இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம்(19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (21-02-24) தாக்கல் செய்யப்படவுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான விரிவான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், ‘மக்களை தேடி மேயர்’ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (21-02-24) காலை 10 மணிக்கு மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை (22-02-24) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.