தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது எனவும், 11 ஆம் வகுப்பு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29 தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இருக்குமா என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், “பொதுத் தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணைகளும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிக்கு ஏற்றாற்போல் தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும். ஆகையால் தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.