Skip to main content

‘இங்க பொங்கப்பானை பொங்காது’ - மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

A village people who don't celebrate pondal festival

 

தைப்புத்தாண்டின் போது வீட்டின் முன்னே தெருக்களில் மாக்கோலமிட்டு செங்கரும்பு, மஞ்சள் குலை, பூக்களால் அலங்காரமிட்டு புத்தம் புதுப்பானையில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியையிட்டு புதுப்பானை பொங்கப் பொங்கக் குலவையிட்டு பொங்கலை சூரியனுக்குப் படையலிட்டு சிறப்பாக வழிபடுவது ஆதித்தமிழர்கள் காலம் தொட்டு இன்றளவும் வேளாண்மக்களும் பிற அனைத்து மக்களும் கொண்டாடுவது தமிழர்களின் ரத்தநாளங்களில் ஊறிப்போன வாழ்வியல் பண்பாடு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திண்ணமான நம்பிக்கை. 

 

தெருக்களில் பொங்கல் வைத்து புதுப் பொங்கல் பானை பொங்காமல் போனதால், வேதனையடைந்த கிராம மக்கள் 120 ஆண்டுகளாக; மூன்று தலைமுறைகளாக தைப்பொங்கலே கொண்டாடாமலிருக்கும் விநோத தகவலறிந்த நாம், வியந்து போய் அந்தக் கிராமத்திற்கு விரைந்தோம்.

 

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பக்கமுள்ள பொட்டல் புதூர் நகரம் தாண்டிய ரிமோட் ஏரியாவிலிருக்கிறது கேளையாப்பிள்ளையூர் என்கிற அந்தக் கிரமம். சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட 1300க்கும் கூடுதலான பல சமூக மக்களை உள்ளடக்கியது. அந்தக் கிரமத்தின் வாழ்வாதாரமே விவசாயம், பீடி சுற்றுதல் மற்றும் விவசாய கூலித் தொழில்களேயாகும். மூன்று தலைமுறைகளுக்கு முன்பு தமிழர்களின் முக்கிய திருநாளான தைத் திருநாளில் கேளையாப்பிள்ளையூர் கிராமத்தினர் வழக்கம்போல் தெருக்களில் மஞ்சள் குலை, கரும்புகளால் அலங்கரித்து புத்தரிசி புதுப்பானையில் பொங்கலிட்டிருக்கிறார்கள்.

 

A village people who don't celebrate pondal festival

 

ஆனால் புதுப்பானை கொதித்ததே தவிர வழக்கம்போல் பொங்கல் பானையில் பால் பொங்கி வழியவே இல்லையாம். வெகுநேரம் பானை கொதித்ததே தவிர பொங்காமல் போயிருக்கிறது. இதனால் அரண்டு மிரண்டு போன மக்கள் மன சஞ்சலமடைந்திருக்கிறார்கள்.

 

A village people who don't celebrate pondal festival

 

அதே வேளையில் கிராமத்தின் அவர்களின் குலக்கோவில்களான முப்புடாதியம்மன் கோவில், உச்சினிமாகாளியம்மன் கோவில், பிள்ளையார் கோவில் ஆகிய கோவில்களின் கொடை விழாவின் போது கிராமமே திரண்டு வழிபடும் பொருட்டு ஆலய வீதிகளில் பொங்கலிட்ட போது அனைத்து பொங்கல் பானைகளும் பொங்கி வழிந்திருக்கிறது. பின்னர் குலசாமிகளுக்குப் படையலிட்டு வழிபட்டுள்ளனர்.

 

A village people who don't celebrate pondal festival

 

மாறாக அதே பொங்கலை தைத் திருநாளில் பொங்கலிட்ட போது பொங்கல் பானை பொங்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு சம்பவங்கள் என்பது அவர்களின் மனதை அரித்திருக்கிறதாம். அதே வேளையில் தைத்திரு நாளில் பொங்கலிட்டு பொங்காமல் போனதால் கிராமத்தில் சில எதிர்பாராத துர்மரணச்சம்பவங்களும் நடந்திருக்கிறதாம். தெய்வ குத்தமா, கர்மவினையா, சாபமா என்கிற மனஉளைச்சலில்; மனவேதனையில் கிராமத்துப் பெரியவர்கள் ஒன்று கூடி இனிமேல் தைத்திருநாளில் கிராமத்தில் பொங்கலிட வேண்டாம். கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்த மறுவருடம் முதல் தைப்பொங்கல் வைக்காமல் தவிர்த்ததையடுத்து முன்னர் நடந்த திடீர் சம்பவங்கள் நடக்காமல் போனதால் தொடர்ந்து 120 வருடங்களாக தைத்திருநாளில் பொங்கல் வைக்கவேயில்லையாம். அன்றைய தினம் மட்டும் அந்தக் கிராமம் வெறிச்சோடி இருக்கிறது என்கிறார்கள்.

 

நாம் கேளையாப்பிள்ளையூர் சென்ற போது அந்தக் கிராமம் ஆழ்ந்த அமைதியிலிருந்தது. தெருவீதிகளும் வெறிச்சோடின. 3ம் தலைமுறையான 120 வருடங்களுக்கு முந்தைய சம்பவமென்பதால் 90 வயது கடந்த பெரியவர்களான முத்துக்கிருஷ்ணன், சுப்பையா, செல்லம்மாள், கனி உள்ளிட்டவர்களை கிராமத்தினர் முன்னிலையில் சந்தித்து பேசினோம்.

 

A village people who don't celebrate pondal festival

 

ஆதிகாலத் தொடர் சம்பவம் என்பதால் ஆழமான அமைதிக்குப் பின் பேசினார்கள். “மூணு தலைமுறைக்கு முன்ன சாதி சனம், மக்க, கொஞ்சப்பேரு தான் இருந்தாங்க. எங்க முப்பாட்டனுக காலத்தில அறுவடையான புளியதரட்டி சம்பா அரிசிய தைப்பொங்கலன்னைக்கு மாடுகளைல்லாம் குளிப்பாட்டி பூப்போட்டு சூரியன் உதிக்கும் போது வழக்கமா தெருக்கள்ல பொங்க வச்சாக. ஆனா, ஏனோ ஊர்ல பொங்க வைச்ச அத்தனை பொங்கப்பானையும் பொங்காமப் போனதால, அப்ப பயந்து போன பெரியவங்கல்லாம் ஒன்னு கூடி தெய்வகுத்தமாத் தெரியுது. அதனால தைப்பொறப்பன்னைக்கு பொங்க வைக்க வேணாம்னு முடிவு எடுத்திட்டாக. ஆனா பாருங்கய்யா அப்ப எங்க குலசாமிக கோயில்ல கொடையன்னைக்கி ஊர் மக்க கோயில் தெருக்கள்ல வைக்கிற பொங்கல்ல பொங்கப்பானைக பொங்கியிருக்குய்யா. தைப்பொறப்புல நடந்தது தெய்வ குத்தமா, ஊருக்குச் சாபமான்னு தெரியலியேன்னு எங்க முப்பாட்டங்க மக்க மனசொடிஞ்சி போயிட்டாங்களாம்.

 

A village people who don't celebrate pondal festival

 

அப்பத்தேன், வழக்கமா தைப் பொறந்த மூணாம் செவ்வாக்கெழமன்னைக்கி எங்க முன்னோர்க எங்க குலதெய்வம் இந்த உச்சினி மாகாளியம்மன் கோயில் கொடை விழா நடத்திருக்காக. அப்ப ஊர் சனங்க தெரண்டு வந்து வழக்கமா வீதியில பொங்கல் வைச்சு குலவையிட்டதில பொங்கப்பானை வழக்கமாப் பொங்கியிருக்குய்யா. அந்தக் கொடை விழாவுல வழக்கம் போல 14 சாமியாடிக சாமியாடுவாக. அப்ப ஊர்க்காரர் ஒருத்தர் வந்து சாமியாடியக கால்ல விழுந்து கும்பிட்டு, கோயில்ல பொங்க வைச்சா பொங்கப்பானை பொங்குது ஆத்தா. ஆனா தைப் பொறப்பன்னைக்கி விசேஷம்னு வழக்கமா தெருவுல பொங்க வைச்சா பொங்கப்பானை பொங்கல ஆத்தா. கொதிச்சுக்கிட்டேயிருக்கே., தெய்வகுத்தமான்னு கும்பிட்டுக் கேட்டுருக்காராம்.

 

A village people who don't celebrate pondal festival

 

அப்ப 14 சாமியாடிகளும் ஒன்னா சேர்ந்து, ‘நீ எனக்கு தைச் செவ்வாயன்னைக்கு கொடை குடுத்து பொங்க வைக்கறல்லோ. அதோட முடிச்சுக்கோ, போன்’னு ஒங்காரமா சாமியாடிக அருள்வாக்கு சொல்லிருச்சாம். அப்பயிருந்தே தைப் பொறப்பன்னைக்கு மத்தவங்கள மாதிரி எங்க கிராமத்தில தெருக்கள்ல பொங்கலிடுறத நிறுத்தியிருக்காக. சாமி குத்தமாயிருமேன்னு தான்யா. ஆனா, ஆடி மாசம் மூணாம் செவ்வாயன்னைக்கி எங்க ஊரு முப்புடாதி அம்மன் கோவில்லயும், தை மூணாம் செவ்வாய்ல உச்சினிமாகாளியம்மன் கோவில்லயும் வருடந்தோறும் தொடர்ச்சியா கொடை நடத்தி பொங்க வச்சிட்டுத்தான் வர்றோம்.

 

A village people who don't celebrate pondal festival

 

இடையில என்னாச்சுன்னா, கோயில் கொடைக்கி ஒரு வாரத்துக்கு முன்ன கோயில்ல உருவம் விட்டு கண் தொறப்போம். வழக்கமா செவ்வாயன்னைக்கித் தான் நடத்துவோம். அப்ப ஊர்ல செவ்வாய்ன்னும் ஞாயிறு கிழமை வைங்கன்னும் ரெண்டு தரப்பு பேச்சாயிருச்சி. அவங்க சொன்னத போல வழக்கத்த மாத்தி ஞாயித்துக்கிழம உருவம் விட்டு கண் தொறந்த அந்த வருஷம் ஊர்ல தடங்கலாயிருச்சி. வேண்டாம் இந்த வம்பு தெய்வக்குத்தம்னு உருவம் விடுறதையும் மறுபடியும் செவ்வக்கிழமைக்கு மாத்திட்டோம்யா. ஊர்ல இப்புடி நடந்ததால 120 வருஷமா மூணு தலைமுறையா கிராமத்தில நாங்க தை மாசப் பொறப்பன்னைக்கு ஊர்ல பொங்க வைக்கிறத நிறுத்திட்டோம்யா. தீபாவளி கொண்டாடுதோம். பொங்கல் கொண்டாடுறதில்ல. அதனால மூணு தலைமுறையா தைப் பொங்கல்னா என்னான்னு தெரியாததா ஆயிருச்சி. அப்ப ஊரே வெறிச்சோடிக் கெடக்கும்யா. அந்த நாளன்னைக்கி ஊர்க்காரவுக திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை போயிடுவாகய்யா.” என்றார்கள் வறண்ட குரலில்.

 

கேளையாப்பிள்ளையூரில் தைப் பொங்கல் பானைகள் பொங்காதது சாபமா? வாங்கி வந்த வரமா? என்ற புதிர்கள் மூன்று தலைமுறையாக சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

 

 

 

Next Story

“லஞ்சம் லஞ்சம்... எதற்கெடுத்தாலும் லஞ்சம்..” - வீடியோ வெளியிட்டுக் குமுறும் இளைஞர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
man released video  bribes are taken for whatever  Tehsildar  office

நெல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க தாசில்தார் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கு அவரிடம் ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று அதிகாரிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழக முதல்வர் அவர்களே வருவாய்த் துறையில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்கள். எதற்கெடுத்தாலும் லஞ்சம்; லஞ்சம் இல்லாமல் தாசில்தார் அலுவலகத்திற்குள் கால் வைக்கவே முடியாது. அவ்வளவு லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பட்டாவில் சிறிய மாறுதல் செய்ய 50 ஆயிரம் கொடு, ஒரு லட்சம் கொடுன்னு கசக்கி பிழிகிறார்கள்.

நான் ஒரு கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாற்றித் தருகிறோம் என்கின்றனர். நான் பணம் எல்லாம் தரமாட்டேன்; என்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது என்று கேட்டதற்கு, நீ எங்க வேண்டுமானாலும் செல் என்கிறனர். 

இது தொடர்பாக ஏகப்பட்ட மனு கொடுத்து, ஒரு வருடமா நடையா நடந்துகிட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த மனுவுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரூ.1 லட்சம் லஞ்சமாகக் கொடுத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருப்பார்கள். தயவு செய்து லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; லஞ்சம் கொடுத்தால்தான் இது முடியும் என்று கூறிவிட்டீர்கள் என்றால், நான் லஞ்சம் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன். ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தால் தவறு என்கிறீர்கள். ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வேலையே நடைபெறுவதில்லை.

முதல்வரே தயவு செய்து பதிவுத்துறை அல்லது வருவாய்த்துறை இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வையுங்கள்; எங்களால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. கடன்வாங்கி இடத்தை வாங்குனா, இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளமுடியவில்லை. லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; இல்லையென்றால் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என மன வேதனையில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

Next Story

தெருநாய்கள் கடித்து சிறுமி படுகாயம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tenkasi District Achanputur 12th Street dog incident
மாதிரிப்படம்

தெருநாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் 12வது தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு எட்டு வயதில் மனிஷா என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (22.06.2024) காலை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி மனிஷாவைக் கடித்துள்ளன.

இதனைக் கண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியை மீட்டுள்ளார். இருப்பினும் நாய் கடித்ததில் படுகாயமடைந்த மனிஷா தென்காசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.