உத்தரப்பிரதேசத்தில் நடந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து லாரி மூலமாக உத்தரப்பிரதேசம் வழியாக தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்துள்ளனர். இதனிடையே லாரி இன்று இரவு 3.30 மணி அளவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அவுரியா மாவட்டம், மிஹாலி அருகே பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதியுள்ளது. இதில் அந்த லாரியில் பயணித்த தொழிலாளர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், "உத்தரப் பிரதேச அவுரியாவில் 24 ஏழை தொழிலாளர்கள் பலியாகியிருப்பது சொல்லொணா துயரத்தை ஏற்படுத்துகிறது. காயமடைந்தோர் குணமடைய என் பிரார்த்தனைகள். எல்லாம் தெரிந்திருந்தும், அனைத்தையும் பார்த்த பிறகும் இதயமற்றவர்களின் மவுனமும், இவர்களை ஆதரிப்பவர்களும் எதுவரை இந்த அலட்சியத்தை நியாயப்படுத்துவார்கள் என்பதையும் பார்ப்போம். இந்த விபத்துகள் மரணங்கள் அல்ல, கொலை" எனத் தெரிவித்துள்ளார்.