Skip to main content

4 மாசத்துக்கு முன்னால இ.பி.எஸ். திறந்த பாலம்... இதுல அவர் கார் ஓட்டுவாரா? பொதுமக்கள் கேள்வி (படங்கள்)

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
edapadi-palanisamy


 

முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள பேயாடிக்கோட்டையில் ரூ. 5.70 கோடியில் கட்டி உயர்மட்டப் பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்திற்காக இருபக்கமும் போடப்பட்ட சாலைகள் சில நாட்கள் பெய்த மிதமான மழைக்கே உடைந்து சிதறி வருகிறது. 
 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் பேயாடிக்கோட்டை கிராமத்தில் இருந்து சிறுகாம்பூர், வெள்ளையாபுரம் வழியாக திருவாடனை செல்லும் சாலையில் பாம்பாற்றை கடக்க கடந்த 2014 – 2015 நபார்ட் திட்டத்தில் ரூ. 5.70 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் 2016 ஜனவரி 14 ந் தேதி பணிகள் தொடங்கப்பட்டு 2018 மார்ச் 28 ந் தேதி பணிகள் முடிவடைந்தது. பாலத்துடன் உயர்த்தப்பட்ட சாலையில் சரிவு ஏற்படாமல் மண் ஏற்றி போடப்பட்டது. இந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஜூன் 4 ந் தேதி திறந்து வைத்தார். அப்போதே அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் அணைக்கப்பட்ட மண்ணில் சரிவு ஏற்படத் தொடங்கியது.
 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் பாலத்தில் ஏறும் சாலை பாலம் பாலமாக வெடித்து இருசக்கரவாகனங்கள் அந்த வெடித்த பள்ளத்திற்குள் விழுந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாலத்தை ஒட்டி சரிவுகளை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள், தடுப்பு சுவர்கள் சரிந்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் போது இன்னும் சில நாள் பெய்யும் மழையில் முழுமையாக தடுப்பு சுவர்கள் கொட்டிவிடுவதுடன் பாலத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த வழியாக திருவாடனை செல்லமுடியாத கனரக வாகனங்கள் 15, 20 கி.மீ சுற்றி செல்லவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

 

av koil paamparu palam


இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, நபார்ட் நிதியில உயர்மட்ட பாலம் கட்டப்போறதா சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டோம். ஆனா இப்ப ஏன் இந்த பாலத்தை கட்டி எங்க கிராமங்களுக்கு செல்லவிடாம தடுக்குறாங்கனு அவதிப்படுறோம். மண் சரிவு ஏற்படுதுன்னு ஒப்பந்தக்காரர்கிட்ட கேட்டா பதிலே சொல்லாம போறார். பாம்பாற்றில் மணல் கொள்ளையர்கள் மணலையும் அள்ளி முடிச்சுட்டாங்க. இப்ப பாலம் வேற ரொம்ப மோசமா இருக்கிறதால மழை தண்ணீர் காட்டாற்றில் வந்தால் பாலம் தாங்குமான்னே தெரியல. முதலில் தடுப்புகளும், சாலைகளும் உடைந்து நாசமாகிடுச்சு. அடுத்து பாலம் என்ன கதியாகுமோ?.
4 மாசத்துக்கு முன்னால இ.பி.எஸ். திறந்த பாலம் சார். இதுல அவர் கார் ஓட்டுவாரா? என்றனர். 

 

தொடர்ந்து முதலமைச்சர் மேல் இது பொன்ற பணிகள் குறித்து சி.பி.ஐ விசாரனை வரை போய் உள்ள நிலையில் இப்ப புதுசா பேயாடிக்கோட்டை பாம்பாற்று பாலப் பணிகளும் விசாரனையில் சேர்க்கப்படலாம் என்று பலர் கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்