1992 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமக பெருவிழாவில் நடந்த கோர சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் குளிக்கச் சென்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். பல நூறு ஆண்டுகளாக எந்த விபத்துமின்றி நடந்துவந்த மகாமகப் பெருவிழா ஜெயலலிதாவின் சுயநலம் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழகத்துக்குத் துக்க தினமாக மாறியது. இந்த கோர நிகழ்வுக்குக் காரணம் ஜெயலலிதாவின் ஆடம்பர குளியல் தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தாலும் அதை மூடி மறைக்கவும் பிரச்சனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் அரசு சார்பில் பல போலியான காரணங்கள் கூறப்பட்டதோடு இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதிலும் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய நக்கீரன் உண்மை நிலவரத்தை 07.03.1992 தேதியிட்ட இதழில் வெளியிட்டது.

The truth behind the Mahamaham incident

Advertisment

பக்தர்களைக் கொன்றது ஜெயலலிதாதான்:-

Advertisment

மறைக்கப்பட்ட உண்மைகள்

மகாமகத்தன்று ஏற்பட்ட சாவுகளைப் பற்றி அரசு தரப்பில் மூன்று விதமான விளக்கங்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டன.

1.பாங்கூர் தர்மசாலா கிரில்கேட் பெயர்ந்து விழுந்ததால் சாவுகள் ஏற்பட்டது.

2.விஸ்வ ஹிந்து பரிஷத் உணவு பொட்டலங்களைத் தூக்கி பக்தர்களின் மீது வீசியதால் ஏற்பட்ட நெரிசல்தான் சாவுக்குக் காரணம்.

3.சுவர் இடிந்து விழுந்ததால் உண்டான பலிகள்.

இப்படி மாறி மாறி மந்திரிகளை விட்டும் அதிகாரிகளை விட்டும் ‘ஜெ’ அரசு பித்தலாட்டமான பொய்களை கூச்ச்சமின்றி சொல்லி வருகிறது.

ஆனால், உண்மையில் நடந்தது என்ன?

பல தரப்பினரிடமும் விசாரித்த வகையிலும் சம்பவத்தன்று நாமும் நேரில் கண்ணால் பார்த்தவற்றையும் இங்கு பார்ப்போம்.

குளத்திலும் நிற்க விடாமல், கரையைச் சுற்றி வேறு பாதையிலும் செல்ல விடாமல் பிள்ளை குட்டிகளோடு ‘ஜெ’ போகும் வரை மூச்சுத் திணற நின்ற மக்களை காவல்துறை காவல் காத்தது. ஐ.ஜி.தேவாரமோ வயர்லெஸ்சில் அடிக்கடி ‘‘மக்கள் ‘ஜெ’வை நெருங்க விடாமல் கவனமாக இருங்கள்’’ என காவல் துறையை உசுப்பி விட்டார். பாங்கூர் தர்மசாலா கம்பிக் கேட்டின் மீது ஏகப்பட்ட மக்கள் தொங்கிக் கொண்டு கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.

நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் தங்களின் தாலியைக் காப்பாற்றிக்கொள்ள கணவனோடு போராடிக் கொண்டிருந்த வேளையில் குளித்து முடித்த ‘ஜெ’ வுக்கு அழகு.திருநாவுக்கரசு 44 பவுன்கள் தங்கத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு தங்கத்தைப் பெற்றுக் கொண்ட தங்கத் தலைவி கிளம்பினார்.

அவ்வளவுதான்!

மக்கள் இப்போதாவது குளத்தில் குளிக்கலாமே என ஆசையோடு அசைய ஆரம்பிக்க... ஊஹூம்! இடம் இருந்தால்தானே அசைய முடியும்? ஒருவருக்கொருவர் பிதுக்கிக் கொண்டு குளத்தில் இறங்க முயற்சிக்க போலீசார் பிடித்துத் தள்ள தர்மசாலா கேட் சரிய....கூட்டம் நாலாபுறமும் ஓட, யார் யாரை மிதிக்கிறார்கள் எனத் தெரியாமல் சிதறி ஓட ஆரம்பித்த மக்களை காவலர்களின் தடி பதம் பார்த்தது. குளத்தின் உள்ளே இருந்த மக்களை கரையின் மேலே இருந்த மக்கள் நசுக்க, பலர் மூச்சுத் திணறி தண்ணீரிலேயே சாய்ந்தனர். கரையிலும் மிதிபட்டு பல பக்தர்கள் செத்தனர். இது தெரியாமல் பிணத்தின் மேலேயே மக்கள் ஓடிக் கொண்டிருந்த சோக சம்பவங்களும் நடைபெற ஆரம்பித்தன.

காயமடைந்தவர்கள் சிலரின் ‘அய்யோ!...அம்மா!’ என்ற முனகல் சத்தம் கேட்கவே போலீசாரின் கவனம் தரையை நோக்கியது. அப்போதுதான் அடுக்கடுக்கான பிணங்கள் விழிகள் பிதுங்கிக் கிடப்பதைப் பார்த்தனர். இதற்கிடையில் சிலர் அரசு மருத்துவமனை சென்றால் போஸ்ட் மார்ட்டம் செய்து பிணத்தை கால தாமதமாக தருவார்களே என அஞ்சி தங்கள் உறவினர்களது வீடுகளுக்கு தூக்கிச் சென்று விட்டனர். இப்படிப் பார்க்கும் போது உயிர்ப்பலிகள் நிச்சயம் பல நூறுகள் ஆகியிருக்கும். உண்மை நிலைமை இப்படியிருக்க அரசு பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணம் குளத்தின் ஒரு பகுதி முழுவதையும் ‘ஜெ’வுக்காக ஒதுக்கியது. மக்களை வேறு பாதையில் செல்ல விடாமல் காவல்துறை நெரிசலை அதிகப்படுத்தியது. வந்தோம் குளித்தோம் என்றில்லாமல் 45 நிமிடங்கள் குளத்திலேயே ஜெயலலிதா ஊறியதால் காவல்துறை ‘ஜெ’வுக்காக காவல் காக்க நேர்ந்ததும், மக்கள் குளித்து விட்டு திரும்ப முடியாமல் காத்திருப்பதற்கு காரணமாகியது. ‘ஜெ’ குளிப்பதற்கு அடையாளமாக தேவாரம் துப்பாக்கியால் இரண்டு முறை வானத்தை நோக்கி சுட்டார். இதைப் புரிந்துகொள்ளாத மக்கள் பதட்டமடைந்து சிதறி ஓடினர். இதுவும் குழப்பத்துக்கு ஒரு காரணம்.

அனைத்துக் குழப்பங்களையும் வீடியோ எடுத்த லோக்கல் வீடியோகிராபரை மிரட்டி கேசட்டுகளை காவல் துறை பிடுங்கிக் கொண்டது. மேலும் மகாமக குளத்தின் வடக்கு கரையில் உள்ள வீடொன்று இடிந்ததாகவும்அரசு சொல்கிறது. அந்த வீட்டின் உரிமையாளரை போலீஸ் மிரட்டி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளது. போலீசாரின் மிரட்டலுக்குப் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உண்மைகளைச் சொல்ல முடியாமல் அவர் தலைமறைவாகி விட்டார். இவ்வளவு கூத்துகளுக்கும் மத்தியில் மகாமகத்துக்கு முதல்நாளே ‘ஜெ’ படம் போட்ட பிளாஸ்டிக் பையில் சாதம் அடைக்கப்பட்டு மக்கள் மீது தூக்கி வீசப்பட்டது.

நம்மைப் பொறுத்தவரை இந்தக் கொடிய சாவுகளுக்குக் காரணம் ‘ஜெ’ குளிக்க வந்ததுதான். இதை மூடி மறைப்பதால் ‘‘தாலி இழந்த பெண்களையும் குடம் உடைத்த குடும்பங்களையும்’’ எவராலும் திருப்திப்படுத்த முடியாது. விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சுவாமிநாதன் நம்மிடம், ‘‘சார் அந்த அம்மா வராம இருந்திருந்தா இந்தச் சாவுகளே ஏற்பட்டு இருக்காது. மூன்று நாட்களுக்கு முன்பே குளிக்க விட்டிருந்தா கூட்டம் குறைந்திருக்கும். ஒரேநாளில்அவ்வளவு கூட்டமும் குளித்ததால்தான் இந்த விபரீதம்’’ என்றார். மோகன்ராம். விஸ்வ ஹிந்து பரிஷத், ‘‘நாங்கள் அம்மனை தீர்த்தவாரிக்கு எடுத்துச் சென்றோம். அதை காவல்துறை அதிகாரிகள் தடுத்தனர். ஜெயலலிதாவை விட அம்மன் என்ன மோசமானவரா?’’ என்றார்.

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நம்மிடம், ‘‘பத்து லட்சம் பேருக்கு உணவுன்னு விளம்பரப்படுத்திட்டு இரண்டு லட்சம் பேருக்கு கூட சாப்பாடு போடவில்லை. இந்த இலவச உணவுக்காக அரிசிகேட்டு அதிகாரிகளை அழகு. திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார். ‘ஜெ’யின் தனிப்பட்ட அன்னதானத்துக்கு அரசு கிடங்கில் இருந்து அரிசி தந்தது சட்டப்படி தவறு’’என்றார்.

இறுதியாக ஒன்று! கர்நாடக தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் கண்டறிய ஓர் உச்ச நீதி மன்ற நீதிபதியைக் கொண்டுதான் விசாரிக்க வேண்டும் என்று ‘ஜெ’ கூறுகிறார். ஆனால், அவரே தனது கோஷ்டியுடன் கலந்துகொண்ட மகாமகத்தில் ஏற்பட்ட பேரிழப்பைக் கண்டறிய நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. மாறாக, அரசின் சுட்டுவிரல் அசைவுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிற ஒரு சாதாரண நிர்வாக அலுவலரைக் கொண்டு விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். பெயரைப் பார்த்தால் நீதிபதி விசாரணை என்பது போல தோன்றும். ஆனால், உண்மையில் இது ஒரு அதிகாரியின் விசாரணைதான்.

மகாமக விழாவில் ஏற்பட்ட சாவுகள்பற்றியும் இழப்புகளைப் பற்றியும் அதற்குக் காரணமான ஜெயலலிதாவைப் பற்றியும் இந்தச் சுண்டைக்காய் அதிகாரி எப்படி விசாரணை நடத்தி உண்மைகளை கூற முடியும்? பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த ‘ஜெ’ உண்மையான நீதி விசாரணையை நடத்த வேண்டும். உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். இல்லையேல் உயிரிழந்த குடும்பங்களின் ஒப்பாரி ஜெயலலிதாவை சும்மா விடாது. இது வரலாறு திருப்பித் தரப்போகும் உண்மை.

சாவிலும் அரசு மோசடி!

மகாமகக் குளியலுக்கு ஜெ சென்றதால்தான் இத்தனை மரணங்கள் என்று பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும், இல்லை இல்லை ஜெயலலிதா குளியலுக்கும் பக்தர்கள் மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று தமிழக அரசும் மாறி மாறி வாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘ஜெ’ அரசு திரும்பத்திரும்பச் சொல்வதுபோல உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48 தானா? என்ற குழப்பம் யாருக்கும் தீர்ந்த பாடில்லை.

மகாமகச் சாவு நிகழ்ந்தவுடன் தினசரி பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 48 தான் என்று அடித்துச் சொன்னார்கள் அதிகாரிகள். அதோடு 39 பேர் அடையாளம் தெரிந்தது என்றும் மீதி அடையாளம்காட்டுவதற்கென்று வைக்கப்பட்டு உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர். 2௦ ஆம் தேதி அந்த லிஸ்ட் பத்திரிகைகளில் வந்தபோதே நமக்கு பெரும் சந்தேகம். காரணம் சில பத்திரிகைகளில் வந்த பெயர் வேறு சில பத்திரிகைகளில்

இல்லை. மாற்றி மாற்றி பிரசுரிக்கப்பட்டிருந்தன.

இதோ!.....இன்னும் வெளிவராத மர்மங்கள்!

திருச்சி டோல்கேட் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஐம்பத்தாறு வயதான முருகவேல். நாகர்கோவிலைச் சேர்ந்த ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் பணி புரியும் குமரேச பிள்ளை மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி ஆகியோரும் இதில் இறந்துள்ளனர். இரண்டு சரஸ்வதிகள் இறந்திருக்க பல்லாவரம் சரஸ்வதியைச் சொல்லாமல் திருவிடை மருதூர் சரஸ்வதியை மட்டும் சொல்லப்பட்டுள்ளது. தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தம்பிள்ளையின் மனைவி வைரம், சேலம் உண்ணாமலைஅம்மாள், சென்னை அயன்பாக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லட்சுமி அம்மாள், தருமபுரி குமாரசாமி பேட்டையைச் சேர்ந்த குப்புசாமிக் கோனார் மனைவி முத்தம்மாள், சேலத்தைச் சேர்ந்த பாலாம்பாள் ஆகியோரும் பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிகிறது. திருவையாறைச் சேர்ந்த துணை தாசில்தார் வெங்கட்ராமன் தன் குடும்பத்தை தேடிச் சென்றபோது மரணமடைந்துள்ளார். இதே போல் பெங்களூர் லட்சுமி தேவம்மாளும் மரணமடைந்துள்ளார்.

பத்திரிகைகளில் பெயர் மாற்றி மாற்றிக் கொடுத்து அதிகாரிகள் தில்லுமுல்லு செய்தாலும் நம் விசாரணையில் ‘பலர் இறந்திருப்பதும் அரசு அதை மறைத்திருப்பதும்’ தெரிய வருகிறது. இது மட்டுமல்லாது பலர் காணாமல் போனதால் உறவினர்கள் பதறியபடியே கும்பகோணத்தில் கண்கலங்கித் தேடிக் கொண்டிருக்கின்றனர். கடலூரைச் சேர்ந்த எழுபது வயது காசாம்பு, ஈரோடு சித்தோடைச் சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் பலர் மகாமகம் சென்றுவிட்டு இன்னும் வீடு திரும்பாத சோகம். இத்துடன் வடநாட்டைச் சேர்ந்தவர்களையும், அரசுக்குத் தெரிவிக்காமலேயே அவரவர்கள் ஊருக்கு தங்கள் உறவினர்கள் பிணங்களைக் கொண்டு சென்றவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை நிச்சயம் நூறுக்கு மேல்தான்.