Skip to main content

"அத்வானிக்கு அரெஸ்ட்...ராஜீவ் காந்திக்கு கமிஷன்" ஏன் கொண்டாடப்படுகிறார் வி.பி சிங்..?

Published on 25/06/2019 | Edited on 26/06/2019

"மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு சிலரகசிய கோப்புகள் வருகிறது. படித்து பார்க்கிறார், யார் தலைமையின் கீழ் அவர் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கிறாரோ அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. உடனடியாக இதுதொடர்பாக விசாரிக்க ஆயத்தமாகிறார் அவர். குற்றச்சாட்டுக்கு ஆளானவர் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அவர் மீது விசாரணை குழுவை அமைக்க முயன்றவர் வேறுயாரும் அல்ல மண்டல் நாயகன் வி.பி சிங்தான்.

இட ஒதுக்கீட்டு நாயகன் என்று இன்றளவும் போற்றுப்படும் வி.பி சிங் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை காங்கிரஸ் கட்சியில் இருந்தே தொடங்கியது. இன்றைய அரசியல்வாதிகளை போல் "துடைத்துக்குவேன்" பேர்வழி அல்ல அவர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதன் காரணமாக தன்னுடைய முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தவர். அவருக்கு முன் பதவியேற்ற 6 பிரதமர்களால் செய்ய முடியாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியவர். அதற்காக தன்னுடைய பிரதமர் பதவியை காவு கொடுத்தவர். பிரதமர் பதவி மீண்டும் தனக்கு கிடைத்தபோதும் அதனை, உடல்நிலையை காரணம் காட்டி வேண்டாம் என்று மறுத்தவர் என, பல ஆச்சரிங்களுக்கு சொந்தக்காரரான அவரின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. 


1969 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், 1971ம் ஆண்டு  நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவைக்கு சென்றார். இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கொடுக்கும் பதவிகளில் எல்லாம் இவர் காட்டும் அக்கறையை பார்த்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1980 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக வி.பி சிங்கை நியமித்தார். உ.பி மாநிலமே அப்போது கொள்ளைகாரர்கள் தொல்லையினால் தத்தளித்தபோது மாநிலத்தின் முதல்வர் பொறுப்பு ஏற்ற அவர், வெகு விரைவில் கொள்ளையர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால் மாநிலத்தில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக விரக்தியான அவர், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். " கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாததால் நான் இந்த முடிவை எடுக்கிறேன்" என்று தன்னுடைய ராஜிநாமாவுக்கு காரணம் சொன்னார் வி,பி சிங்.

 

v.p singh political career

 

 

இந்திரா மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிக முக்கியத்துவத்தை பெற்ற அவர், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக பொறுப்பேற்றார். நிதி அமைச்சராக வி.பி சிங் இருந்த காலத்தில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாருக்குள்ளான அம்பானி, அமிதாப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் வீடுகளில் ரெய்டு நடத்தினார். ராஜீவ் காந்தியோடு, அமிதாப் பச்சன் நல்ல நட்பில் இருப்பது தெரிந்தும், பதவியை பற்றி சிறிதும் கவலை கொள்ளாது அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தார். வி.பி சிங்கின் நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த ராஜீவ், அவருக்கு அணை போடும் விதமாக அவரிடம் இருந்த நிதியமைச்சர் பதவியை பறித்து பாதுகாப்புத்துறைக்கு அமைச்சர் ஆக்கினார். அங்கேயும் அவரது அதிரடிகள் குறைந்தபாடில்லை. ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் சில முறைகேடுகள் நடந்ததாக அவருக்கு தகவல் கிடைக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி மீதே குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக விசாரித்தார் வி.பி சிங். இதனால் கொதித்த பிரதமர் ராஜீவ் காந்தி அவரை மந்திரி சபையில் இருந்து நீக்கினார். இருந்தும், கொண்ட கொள்கையில் இருந்து விலகாத அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஜன மோர்ச்சா என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். தனி மரம் தோப்பாகாது என்பதை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்த அவர், மாநில கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க விரும்பினார். அவர் விரும்பியது போன்றே திமுக, தெலுங்கு தேசம் முதலிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியை அமைத்தார். தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை வென்ற தேசிய முன்னணிக்கு, கம்யூனிஸ்ட மற்றும் பாஜக ஆதரவு தரவே இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் வி.பி சிங்.


அவர் பதவியில் இருந்த நாட்கள் வெறும் 11 மாதம் 8 நாட்கள் மட்டுமே. ஆனால் இந்த கால கட்டத்தில் அவர் செய்த சாதனைகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்ற அவர், பி்ற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது தான். கூட்டணி கட்சியான பாஜகவின் கடும் எதிர்ப்புகளின் மத்தியில் அதை நாடாளுமன்றத்தில் சாத்தியமாக்கினார். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தாலும் கொள்கையில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதை நிரூபித்தார். இதற்கு முத்தாய்ப்பாக அத்வானியின் ரத யாத்திரைக்கு தடைவிதித்து அவரை கைது செய்ய உத்தவிட்டார். இதன் காரணமாக தனது பதவி உடனடியாக பறிபோகும் என்பதை அறிந்திருந்தும்,  அத்வானியின் ரதத்தை நகரவிடாமல் பார்த்துக்கொண்டார். இதன் காரணமாக பாஜக தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொள்ள, பதவியிழந்தார் வி.பி சிங்.  " இன்று என்னுடைய கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நான் அடைய வேண்டிய இலக்கை என்றோ அடைந்துவிட்டேன். இனி மரியாதையோடு ஆட்சியை விட்டு இறங்குகிறோம். அதற்காக பெருமைபடுகிறோம். அரசியலில் இறுதியானது, கடைசியானது என்று எதுவுமே இல்லை. இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பிரதமர் பதவி ஒன்று எனக்கு சந்தோஷத்தை கொடுக்காது" என்று கர்ஜித்துவிட்டு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்த அவரை, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றிருந்த ஐக்கிய முன்னணியை சேர்ந்த தலைவர்கள் பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியும், தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அதனை மறுத்தார். பதவிக்காக தவளை ஓட்டத்தை பார்த்த தமிழகத்துக்கு வி.பி சிங் அரசியல் பயணம் என்பது ஒரு ஆச்சரியம்தான்.


 

 

 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

சாந்தன் மறைவு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
High Court question to Tamil Nadu Govt for Santhan's disappearance

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (28-02-24) உயிரிழந்தார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடம் சிறையில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அகதிகள் முகாமில் சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாந்தன் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தியிருந்தது. 

சாந்தன் உயிருடன் இருக்கும் போது, நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு முன் வந்தது. அதில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார்.

அப்போது, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘கடந்த 22ஆம் தேதி சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதனையடுத்து, ‘சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அவரை அனுப்பவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், ‘சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப தயாராக இருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ ரீதியாக உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து, சாந்தனின் உடல்  இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.