Skip to main content

புழல் வாசம் செய்யப்போகும் மனிதர்தான் ராஜேந்திர பாலாஜி... ஸ்டாலின்

dddd

 

 

விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொளி வாயிலாக தலைமையேற்று சிறப்புரையாற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

அப்போது அவர், ''முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களையும் பற்றிச் சொன்னால் பல மணிநேரம் பிடிக்கும். அ.தி.மு.க. அரசில் அங்கம் வகிக்கக் கூடிய அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜியைச் சொன்னால் போதும்.

 

ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது; ஒரு மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாகக் காட்ட வேண்டிய நபர் தான் ராஜேந்திர பாலாஜி!

 

எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆளும் கட்சியினர் - இன்னும் சொன்னால் ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே உயிருக்கு பயப்படக் கூடிய அளவுக்கு அராஜகம் கொடி கட்டிப் பறக்கும் மாவட்டமாக இந்த விருதுநகர் இருக்கிறது.

 

எனக்கே கொலை மிரட்டல் விடுக்கிறாயா என்று சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கேட்கும் அளவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.

 

ddd

 

ஆளும் கட்சி சார்பாக, விருதுநகர் மாவட்டத்தை மட்டுமல்ல, அ.தி.மு.க. சார்பில் அரட்டல் உருட்டல் செய்வதற்காக தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சராகவே ராஜேந்திர பாலாஜி வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

 

வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன் என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.

 

* தி.மு.க. தொண்டர்கள் வீட்டுக் கதவை உடைப்போம். சட்டை கிழிப்போம்.

 

* கட்டபொம்மனைத் தூக்கில் போட்டது போல கமல்ஹாசனைத் தூக்கில் போட வேண்டும்.

 

* விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாத்தூர் தொகுதிக்கு உள்ளே நுழைந்தால் பன்றியை சுடும் ரப்பர் குண்டால் சுட வேண்டும்.

 

* உள்ளாட்சித் தேர்தலில் பல சித்து வேலைகளை செய்து அ.தி.மு.க.வை வெற்றி பெற வைப்பேன்! 

 

* கொரோனா நோய் என்பது மக்களுக்கு தரப்பட்ட தண்டனை.

 

* அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காத இசுலாமியர்களைக் கொச்சைப்படுத்தி பேசுவது.

 

- இவை அனைத்தும் ராஜேந்திர பாலாஜி சொல்லியதன் சுருக்கம் தான்.

 

dddd

 

அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒருவர் எந்த வார்த்தையை எல்லாம் பயன்படுத்தக் கூடாதோ அந்த வார்த்தைகள் அனைத்தையும் தனது பேச்சுகள், பேட்டிகளில் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இவரை ஒரு நாள் கூட பதவியில் வைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்து போன பிறகு, தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார்.

 

இன்றைய அ.தி.மு.க.வுக்குள் பா.ஜ.க. அணி என்ற ஒன்று இருக்கிறது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

 

பா.ஜ.க. தன்னை எதுவும் செய்யாது என்ற தைரியத்தில் தான் ராஜேந்திரபாலாஜி இப்படி செயல்பட்டு வருகிறார்.

 

தினமும் மைக்கை பார்த்தால் ஏதாவது உளறும் ராஜேந்திர பாலாஜி, என்றைக்காவது தனது துறையைப் பற்றி பேசி இருக்கிறாரா என்றால் இல்லை.

 

ஆவின் வட்டாரமும் பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்லி இருக்கிறாரா?

 

பால் வாங்குவதில் பெறப்படும் கமிஷன்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை வாயைத் திறந்துள்ளாரா?

 

சுமார் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை ஆவின் நிறுவனம் சந்தித்ததால் அது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு குறித்து அமைச்சரின் பதில் என்ன?

 

மதுரையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் துர்நாற்றம் பிடித்து இருந்ததாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் செய்தார்களே. அதற்கு அமைச்சரால் பதில் தர முடியுமா?

 

மதுரை மாவட்ட பால் திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 8 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

 

மதுரை மாவட்ட மொத்த பால் குளிர்விப்பான் நிலையத்தில் மட்டும் 62 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

 

மேற்கு மாவட்ட பால் விற்பனையில் விநியோகிக்கப்பட்ட போலி செக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இவரது பதில் என்ன?

 

நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி பால்விலையை ஏற்றிவிட்டு, புதிதாக ஆறு ஒன்றியங்களை ஏற்படுத்தி நிர்வாகச் செலவுகளை அதிகப்படுத்தியதுதான் இவர் இந்தத துறையைக் கவனிக்கும் இலட்சணமா?

 

ஒன்றியங்களில் அவுட் சோர்சிங் முறையில் இருந்தபணியிடங்களை நேரடி நியமனம் என்ற பெயரில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?

 

விதிமுறைகளுக்கு முரணான பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் என்று அதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்புகள் நடந்திருப்பதற்கு அமைச்சரின் விளக்கம் என்ன?

 

மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர் பதவிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாருக்கு பதில் என்ன?

 

மதுரை பால் பண்ணையில் நடந்த முறைகேட்டுக்கு காரணமானவர்களை காப்பாற்றியது யார்? இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதில் நடந்துள்ள இமாலயத் தவறுகளுக்கு யார் காரணம்? 

 

ஆவின் பால் பைக்கான பாலிதீன் பிலிம் கொள்முதல் முறைகேட்டால் பலன் அடைந்தவர்கள் யார்?

 

தென்மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கான மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் நடந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றியது யார்?

 

ஆருத்ரா ஊழலில் இன்றைய உண்மை நிலை என்ன?

 

இந்த எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஐ.நா. அதிகாரியைப் போல உலகப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

 

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திரபாலாஜி மீது நடந்து வருகிறது. இராஜபாளையம் தேவதானத்தில் 35 ஏக்கர் நிலமும், திருத்தங்கலில் இரண்டு வீட்டு மனைகளும், 75 செண்ட் நிலமும் வருமானத்துக்கு அதிகமாக 2011-13 காலக்கட்டத்தில் இவர் வாங்கியதாக திருத்தங்கல் மகேந்திரன் என்பவர் போட்ட வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது. ஏழு கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ஒரு கோடி என்று கணக்கு காட்டியுள்ளார் ராஜேந்திரபாலாஜி என்பது குற்றச்சாட்டு. இதில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இவர் போட்ட மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.

 

இந்த வழக்கில் தீர்ப்பு வந்தால் இன்றில்லாவிட்டாலும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் புழல் வாசம் செய்யப்போகும் மனிதர் தான் ராஜேந்திர பாலாஜி என்பதை அவருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் நினைவுபடுத்துகிறேன்.

 

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓராண்டு தண்டனை கொடுத்தால் ராஜேந்திர பாலாஜி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன்!

 

ddd

 

ராஜேந்திர பாலாஜி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜவர்மன் இடையேயான மோதல் குறித்து வெளிப்படையாக கட்டுரை எழுதிய செய்தியாளர் கார்த்திக் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் அமைச்சர் இருக்கிறார் என்ற செய்தியை அவர் இதுவரை மறுத்துள்ளாரா? இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

 

ராஜேந்திர பாலாஜிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடக்க முடியாது. தி.மு.க.வால் தான் அடக்க முடியும். மக்கள் சக்தியால்தான் அடக்க முடியும். அப்படி அடக்குவதற்கான தேர்தல்தான் வரப்போகிற சட்டமன்றத் தேர்தல். இவ்வாறு உரையாற்றினார்.