உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அப்பெண் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த அவர் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சனிக்கிழமை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் முழு வழக்கு விசாரணையும் நடைபெற வேண்டும். ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவருக்கு வேறு எந்த பெரிய பதவியும் கொடுக்கக் கூடாது. தங்களிடம் எதுவும் கேட்காமல் எங்கள் மகளின் உடல் ஏன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது? தாங்கள் ஏன் மீண்டும் கொடுமைப்படுத்தப்படுகிறோம். இறந்த உடல் தங்களின் மகள் உடல்தான் என நாங்கள் எப்படி நம்புவது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த கேள்விகளுக்கான பதிலை பெறுவது இந்தக் குடும்பத்தின் உரிமை எனவும், உத்திரப்பிரதேச மாநில அரசு இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.