நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பாஜக அமைத்துள்ளது. அதன்பிறகு நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவர்களுடன் ஏற்கனவே இருந்து அமைச்சரவையில் சில மாற்றங்களுடன் கேபினெட் அமைச்சர்களும் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும் மொத்தம் 72 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் கூடிய மக்களவை கூடுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கரன் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற மக்களவை கூட்டம் வரும் 24 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பில், ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதி இடைக்கால சபாநாயகர் மூலம் வெற்றிபெற்ற எம்.பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து செய்து வைக்கப்படும். 26 ஆம் தேதி சபாயாநகர் தேர்வு நடைபெறும். பின்னர் 27 ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவை மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூட்டுத்தொடரில் உரையாற்றுவார். அதன்பிறகு மக்களவை, மாநிலங்களைவை என இரு அவைகளிலும் தனித்தனியே அமர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாகக் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.