தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரானா நோய்த் தொற்று காரணமாக மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் வேலைக்கு வராத காரணத்தால் அங்கே பால் உற்பத்தி தடைபட்டு மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் பால் மட்டுமே அங்கே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் பாலானது சேலம், கோவை, மதுரை, விழுப்புரம், வேலூர் மாவட்ட பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடைகாலம் என்பதாலும், தொலைதூர மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பே உற்பத்தி செய்து, முறையான குளிர்நிலை பராமரிக்காமல் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுவதாலும் விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே ஆவின் பால் கெட்டுப் போகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆவின் பால் கெட்டுப் போகும் சூழல் நிலவிய போது தற்போது பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (12.05.2020) விநியோகம் செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தியான ஆவின் (ஆரஞ்சு கலர்) கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட பால், சேலம் மாவட்டத்தில் உற்பத்தியான ஆவின் (பச்சை) நிலைப்படுத்தப்பட்ட பால் காலையிலேயே கெட்டுப் போவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது.
இதனால் ஆவின் நிர்வாகத்தின் தவறு காரணமாக கெட்டுப் போன ஆவின் பாலினை வேறு வழியின்றி மாற்றித் தர வேண்டிய கட்டாயத்திற்குப் பால் முகவர்கள் தள்ளப்படுவதால் நாங்கள் எங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகிறது.
கடந்த ஒரு வார காலமாகவே இதே நிலை நீடித்து வருவதால் கெட்டுப் போகும் பாலிற்குப் பதிலாக புதிய பாலினை மாற்றித் தர வேண்டும் என ஆவின் நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தப் பால் முகவர்களுக்கும் பால் மாற்றித் தரப்படவில்லை.
எனவே மாதவரம் ஆவின் பால் பண்ணையில் நிலைமை சீரடைந்து முழுமையான உற்பத்தி தொடங்கும் வரை பொது வணிகத்திற்கான பால் விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அல்லது மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்படும் பாலினை தரமான குளிர் நிலையில் பராமரித்துச் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகம் செய்ய வேண்டும், கெட்டுப் போகும் பாலிற்குப் பதிலாக புதிய பாலினை உடனடியாக மாற்றித் தர உத்தரவிட வேண்டும் என ஆவின் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஆவின் நிர்வாகம் தொடர்ந்து பால் முகவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்குமானால் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் பால் முகவர்கள் அனைவரும் ஆவின் பால் விற்பனையை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையிலான மாற்று முன்னேற்பாடுகளையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.