Skip to main content

2016 போலவே பண நாயகம் வெற்றி பெறுமா? 

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

நடைபெற இருக்கும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப் போவது பணம்தான் என்கிற குரல் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் பாயும் பணம் 5 முதல் 8 சதவிகித வாக்குகளை புரட்டிப்போடும் என கணிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த தேர்தல் கமிஷன் வருமான வரித்துறையை களமிறக்கியுள்ளது. அதன் ரெய்டுகள் எப்படி இருக்கிறது என வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

 

anbunathan



"முதன்முதலாக வருமான வரித்துறையினரும் தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினரும் நகை கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் தங்கத்தையும், ஏ.டி.எம். மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் பணத்தையும்தான் குறிவைத்து பிடித்துக் கொண்டிருந்தார்கள். இந்த முறை தொடர்ந்து ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்பிக் கொண்டு செல்லும் பாதுகாப்புமிக்க வேன்கள் அதிக அளவில் கோடிக்கணக்கான ரூபாயுடன் பிடிபட்டன. அந்தப் பணத்துக்கான பேங்க் ஆவணங்கள் இல்லை.இந்த நிலையில்தான், ஏ.டி.எம். வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம் போய் சேருகிறது என நக்கீரன் அட்டைப் பட கட்டுரையாக செய்தி வெளியிட்டது. 

 

duraimurugan



அதன்பிறகு ஒரு ஏ.டி.எம். வாகனம் கூட ஆவணமில்லாமல் சென்றதாக அதிகாரிகள் கையில் சிக்கவில்லை. இதில் இரண்டு பக்கம் இருக்கிறது. ஒரு பக்கம் ஏ.டி.எம். வாகனங்களில் பணம் கொண்டு போவதை அரசியல் கட்சிகள் நிறுத்திவிட்டன. இன்னொரு பக்கம் அப்படி ஏ.டி.எம். வாகனங்களில் வரும் பணத்தை பிடிக்காதீர்கள் என உத்தரவு வந்திருக்கலாம்' என்கிறார்கள் அதிகாரிகள்.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி கோடி கோடியாக பணம் பிடித்த இடம்... அ.தி.மு.க. அமைச்சரான வேலுமணிக்கு மிக நெருக்கமான, மாநகராட்சி ஒப்பந்ததாரரான நடராஜன் சபேசனின் வீடுதான். கீழ்க்கட் டளை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தொடர்ந்து வருமானவரித்துறை நடத்திய ரெய்டுகளில் சுமார் 16 கோடி ரூபாய் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது. அது தவிர சுமார் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை, தமிழகம் முழுக்க எல்.இ.டி. மின் விளக்குகளை சப்ளை செய்து வந்த சபேசன் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு கொடுத்ததை சுட்டிக் காட்டும் ஆவணங்களையும் வருமான வரித்துறை கண்டுபிடித்தது. 

 

velumani



தேர்தல் நேரத்தில் பரிமாறப்பட்ட இந்த பணம் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திரட்டிய பணம் என வருமான வரித்துறை தனது ஆவணங்களில் பதிவு செய்தது. இப்படிப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டால் போலீஸ் மூலம் வழக்குப் பதிவு செய்யப்படும். அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்யும். இந்த நடைமுறை சபேசன் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. வருமான வரித்துறை ரெய்டு என்றதும் ஒரு தனியார் மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார் சபேசன். 
 

velumani



அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவரை அழைத்து "யாருடையது இந்தப் பணம்? அமைச்சர் வேலு மணிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? தேர்தல் நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் உங்களிடமிருந்து அமைச்சருக்கு போனதா?' என ஒரு கேள்வி கூட வருமான வரித்துறை கேட்கவில்லை என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். 

தமிழக அரசின் பொதுப்பணித்துறையை கவனிக்கும் முதல்வருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் பெரியசாமி. ஜெ. உயிருடன் இருந்த போது எம்.ஜி.ஆர். சமாதியில் பறக்கும் பெண் குதிரை சிலையை அமைத்தார் பெரியசாமி. இவர் பி.எஸ்.கே. என்கிற கட்டுமான  நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம்தான் சென்னை சென்ட்ரல் ஜெயில் இருந்த வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ விடுதி களை கட்டியது. விழுப்புரத்தில் சட்ட கல்லூரி, புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி, ஊட்டியில் கலைக் கல்லூரி என பல கட்டிடங்களை கட்டி யது. இந்த நிறுவனத்தின்மீது சமீபத் தில் வருமான வரித்துறை பாய்கிறது. வருமான வரித்துறையின் தென்மண் டல புலனாய்வு தலைவரான முரளி குமார் தலைமையில் பாய்ந்த வருமான வரித்துறை சுமார் 16 கோடி ரூபாய் அளவிற்கான கணக்கில் காட்டப்படாத பணத்தை கைப்பற்றியது. தமிழக தேர்தல் கமிஷனுக்கு இதுபற்றி தகவல் தந்தது. பி.எஸ்.கே. கன்ஸ்ட் ரக்ஷன் மீது வழக்குகள் பாய்ந்தன.

 

sekar reddy ops



அதே அளவு பணமான 16 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப் பட்ட சபேசனிடம் இன்று வரை விசாரணை கூட இல்லை. பெரியசாமி மீது மட்டும் உடனடியாக விசாரணை. "ஏன் இந்த பாரபட்சம்' என வருமான வரித்துறை அதிகாரி களை கேட்டோம். அவர்கள் ஒரு ப்ளாஷ்பேக் கதையை சொன்னார்கள். பெரியசாமிக்கு ஒரு பார்ட்னர் இருந் தார். அவர் பெயர் சுப்ரமணியன். இருவரும் சேர்ந்துதான் தொழில் நடத்தி வந்தார்கள். இதில் சுப்ரமணி யன் சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்தார். இப்பொழுது டி.டி.வி. தின கரனுடன் இருக்கும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மூலமாக சுப்ரமணியத்துக்கு சசிகலா தரப்புடன் ஏற்பட்ட நெருக்கத்தை பெரியசாமியும் தொடர்ந்தார். 

சசிகலாதான் பெரியசாமியை எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிமுகப்படுத்தி விட்டார். சமீபத்தில் சுப்ரமணியன் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பெரியசாமி டி.டி.வி. தினகரனை ஆதரிக்கிறார் என்கிற சந்தேகம் எடப்பாடிக்கு வந்தது. எடப்பாடி, பெரியசாமியை எச்சரித்தார். அவர் "நான் டி.டி.வி.யை ஆதரிக்கவில்லை' என எடப்பாடியிடம் விளக்கமும் கொடுத்தார். ஆனால் அவரிடம் இருந்து அ.தி.மு.க.விற்கு வர வேண்டிய தொகை சரியாக வரவில்லை. இதையடுத்து எடப்பாடி தனது டெல்லி எஜமானர்களிடம் தெரிவித்ததன் விளைவுதான், பி.எஸ்.கே. நிறுவனத்தில் நடந்த ரெய்டு என்கிறது வருமான வரித்துறை வட்டாரம்.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி 11.53 கோடி ரூபாய் பிடித்ததாக வருமான வரித்துறையும் காவல்துறை யும் வழக்கு போட்டிருந்தது. இந்த வழக்குகளுக்கும் சபேசன் வீட்டில் நடத்திய ரெய்டுக்கும் தொடர்பு இருக்கிறது. அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சபேசன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி, 16 கோடி ரூபாய் பிடித்தது. உடனே தி.மு.க. வேட்பாளர்கள் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் என எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் வருமான வரித்துறை அதிகாரியான முரளிகுமாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

உடனே முரளிகுமார் துரைமுருகன் மீது பாய்ந்தார். துரைமுருகனை தொடர்ந்து கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி அலுவலகங்களில் ரெய்டு என முரளிகுமார் பாய்ந்து விளையாடி வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அ.தி.மு.க.வினர் முதல் கட்டமாக ஓட்டுக்கு 500 ரூபாய் என தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறார்கள். அ.ம. மு.க.வினரும் பண விநியோகத்தில் ஈடுபடு கிறார்கள் என திருச்சி, மத்திய சென்னை பகுதிகளிலிருந்து தகவல்கள் வந்து கொண்டி ருக்கின்றன. "அ.தி.மு.க. 14, 15 தேதிகளில் பண விநியோகம்' என நக்கீரனில் குறிப்பிட்டிருந்த படியே கரன்சி சப்ளை நடந்திருக்கிறது. பெருமள வில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பண விநியோகத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் இருந்துள்ளது.

இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, ஜெ. உயிருடன் இருந்து சந்தித்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் 641.25 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பணமாக கொடுத்தார். அதில் அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் 227.25 கோடி, நத்தம் விசுவநாதன் 197 கோடி, ஓ.பன்னீர் செல்வம் 217 கோடி ஜெ.விடம் கொடுத்தனர். அதை கரூர் அன்புநாதன் மூலம் ஆம்புலன்ஸ்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு ஜெ. அனுப்பி வைத்தார். அதற்காக ஜெ. சென்ற கான்வாயிலேயே கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்ஸ்களில் பணக்கட்டுகள் கொண்டு செல்லப்படுவதாக அவர் காஞ்சிபுரம் மாவட்டத் தில் பிரச்சாரம் செய்த போதே புகார்கள் சொல்லப்பட்டன. வருமான வரித்துறை மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் என்ற கம்பெனியில் நடத்திய ரெய்டில் அங்கு வேலை பார்த்த சண்முக சுந்தரம் என்கிற பணியாளரிடம் சரத்குமார் போட்டியிட்ட திருச்செந்தூர் தொகுதியில் எப்படி பண விநியோகம் நடந்தது என்பதற்கு ஆதாரமான வாக்காளர் பட்டியலையே கைப்பற்றியது. 

அதே 2016 ஏப்ரல் மாதம் ஜெ.வுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னரில் பணம் இருப்பதாக வைகோ புகார் சொல்ல... அந்த கண்டெய்னரை லைவ் ஆக நக்கீரன் படம் பிடித்து வெளியிட்டது. மே மாதம் 570 கோடி பணத்தை இன்னொரு கண்டெய்னரில் திருப்பூர் பகுதியில் வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் பிடித்ததையும் அதில் ஆவணங்கள் எதுவுமின்றி பணம் கொண்டு செல்லப்பட்டதையும் ஆதாரத்துடன் நக்கீரன் அம்பலப்படுத்தியது. ஆளுங்கட்சிகள் மீதான அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் தீவிர பிரச்சாரம், பிரியும் வாக்குகள் என கடைசி நேர மல்லுக்கட்டு நீடிக்கும் இந்தத் தேர்தல் களத்தில் 2016 போலவே பண நாயகம் வெற்றி பெறுமா? என்பதை வரும் தேர்தல் முடிவுகள் சொல்லும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.