Skip to main content

மற்றொரு காமெடியனை தூக்கிவிட வேண்டும் என்று நினைக்கு மகா கலைஞன் - விவேக் குறித்து யோகிபாபு!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

hjk

 

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (17.04.2021) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, அவருடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிந்துகொண்டார். அதில், "என் நண்பர், சின்ன கலைவாணர் என்று பெருமையோடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மறைந்துவிட்டார் என்று சொல்வதா இல்லை, சிரிப்பு செத்துவிட்டது என்று சொல்வதா, தமிழ்த் திரையின் வழியே பகுத்தறிவைப் பரப்பிய ஒரு சீர்திருத்தக் கலைஞன் மறைந்துவிட்டார் என்று சொல்வதா? என்னை பொறுத்தவரையில் ஒரு சகோதரனை இழந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் கவிதைகளின் கொள்கை பரப்பு செயலாளரை நான் இழந்துவிட்டேன். தமிழ்த் திரையுலகம் நீண்ட காலமாக சேமித்து வைத்திருந்த செல்வத்தை இழந்துவிட்டது. நகைச்சுவை நடிகர்கள் வருவார்கள், இருக்கிறார்கள். அவர்களில் நடிகர் விவேக் தனி தடம் பதித்தவர். நகைச்சுவையில் கொள்கை இருக்க வேண்டும், சீர்திருத்தம் இருக்க வேண்டும், பகுத்தறிவு இருக்க வேண்டும் என்று தன் கலையில் தன்னை செதுக்கிக்கொண்டவர். இன்று அவர் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவரின் கலை சேவை மட்டும் அல்ல, அதை தாண்டி அவரின் சமூக அக்கறை.


ஒரு கலைஞனுக்குத் தேவையான சமூக அக்கறையை கலைக்கு வெளியிலும் அவர் பின்பற்றினார் என்பதுதான் நடிகரின் விவேக்கின் தனிச்சிறப்பு. ரசிகர்கள் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறார்கள், கலையுலகம் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறது, மனிதர்கள் மட்டுமா இன்று துக்கப்படுகிறார்கள். இல்லை, விவேக் நட்ட மரங்களும், செடிகளும், கன்றுகளும் இன்றைக்கு அவரின் இழப்புக்காக கண்ணீர் சிந்துகின்றன. எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. என்னை, என்னுடைய எழுத்தை திரைக்குப் பின்னால் இருந்து கொண்டாடியவர்களில் பெரும் பங்குகொண்டவர் நடிகர் விவேக். அவரும் நானும் ஒரே வகுப்பில் யோகா பழகிக்கொண்டோம். ஓராண்டாக எனக்குப் பக்கத்தில் இருந்து அவர் யோகா கற்றுக்கொண்டார், பழகினார். இப்போது நான் தனியாக யோகா செய்கிறேன். என்னுடைய பக்கத்து இடம் காலியாகிவிட்டது. நண்பர் விவேக் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 59 வயது என்பது இளமை தணிந்த வயது. இனிமேல்தான் ஒருவன் சேவை செய்ய வேண்டிய வயது. பக்குவப்பட்ட வயது. சமூகத்தை அறிகின்ற வயது. இந்த வயதில் மரணம் அவரை பறித்துக்கொண்டதில் எங்களுக்கு சம்மதம் இல்லை. மரணமே உனக்கு சிரிக்கத் தெரியாது, அதனால்தான் சிரிப்பைத் திருடிவிட்டாய்" என்றார். 

 

விவேக் தொடர்பாக நடிகர் யோகிபாபு பேசியதாவது, "விவேக் அவர்களின் மரணம் அதிர்ச்சியான ஒரு சம்பவம். அவருடன் நான் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்தேன். ஆனால் நிறைய அறிவுரை வழங்குவார். அண்ணன் தம்பி மாதிரி பழகுவார். கடைசியாக ‘அரண்மனை’ மற்றும் ‘பிகில்’ படங்களில் அவருடன் இணைந்து நடித்தேன். நான் அவர்கிட்ட பலமுறை சொல்லியிருக்கிறேன், நாம் இணைந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று. ஆனால் தற்போது அது முடியாமல் போய்விட்டது. நான் தமிழ் சினிமாவில் பார்த்த வரைக்கும் ஒரு காமெடி நடிகரை மற்றொரு காமெடி நடிகர் தூக்கிவிடுகிறார் என்றால், அவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். என்னிடம் கூட நிறைய மரம் நட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்றார். 

 

 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.