நான் வழங்கும் தீர்ப்புகள் 24 மணிநேரத்தில் மாற்றப்படுவதை விரும்பவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்து, நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றம்சாட்டினர். அவர்களில் ஒருவரான நீதிபதி செலமேஸ்வர், சில தினங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இருக்கும் குளறுபடிகள் குறித்து பேசியிருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகள் குறித்த விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும் என சாந்தி பூஷன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று நீதிபதி செலமேஸ்வர் அமர்வுக்கு வந்தது. ஆனால், நீதிபதி செலமேஸ்வர் இந்த வழக்கை விசாரிக்க முன்வரவில்லை. பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஷ்ரா, சம அந்தஸ்து உள்ள நீதிபதிகளில் தலைமை நீதிபதியே முதன்மையானவர். வழக்குகளை விசாரணைக்காக ஒதுக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் அவருக்கு வழங்கியது என்ற உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்நிலையில், அந்த வழக்கை தான் எதற்காக விசாரிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நீதிபதி செலமேஸ்வர் விளக்கியுள்ளார். அதில், ‘நான் இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறப் போகிறேன். அதனால், இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியாது. வழக்குகள் மீதான எனது தீர்ப்புகள் 24 மணிநேரத்தில் மாற்றப்படுவதை நான் விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.