டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் இன்று (18.05.2020) நடைபெற்றது. இரங்கல் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கினார். டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த் செல்வம் முன்னிலை வகித்தார்.
இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் நீதி வேண்டி இன்று வரை 11 ஆண்டுகள் கடந்தும் போராடுகிறார்கள். மேற்கண்ட போராட்டத்தை லண்டனில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, உலகளாவிய தமிழ் அமைப்புகளான கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழ் நடவடிக்கை குழு, உட்பட ஜெர்மணி, ஸ்விட்சர்லாந்து, பின்லாந்து, இத்தாலி, பிரான்சு, நியூஸிலாந்து, நார்வே, தென் ஆப்ரிக்க, பெல்ஜியம் போன்ற உலகில் உள்ள 35 தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்து சட்ட ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறது.
கடந்த 2009 இல் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமையான நிகழ்வு அனைத்து நாட்டினரையும் வேதனை அடைய செய்தது. அங்கு நடந்த மனித உரிமை மீறலையும், போர்க்குற்றங்களையும் செய்த இலங்கையைத் தண்டிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வு விசாரணை வேண்டி தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக இந்தியா ஐ.நா.வில் தமிழ் மக்களுக்காக இலங்கைக்கு எதிரான குரல் கொடுத்து முனைப்பு காட்ட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்ட ஏற்பாடுகளைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராம்சங்கர் ராஜா செய்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வசந்த குமார், ஜெகன், மயில்சாமி, சிவகுமார், சாந்தகுமார், சரத், லோகேஷ், சித்ரகலா, வைஜெயந்தி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கோவிட் 19 விதியைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.