CM MK Stalin Strong condemnation of Governor RN Ravi

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் நாள்கூட்டத்தில்ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சட்டமன்றம் சற்றும் குறைந்தது அல்ல., ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

இந்நிலையில் நான்காவது நாளாக இன்று (15.02.2023) சட்டப்பேரவை கூடியது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “பெரியார், அண்ணாவின் வாரிசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன். கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சிக்காக என் மனசாட்சியின்படி நான் செயல்பட்டு வருகிறேன். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது.

Advertisment

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் கர்ப்ப கிரகத்தில் சமத்துவம் நுழையத் தொடங்கிவிட்டது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் திராவிட மாடல் அரசு இயங்கி வருகிறது. தெற்கு வளர்கிறது வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது வடக்கு வாழ்கிறது. இதன் மூலம் தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறியுள்ளது ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது தான் ஆளுநரின் கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல். இதன் மூலம் ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி உள்ளார். பாசிசத்தை எதேச்சதிகாரத்தை எதிர்த்து நிற்கும் நாம் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான செயலை கண்டு அஞ்சமாட்டோம்” எனத் தெரிவித்தார்.