஜா.
நிறைவாகப் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘’அதிமுக என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு அரணாக நிற்கும்” என்றார்.
கூட்டத்தில் ஜமாத்துல் உலமா தலைவர் காஜா மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், ஜமாத்தே இஸ்லாமிய இந்த் தலைவர் டாக்டர் ஹபீப் முகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, பாத்திமா முசாப்பர், அப்பலோ அனிபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.