நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (04-06-24) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியதால், தனிப்பெருபான்மை என்ற அந்தஸ்தை பா.ஜ.க இழந்துவிட்டது. இதனால், மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் தான் நிலவுகிறது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியும், அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றது. இதனையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது.
ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஜன சேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆந்திர மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தனிப்பெரும்பான்மையும் தாண்டி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதே போல், 25 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில், தெலுங்கு தேசம் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியில் கூட்டணியில் உள்ள பா.ஜ.க 3 இடங்களிலும், ஜன சேனா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 25 இடங்களிலும் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி அமராவதி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த மாதிரி முடிவுகள் வரும் என்று நான் நினைக்கவில்லை. முன்பு அற்பமாக இருந்த நல ஓய்வூதியத்தை உயர்த்திய முதியோர்களின் அன்பு என்ன ஆனது என்று தெரியவில்லை. யாரோ ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது, அதற்கு ஆதாரம் இல்லை. என்ன நடந்தது என்று கடவுளுக்குத் தெரியும். அதனால், என்னால் எதுவும் செய்ய முடியாது. மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய கண்டிப்பாக இருப்போம். வால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். புதிய அரசாங்கத்திற்கு என்னுடைய வாழ்த்துகள். மீண்டும் வீரியத்துடனும் தைரியத்துடனும் மீண்டு வருவோம். ஒய்.எஸ்.ஆர் காங்கிராஸ் தொடர்ந்து மக்களுக்கு ஆதரவாக நிற்கும். எதிர்க்கட்சியில் இருப்பது எனக்கோ எனது கட்சிக்கோ புதிதல்ல. சிரமங்களும் சவால்களும் நமக்கு புதிதல்ல. என்ன வந்தாலும் அவர்களை எதிர்கொள்வோம்” என்று கூறினார்.