
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு பிறகு பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் 1952ஆம் ஆண்டு பிறந்த இம்ரான்கான், இங்கிலாந்தின் மிக பிரபலமான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் பட்டம் பயின்றவர். கல்வியில் எப்படியோ அதே ஈடுபாட்டுடன் விளையாட்டின் மீது ஆர்வம்கொண்டவர் என்பதால் அதுவே அவரை உலகப்புகழ் வாய்ந்த கிரிக்கெட் வீரராக மாற்றியது. 1970களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட இம்ரான்கானுக்கு தேசிய அளவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அவரின் சீரிய திறமை 1981 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியையும் பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டுஉலகக் கோப்பையை வென்று வரலாற்றில் தடம் பதித்தார் இம்ரான்.

விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற இம்ரான்கானின் அடுத்த இலக்கு மக்கள் சேவையாகவே இருந்தது. அவரது தாயின் பெயரில் அவர் உருவாக்கிய புற்றுநோய் மருத்துவமனை மக்களிடையே அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி மேலும் ஒரு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தனது அடுத்த கண்ணை அரசியல் மேல் வைத்த இம்ரான்கான், 1996 ஆம் ஆண்டு 'தஹ்ரீக் இ இன்சாப்' என்ற கட்சியைத் தொடங்கி அரசியல்வாதியாகவும் உருவெடுத்தார். 2002 ஆம் ஆண்டும் அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் இம்ரான் கானின் அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது. ஒருகட்டத்தில் பாகிஸ்தானின் அரசியலில் தவிர்க்கவே முடியாத சக்தியாக மாறி இம்ரான்கான், 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமர் ஆனார்.
சிறு கட்சிகளின் உதவியுடன் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் அதே இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து இறக்க வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படையில் கலைக்கப்பட்ட ஆட்சி என்ற பெயரை அவருக்குபெற்றுக் கொடுத்துள்ளது தற்போதைய சூழ்நிலை. எம்.கியூ.எம் கட்சியின் ஆதரவு விலக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான் ஆட்சி அதிகாரப் பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை இம்ரான்கான் இன்று அனுப்புவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதன் சமிக்கையாக பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கப்படும்அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்திலிருந்து இம்ரான்கான் வெளியேறியுள்ளார். தற்பொழுது சொந்த வீட்டில் தங்கி இருக்கும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)