![15 fishermen arrested; sinking barges; Fishermen decide to go on indefinite strike](http://image.nakkheeran.in/cdn/farfuture/2mf1JYVN6JTtCGac-rZVAc7Kz3SaCHbqEOy1VYEHIAE/1667730758/sites/default/files/inline-images/237_4.jpg)
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காலங்காலமாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். சில வருடங்களாகக் கைது நடவடிக்கை குறைவாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பும் 10க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை மீனவர்களைக் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 2000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். நேற்று இரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து மீனவர் நலச்சங்கத் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளையில் இருந்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமை அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.