
உலக நாடுகளை தனது ஆக்டோபஸ் கரத்தில் வைத்திருக்கும் கரோனா, இப்போது சென்னையில் மையம் கொண்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 'டபுள் செஞ்சுரி' அடித்து வருகிறது. தினமும் பரிசோதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் என்பதே இதற்கு காரணம் என்று ஆளும் அரசு காரணம் சொன்னாலும், சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டோமோ என்ற ஐயம் எழுகிறது.
கடந்த 4 நாட்களில் சென்னையில் போலீஸார் அதிகம் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது, அவர்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து 10 அடி தூரத்தில் இருக்கிறது காவலர் குடியிருப்பு. இங்கு வசிக்கும் காவலர் ஒருவருக்கு இன்று (03-05-2020) கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவரது வீட்டருகே வசிக்கும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர், நோயாளியுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என 10 பேர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓமந்தூரார், ராஜிவ்காந்தி, கீழ்பாக்கம் என ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டு, இறுதியில் எங்கும் பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கே திரும்ப அழைத்து கொண்டு வந்துவிட்டனர். இதற்கு காரணம் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கரோனா பரிசோதனைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம்.
இதனிடையே, இந்தக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்ததால், இங்கிருந்து காவலர்களைப் பணிக்கு அழைக்க வேண்டாம். அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மற்ற மண்டலங்கள், போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலர்களை மேலதிகாரிகள் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இப்போது இது தடை செய்யப்பட்ட பகுதி வெளியே செல்லக்கூடாது என்று லோக்கல் போலீஸார் தடுப்பு வைத்துள்ளனர். இதனால் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவிப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பாரா காவல் ஆணையர்..?