நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.