கேள்வித்தாள் லீக் ஆனதாகக் கூறப்படும் பொருளியல் மற்றும் கணிதவியல் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முடிவுசெய்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு இம்மாதம் 5ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்கின. கடந்த திங்கள்கிழமை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொருளியல் தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வுக்கு முன்பாகவே கேள்வித்தாள் வெளியானதாக தகவல் வெளியாகியது. பேஸ்புக், வாட்ஸ் ஆப் வழியாக கேள்வித்தாள் லீக் ஆனதாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.எஸ்.இ. திட்டவட்டமாக மறுத்தது. மேலும், இந்த விவகாரம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கேள்வித்தாள் லீக் ஆனதாகக் கூறப்பட்ட 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம் வகுப்பு கணிதவியல் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஆனால், மறுதேர்வு நடத்தப்படும் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என பலர் விமர்சித்து வருகின்றனர்.