,.

உ.பி-யில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி மிகப் பிரபலமாகப் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர், “தமிழ் இந்தியாவில் நீண்டகாலம் பேசி வருகின்ற மொழி, அனைவரும் தமிழைக் கற்க முயல வேண்டும்.எதிர்காலத்தில் தமிழை வளர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். திருக்குறளை 13 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம்” என்றார்.பிரதமரின் இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக தமிழக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்ச்சியை அரசியல் செய்ய பாஜக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி பிரதமர் தலைமையில் நடைபெற்றது. தமிழை வளர்க்க எங்களின் முயற்சி இது என்ற மாநில பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

Advertisment

இவர்கள் யாரை வைத்து தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தமிழறிஞர்களுக்கு அழைப்பே இல்லாமல் இவர்கள் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றால் இதை எங்கே போய் சொல்வது என்று தெரியவில்லை. தமிழக அரசுக்கே கூறாமல் விழா எடுப்பதை என்னவென்று சொல்வது. அதுவும் ஒரு மாதம் விழா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதில் கருத்தரங்கம் இருக்கிறதா இல்லை கவியரங்கமாவது இருக்கிறதா? மாணவர்களுக்கான போட்டி எதாவது இருக்கிறதா? உலகளாவிய தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பாவது இருக்கிறதா? இது எதுவுமே இல்லாமல் என்ன தமிழ்ச் சங்கமம் நடத்துகிறீர்கள்.

மோடிக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம். இந்திய அரசியல் அமைப்பில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக்கத் தயங்குகின்ற அவர் தமிழுக்கு விழா எடுப்பது என்பது யாரை ஏமாற்ற என்று முதலில் தெரிவிக்க வேண்டும். எங்களை ஒருபோதும் ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள்;அது உங்கள் யாராலும் முடியாது. 2024ம் ஆண்டு தேர்தல் வரை தமிழுக்கு மோடி விழா எடுத்துக்கொண்டுதான் இருப்பார். இந்தியாவில் உள்ள 130 கோடி பேரும் தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்றுஎதற்கு அவர் கூறுகிறார். அவ்வளவு வீக்காவா தமிழ் இருக்கு. தமிழ்நாட்டில் உள்ள மக்கள்தமிழைப் பாதுகாத்தால் போதுமானது. இவர்கள் எதற்காகத் துணை சேர்கிறார்கள் என்று நமக்குத் தெரியாதா என்ன. நாங்கள் உ.பி மாநிலத்தைப் போல் இவர்கள் வித்தைகளைக் கண்ணைக் கட்டிக்கொண்டு நம்பமாட்டோம்.ஆகையால் இவர்கள் விரைவில் அம்பலப்படப் போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Advertisment

மதுரை எம்பி கேள்வி கேட்டால் ஹிந்தியில் பதில் அளிக்கிறார்கள், கனிமொழியிடம் இந்தி தெரியாதா என்று கேட்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் அம்மா இறந்ததற்கு அமித்ஷா இரங்கல் கடிதத்தை இந்தியில் எழுதி அனுப்புகிறார். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருக்கின்ற அவரிடம் இந்தியில் கடிதம் எழுதினால் அவர் எப்படிப் படிப்பார். அவருக்குத் தமிழே சரியாகப் படிக்கத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழை வளர்க்கப் போகிறார்களா? உங்களுக்குத் தமிழில் பேசினாலே பிடிக்காது நீங்கள் தமிழை வளர்க்கப் பாடுபடப் போகிறீர்களா? மற்ற மொழிகளுக்கு வழங்கும் நிதியைத் தமிழ் மொழிக்கு வழங்குகிறீர்களா? எங்களை ஏமாற்ற நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.