Skip to main content

வெளியேற்றப்படும் தொழிலாளர்கள்; மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
The court ordered action in the Manjolai case

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். 

குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று திருநெல்வேலி மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மாஞ்சோலையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான உரிமம் வருகிற 2028ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. இந்த உரிமத்தை புதுப்பிதற்கான நடவடிக்கையை எதுவும் எடுக்காமல், இங்கு வாழக்கூடிய மக்களை அங்கிருந்து காலி செய்யக்கூடிய நடவடிக்கையை அரசும், தேயிலைத் தோட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். 

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வெளியேற்றுவதால் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் போது மாஞ்சோலையைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மேலும், மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் வரை மாஞ்சோலையில் இருந்து யாரும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பான மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்