Skip to main content

சட்டப்பேரவையில் தாக்கலானது லோக் ஆயுக்தா மசோதா!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
jaya


லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் நிறைவடையும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டிலுள்ள 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஜூலை 10ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில், லோக் ஆயுக்தா சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு அமைச்சர் ஜெயக்குமார் இந்த சட்டத்தை நிறைவேற்றினார்.

 

 

லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலத்தில், ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் அமர்வு அமைக்கப்படும். இந்த அமர்வில் அரசு ஊழியர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும். சட்டப்பூர்வ தன்னாட்சிமிக்க இந்த அமைப்பு, புகார்களை விசாரிக்க ஆளுநர் அல்லது அரசின் அனுமதியை பெற தேவையில்லை.

மேலும், லோக் ஆயுக்தாவில் வரும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது செஷன்ஸ் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகளோ நியமிக்கப்படுவார்கள். அந்த நீதிபதிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார், முழு அதிகாரத்துடன் எந்த குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

ஆரம்பகட்ட விசாரணையிலேயே குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால், புகாருக்கு உள்ளானவர்களின் சொத்துக்களை முடக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உண்டு. லோக் ஆயுக்தாவில் நடைபெறும் விசாரணை பற்றி, உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ கேள்வி எழுப்ப முடியாது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள் இருக்கும்பட்சத்தில், அனைத்து ஆவணங்களையும் குற்றவியல் விசாரணை இயக்குநரகத்துக்கு லோக் ஆயுக்தா அனுப்பி வைக்கும். அதன்பிறகு, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயலும்' - ஜெயக்குமார் பேட்டி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
admk Jayakumar interview;vikkiravandi byelection


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 'இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்று கூடி விவாதித்ததின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக எப்படி இருந்தாலும் சரி இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி குறிப்பாக திமுக அராஜகத்தையும் அநியாயத்தையும் கட்டவிழ்த்துவிட்டு ஒரு போலியான வெற்றியைப் பெறுவதற்கான எல்லா விதமான செயல்களையும் செய்வார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். அதுபோல பணத்தை முழுமையாக செலவு செய்து ஒரு போலியான வெற்றியைப் பெறுவார்கள். அதன் அடிப்படையில் ஜனநாயக ரீதியாக இந்த தேர்தல் நடைபெறாது. ஈரோட்டில் எவ்வளவு பெரிய அளவுக்கு அராஜகம் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இந்தத் தேர்தலிலும் நிச்சயமாக திமுகவினர் அராஜகம் பண்ணுவார்கள், அநியாயம் பண்ணுவார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை திமுகவினர் அடைத்து வைத்தனர். அந்த வகையில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்கு எல்லாம் முயற்சி செய்வார்கள். எனவே இந்த தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'தேர்தலில் போட்டியிடாதது அதிமுகவிற்கு பின்னடைவை கொடுக்காதா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ''இதேபோல 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்தார். திமுக கொள்ளையடித்த பணத்தை எல்லாவற்றையும் இறக்கி வெற்றி பெற்றார்கள். ஆனால் 2011 இல் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டோமா?'' என்றார்.

Next Story

வெளியான விளம்பரம்; ஜெயக்குமார் கண்டனம் !

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
'Why does the BJP, which claims to be one country, fear VK Pandian?'-Jayakumar

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (நாளை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் 'ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்! அறிந்தவர்கள்!

ஒரு தமிழன்‌ ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது! தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.

உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.

எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.

ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது.மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!' என தெரிவித்துள்ளார்.