
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதியை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது.
அதில், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.