கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தவிர தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு, பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வந்ததனால், வரும் 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஊரடங்கு என்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உள்பட பலர் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். உரிய இ-பாஸ் உள்ளதா எனச் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் சோதனை செய்கின்றனர். அரசு அனுமதித்த நபர்களைவிட காரில் அதிக நபர்கள் இருப்பதால் போலீசார் அவர்களை ஓரமாக நிற்க வைத்து விசாரிக்கின்றனர். இப்படிச் சோதனை செய்வதால் வாகனங்கள் சுங்கச்சாவடியில் இருந்து இரண்டு கிலோ மீட்டரைத் தாண்டி நிற்கிறது.
இதனிடையே சிலர் இருசக்கர வாகனத்திலேயே குடும்பம் குடும்பமாகப் பயணிக்கின்றனர். அப்படிச் செல்பவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் விசாரித்துவிட்டு திருப்பி அனுப்புகின்றனர். இருப்பினும் பைபாஸ் சாலையில் செல்லாமல் குறுக்கே கிராமங்களின் வழியே புகுந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.
சுகாதாரத் துறையினரைச் சுங்கச்சாவடியில் நிறுத்தி தங்களை சோதனை செய்து பிறகு அனுப்பிவிடலாம், அதைவிட்டு சொந்த ஊருக்கு அனுமதிக்க முடியாது என சென்னைக்கே மீண்டும் திருப்பிவிடுவதாக வாகனங்களில் வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.