Skip to main content

“அப்போதெல்லாம் வக்கீலுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்!!” - திமுக வக்கீல் எம்எல்ஏ கலகல பேட்டி!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

ி

 

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருமாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அந்தந்த அமைச்சர்கள் தொடர்ந்து அறிவித்துவருகிறார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களின் முதல் உரையை அவையில் பதிவு செய்துவருகிறார்கள். அந்த வகையில் முதல்முறையாக எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் பரந்தாமன் சட்டப்பேரவையில், அத்தொகுதியின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் கூறியதோடு மட்டுமல்லாமல், தொகுதியின் பெயரையே மாற்ற வேண்டும் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார். என்ன காரணம், எதற்காக பெயர் மாற்றம் என்பது குறித்தான பல்வேறு கேள்விகளை அவரிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


பள்ளி பருவத்திலேயே நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். அப்போது நீங்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவோம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம் என்று நினைத்திருக்கிறீர்களா? இந்த வாய்ப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

 

மாணவர் பருவத்தில் இருந்தே எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தது உண்மை. குறிப்பாக கலைஞர் அவர்களின் பேச்சு, முரசொலி வாசிப்பு முதலியன அந்த ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தின. எனவே தலைவரின் பேச்சும், எழுத்தும் நான் அரசியலுக்கு வர மிக முக்கிய காரணமாக இருந்தது என்பதே உண்மை.

 

அரசியலில் பல்வேறு கட்டங்களாக உயர்ந்து தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளீர்கள். அரசியலில் கட்சி பொறுப்புகளைக் கடந்து தற்போது சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை பெற்றுள்ளீர்கள், அதை எப்படி பார்க்கிறீர்கள்? முதன்முதலாக சபைக்குச் சென்றபோது எந்த மாதிரியான உணர்வில் இருந்தீர்கள்? 

 

இரண்டும் கலந்த ஒரு மனநிலையில்தான் இருந்தேன். அதை விவரிப்பது என்பதைக் காட்டிலும், அப்போது வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டேன் என்பதே இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும். மிகவும் அப்போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். எதற்காக நாம் உழைத்தோமோ, அதை அங்கீகரித்து தலைவர் நமக்கு வாய்ப்பு கொடுத்து சட்டப்பேரவைக்கு அழைத்துச் செல்வது என்பது மிகவும் சந்தோஷமான ஒரு நிகழ்வு. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதையும் தாண்டி இனி நிறைய உழைக்க வேண்டியுள்ளது என்ற பொறுப்பு தற்போது கூடுதலாக வந்துள்ளது. 

 

சட்டமன்றத்தில் நீங்கள் பேசியபோது எழும்பூர் என்ற பெயரை எழுமூர் என்று மாற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள், என்ன காரணம், அதற்கான வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா? 

 

சோழர் காலத்தில் எழுமூர் என்றழைக்கப்பட்ட அந்தப் பெயர், தற்போது எழும்பூர் அல்லது ஆங்கிலத்தில் எக்மோர் என்றழைக்கப்படுகிறது. எழுமூர் என்ற பெயர் காலப்போக்கில் பேச்சில் திரிந்து எழும்பூர் என்று மாறிப்போய்விட்டது. எனவே எழும்பூர் என்ற பெயர் இலக்கணப்படி வைத்த பெயர் அன்று. 900 ஆண்டுகால வரலாறு உடைய எழுமூர் என்ற அந்தப் பெயரை மீண்டும் வைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தேன். இந்த அரசு செய்யவில்லை என்றால் யார் செய்யப் போகிறார்கள். நிச்சயம் நல்ல மாற்றம் வரும்.  

 

பல்வேறு விஷயங்களை சட்டமன்றத்தில் பேசியிருந்த நீங்கள், வழக்கறிஞராக இருந்ததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அது பற்றி கூற இயலுமா? 

 

வழக்கறிஞர்களுக்குப் பெண் கொடுக்க யோசிப்பார்கள், அதை நானே என்னுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். பல வரன்கள் தட்டிச் சென்றன. பிறகு திருமணம் செய்துகொண்டேன். அதைப்போல வீடு கிடைப்பதில் பிரச்சனை இருப்பதை தற்போது நானே நேரில் பார்த்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின், தொகுதியிலேயே தங்க வேண்டும் என்று முடிவெடுத்த நான், அதற்காக வீடு பார்த்தேன். பல வீடுகள் இறுதி செய்யப்பட்டு, கடைசியில் தள்ளிப்போனது. அவர்கள் யாரும் நான் வழக்கறிஞர், அரசியல்வாதி என்று தனிப்பட்ட காரணங்களைக் கூறாமல் வேறு எதாவது ஒரு காரணத்தைக் கூறி நிராகரிப்பார்கள். தற்போது நான் இருக்கும் ஃபிளாட் ஓனர் வக்கீல்தான். அவருக்கு அந்த தொழில் மீது புரிதல் இருந்ததால் வீடு கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனவே நாம் நடந்துகொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று. நம் செயல்பாடு சரியாக இருந்தால் யாரும் நம்மை வேண்டா வெறுப்பாக பார்க்க மாட்டார்கள். 

 

சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். நாட்டில் சமூகநீதிக்கு உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கையில், எதற்காக இப்போது பெரியாரை இந்த திராவிடக் கட்சிகள் தூக்கிப்பிடித்து வருகிறார்கள் என்று கூறுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

இந்தியாவில் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோமாயின், அந்த அரசியலமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்னும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறி அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற யார் காரணம்? அவர் சார்ந்த திராவிட கழகம்தானே?  அப்புறம் அவரை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்றால் என்ன பதில் சொல்வது. இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் அனைவருக்கும் தெரியும் பெரியார் யார் என்று. இருந்தும் விடாப்பிடியாக வம்பிழுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள். இதனால் பெரியார் ஒன்றும் சிறுமைப்பட போவதில்லை. அவர் அதையும் தாண்டியவர். காலகாலத்திற்கும் நிலைத்து நிற்பவர். 

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.