சிதம்பரத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தற்போது உள்ள தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் சரியாகச் செயல்படவில்லை. செயற்குழுவை கூட்டி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலைவரின் செயல்பாடு சரி இல்லை எனப் பொதுச்செயலாளர், துணைத்லைவர், உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்தும் அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 9-ஆம் தேதி இணைய வழி மூலமாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 17 பேரில் 11 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதிதாகத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பது, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் நடைபெறும்வரை மாநில தலைவராக விஜய குருசாமி, மாநில பொதுச் செயலாளராகப் பாலாஜி, மாநில பொருளாளராகச் சுவாமிநாதன், மாநில துணை பொது செயலாளர் அனந்தராமன், மாநில துணைத் தலைவர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிறகு தேர்தல் நடத்தி புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்” என்றார்.
மேலும் பேசிய அவர், “தமிழக அரசு பொங்கலுக்கு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்குகிறது அதனை வரவேற்கிறோம். அதே நேரத்தில் 50 பொருட்கள் வழங்க வேண்டிய இடத்தில் 40 பொருட்கள் என வருகிறது. இதனை அரசு முறைப்படுத்த வேண்டும். பொங்கல் தொகுப்பில் தயார் செய்யும் பணியில் ஊழியர்களுடன் கூடுதலாகப் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ரூ 300 ஊதியம் வழங்க வேண்டும். எனவே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 12ஆம் தேதி அனைத்து டி.என்.சி.எஸ்.சி. குடோன்கள் எதிரே தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாகப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது” எனக் கூறினார்.