Skip to main content

பயங்கரவாதத்தை ஒழித்த லட்சணம் இதுதானா, மோடிஜீ?

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

காங்கிரஸ் அரசுக்கு எதிரான மோடியின் கேள்விகள் அனைத்தும், விமர்சனங்கள் அனைத்தும் இப்போது அவருக்கே பூமராங் ஆக திரும்பிவரத் தொடங்கியுள்ளது.

 

2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது 56 இன்ச் மார்புகொண்ட மோடி பேசிய வீடியோ கிளிப் ஒன்றை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

 

Modi

 

அதாவது, 56 இன்ச் மார்பளவு கொண்ட மோடி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என்றும், பயங்கரவாதிகளின் நிதி ஆதாரத்தை ஒழித்துவிடுவார் என்றும், எல்லையில் அமைதி நிலவும் என்றும் பில்டப் செய்யப்பட்டிருந்தது. 

 

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமீபத்தில் சுன்ஜுவான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலோடு மொத்தம் 207 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று சிங்வி கூறியிருக்கிறார்.

 

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வெறும் 96 மட்டுமே என்று உள்துறை அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

 


எல்லைப்பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிவிட்டார் என்றுகூறி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வளையல்களையும் புடவைகளையும் அனுப்பியது பாஜக. அதுபோலெல்லாம் காங்கிரஸ் கட்சி இதுவரை தரம்தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதாவது, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அந்தக் கட்சி பொறுப்பாக இருப்பதையே இது காட்டுகிறது.

 

சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகளுக்கு பாஜக பதில் சொல்லாது. ஏனென்றால், இந்தக் கேள்விகள் அனைத்தும் பாஜக கேட்டவைதான்.

 

முதல்கேள்வி, பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கிடைக்கின்றன. எல்லைக்கு அந்தப்புறம் இருந்து கிடைக்கின்றனவா? அனைத்து எல்லைப் பகுதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. பிறகு எப்படி அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன?

 

இரண்டாவது கேள்வி, பயங்கரவாதிகளுக்கு எப்படி நிதி கிடைக்கிறது. மொத்த பணபரிவர்த்தனை அதிகாரமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது. பிறகு ஏன் பிரதமர் மோடியால் தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியவில்லை? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளின் நிதி ஆதாரத்தை அழித்துவிட்டதாக மோடி சொன்னது என்னாயிற்று?

 

அதாவது நாட்டின் எல்லைகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கடலோர பாதுகாப்பும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படையும், கடற்படையும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. பிறகு எப்படி பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவுகிறார்கள்?

 

பயங்கரவாதிகளின் போன்களையும், ஈமெயில்களையும் குறுக்கிட்டு உளவறியும் ஆற்றலை இந்த அரசு இழந்துவிட்டதா? என்றெல்லாம் கேட்டால், மவுனம்தான் விடையாக கிடைக்கிறது. பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது பாஜக. அதேசமயம், கேள்வி கேட்பவர்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுத்து, தன்னைத்தானே பெருமை பீற்றிக் கொள்கிறது என்று காங்கிரஸ் காட்டமாக பேசத் தொடங்கியிருக்கிறது.

 

தான் விதைத்த வினையை தானே அறுக்கும் நிலைக்கு பாஜக வந்திருக்கிறது.