நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி தொடரும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தலும் நிரூபணம் ஆகி விட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் கங்கை மாதா தன்னை தத்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற 'பிஎம் கிசான் சமேலன்' என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''மூன்றாவது முறையாக ஒரு அரசு அமைவது என்பது அபூர்வமான ஒரு செயல் மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசி வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மூன்றாவது முறையாக நானே பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை வைத்து வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் எனது நன்றி. இந்த தொகுதி வெறும் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க வில்லை மாறாக நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலுவான அரசாக பாஜக அரசு அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். மூன்றாவது முறையாக என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்'' என நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.