தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்த தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க காவிரி உரிமை மீட்பு பயணம் இரண்டு குழுக்களாக மேற்கொள்ள இருக்கிறது. இன்று திருச்சி முக்கொம்பிலும், வருகிற 9-ந் தேதி அரியலூரிலும் இந்த பயணம் தொடங்கும். அதன்படி காவிரி உரிமை மீட்பு பயணம் திருச்சி முக்கொம்பில் இருந்து இன்று பிற்பகல் 4 மணிக்கு தொடங்கியது. அதனை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்க நிகழ்ச்சியாக முக்கொம்பில் கொடியேற்றப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.
இந்த நடைபயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க.வை சேர்ந்த 89 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றார்கள். அவர்களுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
ஜீயபுரம், கம்பரசம்பேட்டை, கலைஞர் அறிவாலயம், சிந்தாமணி அண்ணாசிலை, இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, மெயின் கார்டுகேட், காந்திமார்க்கெட், தஞ்சை ரோடு வழியாக பால்பண்ணை பைபாஸ்ரோட்டில் இருந்து சர்க்கார்பாளையம், முல்லைக்கொடி, வேங்கூர் வழியாக கல்லணை சென்றடைந்தனர்.
தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் நடைபெறும் இந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுகிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கையெழுத்துக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி கோரிக்கையை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழியில் அகண்ட காவிரி ஆறு தற்போது வறண்டு கிடப்பதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக பயணித்த இந்த குழு, 12-ந்தேதி கடலூரில் பயணத்தை நிறைவு செய்கிறது.
திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை 168 கி.மீ. தூரத்துக்கு இந்த நடைபயணம் நடைபெற உள்ளது. இந்த தூரத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 நாட்களில் நடக்க உள்ளனர். இதற்கிடையே 9-ந்தேதி அரியலூரில் இருந்து காவிரி மீட்பு பயணத்தை தொடங்கும் மற்றொரு குழுவினரும் 12-ந்தேதி கடலூர் சென்றடைகின்றனர். அங்கு மறுநாள் 13-ந்தேதி காலை பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் புறப்படும் தலைவர்கள் சென்னை கவர்னர் மாளிகைக்கு சென்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கவர்னரிடம் மனு அளிக்கின்றனர்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக தி.மு.க. தலைவர் கலைஞரை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று தொடங்க உள்ள காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்த விபரங்களை மு.க.ஸ்டாலின் கலைஞரிடம் விளக்கி கூறினார்.