Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 DMK candidate filing nomination on Vikravandi by-election

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று (19-06-24) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பிக்கள் ரவிக்குமார் மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிடோர் உடன் இருந்தனர். இதனிடையே, இன்று மாலை நேரத்தில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரின் கடிதம்; கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகப்படுத்தி மத்திய அரசு பதில்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்தவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று முறை கடிதம்  எழுதி இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், '1974ம் வருடம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையேயான ஒரு ஒப்பந்தத்தின் (கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டு) அடிப்படையில் மீனவர் பிரச்சனை ஆரம்பமானது. அன்றிலிருந்து எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்! (படங்கள்)

Published on 27/06/2024 | Edited on 27/06/2024

 

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் எனச் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல்  அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  இந்த போராட்டத்திற்கு தேமுதிகாவும் ஆதரவளித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

படங்கள் - எஸ்.பி.சுந்தர்