Skip to main content

கண்டுகொள்ளப்படுமா வெளிநாடுவாழ் தமிழர்களின் கண்ணீர்க் குரல்?

Published on 03/10/2020 | Edited on 04/10/2020

 

Will- the tearful- voice -of Tamils- ​​living- abroad

 

கரோனா பேரிடரால், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, தாயகம் மீட்டுக் கொண்டுவர, இந்திய அரசு 'வந்தே பாரத்' என்னும் திட்டத்தை 'மே-6' ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங், நேற்று முன்தினம் (02.10.2020) வெளியிட்ட அறிக்கையில் இதுவரை மொத்தம் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஜுலை மாதத்தில், இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சுந்தரவடிவேல், அரசின் விதிமுறைப்படி தனியார் விடுதியில் தங்கியவர், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த மர்ம மரணத்தை 'நக்கீரன்' அம்பலப்படுத்தியது. அதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. இந்தக் கோர விபத்தில் 18 பேர் பலியாகினர். இத்திட்டத்தில், இது போன்ற பல குளறுபடிகள் இருப்பினும், பணமும் வேலையும் இல்லாமல் தவிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பிடவே முயற்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், "வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்கள் அங்கேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்படி பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தவர்கள், அதற்கான சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்." என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை, இந்தியாவில் தமிழக அரசு மட்டுமே அறிவித்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதனால், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த அறிவிப்பால் பாதிகப்பட்டுள்ளதாக அங்கு வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து, ஓமன் நாட்டில் உள்ள தமிழகத் தொழிலாளர் அழகேசன் கூறுகையில், "நான் பாலைவனப் பகுதியில் பணியாற்றி வருகிறேன். நகரத்திற்கு வருவது சிரமம். அதனால், ஆன்லைனில் இந்திய அரசின், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், எனது நிறுவன முதலாளி திருச்சிக்கு டிக்கெட் பதிவு செய்து கொடுத்தார். அதன் அடிப்படையில், கடந்த 30- ஆம் தேதி நான் உட்பட 15 தமிழர்கள், மஸ்கட் விமான நிலையத்தில் போர்டிங்க்காக காத்திருந்தோம். அப்போது விமான நிலைய அதிகாரிகள் எங்களிடம் கரோனா சான்றிதழ் கேட்டனர். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், எங்களுக்கு இதைப் பற்றி எதுவும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. எனினும், எங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நிலைய அதிகாரிகள் திருச்சி தாசில்தாரிடம் பேசினர். அப்போது எங்களுடன் இருந்த பெண் பயணி ஒருவரிடம், கரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தது. அதனால், அவர் மட்டுமே திருச்சிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

 

Ad

 

ஆனால், கரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்களை அனுப்ப வேண்டாம் என அவர் திட்டவட்டமாகக் கூறியதை அடுத்து எங்கள் பயணம் தடைபட்டது. நாங்கள் அனைவரும் எங்கள் பணியிடங்களுக்கே மீண்டும் திரும்பினோம். உணவுக்கே வழியின்றி இங்கு வாழ்ந்து வரும் எங்களால், எப்படி 15 ஆயிரம் (இந்திய மதிப்பில்) மதிப்புள்ள கரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும். எங்களுக்கு, வேலை இல்லை, வேலை இருப்போருக்கு பல மாதம் ஊதியம் நிலுவையில் உள்ளது. எங்கள் பயணக் கட்டணத்தையே எங்கள் நிறுவன முதாலாளி தான் செலுத்தினார். எங்களை எப்படியாவது தமிழகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். அங்கு, அரசு மருத்துவமனை உள்ளது. ஆகையால், எத்தனை நாள் வேண்டுமானாலும் நாங்கள் குவாரண்டைன் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

 

தமிழக அரசு இந்தப் புதிய முறையைக் கைவிட்டு, பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்பதுதான் வெளிநாடுவாழ் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. இவர்களின் கண்ணீர்க் குரலுக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா?

 

 

 

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை துவக்கிவைத்த பிரதமர் மோடி

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

PM Modi inaugurated the Nellai-Chennai Vande Bharat train

 

இந்தியாவில் 11 மாநிலங்களில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி இன்று (24ம் தேதி) தொடங்கி வைத்தார். 

 

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. 

 

இந்நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

 

அதன்படி திருநெல்வேலி - சென்னை, உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை, பாட்னா - ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா - பூரி, ராஞ்சி - ஹவுரா என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

 

இதில், சென்னை - நெல்லை இடையான ரயில், நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அதேபோல், சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், செவ்வாய்க்கிழமை நீங்கலாக வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.