வரும் ஏப்ரல் மாதத்தில் கட்சி தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்த ரஜினிகாந்த் திட்டமிட்டிருக்கிறார் என்று தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ஏப்ரல் மாதத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல் நேரடியாக தான் தேர்தல் களத்தில் போட்டியிடாமல், கட்சியினரை தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் இறங்கினார். அதேபோல் ரஜினி 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சியினரை வேட்பாளர்களாக போட்டியிட வைப்பாரா? அல்லது நேரடியாக அவரே தேர்தல் களத்தில் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் நடந்து வருகிறது.
இதனிடையே ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயணராவ் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளிக்கு சென்று வருகிறார். அங்கு பலரை சந்தித்துப் பேசி வருகிறார். மேலும் ரஜினி ரசிகர்களுடைய மக்கள் மன்றத்தினரும் அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏரி, குளங்களை தூர்வாருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
இதுகுறித்து விசாரித்தபோது, ''என் சொந்த ஊர் நாச்சிக்குப்பம்' என ரஜினி சொல்லும் காட்சி தர்பார் படத்தில் இடம் பெறுகிறது. வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்குள்தான் இந்த நாச்சிக்குப்பம் கிராமம் வருகிறது. வேப்பனஹள்ளி தொகுதியில்தான் ரஜினி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்றும் இதனால்தான் ரஜினி ரசிகர்கள் இந்த தொகுதில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வருவதாகவும், சதிநாராயணராவ் அடிக்கடி வேப்பனஹள்ளிக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் தர்பார் படத்தில் தனது சொந்த ஊர் குறித்து ரஜினி பேசியிருப்பதாக சொல்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் உரிய கூட்டணியை தேர்வு செய்வோம். அதில் கட்சியினரை போட்டியிட வைத்து, தங்கள் கட்சியின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வரும்போது, தங்கள் கட்சிக்கு முதல்வர் பதவி வேண்டும் என்ற நிபந்தனை வைத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே முதல்வரானது போல் நீங்களும் முதலமைச்சராகலாம் என்று நெருங்கிய அரசியல் ஆலோசகர்கள் ரஜினிக்கு கூறியுள்ளார்களாம்.