Skip to main content

வரலாற்றில் விலகாத மர்மம்; வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டர்

 

 - செந்தில்குமார்

 

venkatesa pannaiyar encounter

 

அரசும், காவல்துறையும் நினைத்தால் ஒரு மனிதனின் வாழ்வை தொடங்கி வைக்கவும் முடியும், முடித்து வைக்கவும் முடியும் என்பதற்கு சமூகத்தில் பல சாட்சிகள் இருந்தாலும் 2003 ஆம் ஆண்டு நடந்த வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டர் சம்பவம் காலத்தால் மறக்க முடியாத ஓர் அழுத்தமான சாட்சியமாக இப்போது வரை இருந்து வருகிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். சுமார் 1500 ஏக்கர் நிலங்களும் நாடார் பாதுகாப்பு பேரவை என்னும் அமைப்பின் தலைவருமாக சமூகத்தில் பண பலம், படைபலம் என்னும் சகல அந்தஸ்துகளுடன் இருந்த வெங்கடேச பண்ணையாரை தமிழக காவல்துறை ஏன் ஒரே இரவில் அவர் கதையை முடித்து வைத்தது? அப்படி நடந்த அந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்த அரசியல் அழுத்தங்கள் என்ன? அந்த சம்பவத்தோடு தொடர்புடைய அதிகாரமிக்க நபர்கள் யார் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

 

venkatesa pannaiyar encounter

 

35 வயதான வெங்கடேச பண்ணையாருக்கு மூலக்கரை தான் சொந்த ஊராக இருந்தாலும் அவருடைய  அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன் தலைமையகம் என்பது சென்னையாகத்தான் இருந்து வந்தது. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராதிகா செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்ட வெங்கடேச பண்ணையார் பெரும்பாலும் சென்னையிலேயே தங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பசுபதி பாண்டியனோடு ஏற்பட்ட பகையின் காரணமாக பசுபதி பாண்டியன் தரப்பிற்கும் வெங்கடேச பண்ணையார் தரப்பிற்கும் அடிக்கடி முட்டல், மோதல் ஏற்பட்டு வந்தது. அந்த பகையை சமாளிக்க எப்போதும் சில அடியாள் கும்பலோடு வலம் வந்த வெங்கடேச பண்ணையார் தன் பகையை எதிர்கொள்வதை பார்ட் டைமாகவும் அது போக பஞ்சாயத்துகள் செய்வதை தன் புல் டைமாகவும் செய்து வந்தார். அதிலும் நட்புன்னு வந்துட்டா வெங்கடேச பண்ணையாரின் வீரியம் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி ஆகிவிடும். அப்படி நட்புக்காக கை கொடுக்க போன ஒரு சம்பவம் தான் வெங்கடேச பண்ணையாருக்கு எண்டு கார்டு போட வைக்கப் போகுதுன்னு அப்போ யாருக்கும் தெரியாது. 

 

venkatesa pannaiyar encounter

 

சென்னையைச் சேர்ந்த பெப்சி முரளி என்பவர் வெங்கடேச பண்ணையாருக்கு மிக நெருக்கமான நண்பர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் பெப்சி முரளி ஜெய்கணேஷ் என்பவருக்கு வட்டிக்கு கொடுத்த பணம் திரும்ப வராததால் ஜெய்கணேஷிடம் மாட்டிக்கொண்ட பணத்தை எப்படியாவது வாங்கி தரச்சொல்லி தன் நண்பரான வெங்கடேச பண்ணையாரிடம் முறையிடுகிறார். வெங்கடேச பண்ணையார் ஜெய்கணேஷை தொடர்பு கொண்டு கேட்க, அவரோ நான் ஷமீர் முகமது என்பவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டேன். முடிந்தால் அந்த பணத்தை மீட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஷமீர் முகமதுவை பற்றி விசாரிக்கும் வெங்கடேச பண்ணையாருக்கு அப்போதுதான் தெரிந்தது தான் விரித்த வலையில் விலாங்கு மீன் ஒன்று சிக்கிக்கொண்டிருக்கிறது என்பது. ஷமீர் முகமது விலாங்கு மீன் என்பது உண்மைதான் என்றாலும் அதன் இரையாகப் போவது பண்ணையார் என்பது தான் இந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத  திருப்புமுனை.

 

ஷமீர் முகமது சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜி.கே.எஸ் டவர்ஸ் என்னும் கட்டடத்தில் லீடர்ஸ் கேபிடல் சர்வீஸ் இந்தியா என்னும் மோசடியான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றி தருவது, கஸ்டம்ஸில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை விற்பனை செய்வது, பல தீவிரவாத கும்பல்களுக்கு பணம் விநியோகிப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகிறார். வெங்கடேச பண்ணையார் ஷமீர் முகமதுவிடம் ஜெய்கணேஷிற்கு தர வேண்டிய பணத்தை கேட்க வேண்டிய முறையில் கேட்க, பணத்தை தவணை முறைகளில் தர ஒப்புக்கொள்கிறார் ஷமீர் முகமது. முதல் தவணையாக தந்த பத்து லட்சத்தை பெப்சி முரளியே நேரடியாக சென்று பெற்றுக்கொள்கிறார். ஆனால், இரண்டாம் தவணையாக தரப்பட்ட செக்குகள் பணமில்லாமல் திரும்பி வர, வெங்கடேச பண்ணையார் தேனாம்பேட்டை முருகன் மற்றும் கோபி என்ற தனது ஆட்கள் மூலமாக ஷமீர் முகமதுவை விசாரித்து வரச் சொல்கிறார். ஆள் அனுப்பியதில் மிரண்டு போன ஷமீர் முகமது இனி வேறு வழி இல்லை என்பதால் தனது கடைசி ஆயுதமான அரசியல் செல்வாக்கை கையில் எடுக்கிறார். இந்த சம்பவம் நடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஷமீர் முகமதுவின் உறவினர் என்பதால், ஷமீர் முகமது பிரச்சனையை பாத்திமா பீவியிடம் கொண்டு செல்ல பாத்திமா பீவி அதை அப்படியே அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். 

 

இப்படியாக பிரச்சனை அப்போதைய சென்னை கமிஷனர் விஜயகுமாரின் கைகளுக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு கமிஷனர் விஜயகுமாரிடமே நேரடியாக பேசும் ஷமீர் முகமது பண்ணையார் பற்றி பலமாக பற்ற வைக்க, வீறு கொண்டு எழுகிறார் விஜயகுமார். முதல் நடவடிக்கையாக தேனாம்பேட்டை முருகனையும் கோபியையும் கீழ்ப்பாக்கம் காவல்நிலையம் மூலமாக கைது செய்யும் விஜயகுமார், அவர்களின் மூலமாக பண்ணையாருக்கு குறி வைக்கிறார். ஆனால், அவர்கள் இருவரும் பண்ணையார் பற்றி  வாய் திறக்க மறுத்துவிடுவதால் வேறு வழி இன்றி ஷமீர் முகமதுவை பண்ணையார் மீது புகார் கொடுக்க வைத்து பண்ணையாரை தேடத் தொடங்குகிறது போலீஸ். இந்த விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்ட வெங்கடேச பண்ணையார் ஷமீர் முகமது விஷயத்தில் சைலன்ட் மோடுக்கு வருகிறார். ஆனாலும் விஜயகுமாருக்கு தரப்பட்ட அரசியல் அழுத்தங்களால் வெங்கடேச பண்ணையாரின் கதையை மொத்தமாக முடிக்கும் முடிவுக்கு வருகிறது காவல்துறை. ஆனால், காவல்துறையை சேர்ந்த சில நபர்களாலேயே இந்த தகவலை தெரிந்து கொண்ட பண்ணையார் அப்போது அதிமுக அமைச்சர்களாக இருந்த சிலரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், அதற்குள் காவல்துறையின் திட்டம் தீவிரம் அடைகிறது. 

 

செப்டம்பர் 25 ஆம் தேதி இரவு, வெங்கடேச பண்ணையார் தனது நண்பரான ஜான்சன் என்பவருக்கு சொந்தமான சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள மகாலட்சுமி பிளாட்ஸ் என்னும் குடியிருப்பில் காவல்துறையின் தேடலுக்கு பயந்து பதுங்கி இருந்தார். ஆனாலும் காவல்துறை பண்ணையாரின் நண்பரான பெப்சி முரளி மற்றும் பண்ணையாருக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரியான டி.சி.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மூலமாக பண்ணையார் பதுங்கி இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடுகிறது. மேலும், ஒன்றும் பிரச்னை இல்லை. நிம்மதியா தூங்குங்க. காலைல வருகிறேன் என பெப்சி முரளியை பண்ணையாருடன் பேச வைத்து பண்ணையார் இடத்தை மாற்றிவிடாமல் இருக்க செய்த போலீஸ், அதனைத் தொடர்ந்து பரபரவென்று அடுத்தகட்ட திட்டத்திற்கு ஆயத்தம் ஆனது. 

 

இரவு முழுவதும் பண்ணையாரை கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாலை நேரத்தில் அவருக்கு மரணமுகூர்த்தம் குறிக்கத் தயாரானது. டி.சி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உதவி கமிஷனர் லட்சுமிநாதன், இன்ஸ்பெக்டர் இக்பால், நவீன் ஆகியோர் அடங்கிய டீம் பண்ணையார் தங்கி இருந்த மகாலட்சுமி பிளாட்ஸை சுற்றி வளைத்தது. அவர்களோடு சப் இன்ஸ்பெக்டர்களான மோகன்ராஜ், அருள்மணி, செட்ரிக், தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய டீமும் இணைந்திருந்தது. 

 

மகாலட்சுமி பிளாட்ஸ் பல குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு என்பதால் மற்றவர்களுக்கு தொந்தரவாக அமைந்துவிடக் கூடாது என்று நினைத்த காவல்துறை, வெங்கடேச பண்ணையார் இருக்கும் வீட்டை மெதுவாக நெருங்கி கதவைத் தட்ட, விழித்துக்கொண்ட வெங்கடேச பண்ணையார் வெளியில் எட்டி பார்க்கிறார். அங்கே அவருக்கு பரிச்சயமான பெப்சி முரளியும் டி.சி.கிருஷ்ணமூர்த்தியும் இருந்ததால் நம்பிக்கையோடு கதவை திறந்த வெங்கடேச பண்ணையாரை சுற்றி வளைத்தது காவல்துறை. அதை சற்றும் எதிர்பார்க்காத வெங்கடேச பண்ணையார் காவல்துறையை தாக்க முயல, அதனைத் தொடர்ந்து நடந்த சில நிமிட நேர கலவரத்தில் சில துப்பாக்கி குண்டுகளின் ஓசைகளுக்குப் பிறகு சரிந்து விழுந்தார் வெங்கடேச பண்ணையார். சம்பவம் நடந்தது அதிகாலை என்பதால் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை முதல் இந்த செய்தி காட்டுத்தீயாக தமிழகம் முழுவதும் பரவுகிறது. 

 

சுட்டு வீழ்த்தப்பட்ட பண்ணையாரின் உடல் சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. செய்தி அறிந்த திரளான மக்கள் மருத்துவமனை வாசலில் திரண்டிருந்தனர். பண்ணையார் சார்ந்த சமூக அமைப்பினர்கள் பலரும் ஆவேசமாக மருத்துவமனை அருகே ஒன்று கூடி இருந்தார்கள். அவர்கள் அனைவரின் கோபமும் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராக திரும்பி இருந்தது. இதனால் கூட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தது. பண்ணையாரின் கர்ப்பிணி மனைவியான ராதிகா செல்வி தன் கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதபடி இருந்தார்.

 

venkatesa pannaiyar encounter

 

மறுநாள் 27 ஆம் தேதி மதியம் 12.30 மணி அளவில் வெங்கடேச பண்ணையாரின் உடல் பண்ணையாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரைக்கு வந்து சேர்ந்தது. தூத்துக்குடியிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரளத் தொடங்கினார்கள். பண்ணையாரின் உடல் சில மணி நேரங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஜெயலலிதா ஒழிக, அதிமுக ஆட்சி ஒழிக என்ற கோஷங்களை எழுப்பினார்கள். 

 

தூத்துக்குடியில் பெரும்பாலான இடங்களில் கடையடைப்பு செய்யப்பட்டிருந்தது. கானகம் என்ற ஊரில் அரசு பஸ் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. மற்றொரு ஊரில் லாரி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், அசாம்பாவிதங்கள் தொடரலாம் என்று அஞ்சிய காவல்துறை பண்ணையாரின் உடலை அடக்கம் செய்ய அழுத்தம் கொடுத்தது. எனவே  அன்று மாலை நான்கு மணிக்கு வெங்கடேச பண்ணையாருக்கு சொந்தமான அவரது தோட்டத்தில் பண்ணையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

வெங்கடேச பண்ணையாரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது என்கவுன்ட்டர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. பண்ணையாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி பண்ணையாரின் உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், அவை ஒரு மீட்டர் இடைவெளிக்குள் இருந்து சுடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், ஏழு குண்டுகளில் ஆறு குண்டுகள் உடலைத் துளைத்து வெளியேறி இருந்தன என்றும், ஒரு குண்டு மட்டும் சுவற்றில் பட்டு முனை மழுங்கி உடலை விட்டு வெளியேறாமல் இருந்தது என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பதிவாகி இருந்தது. ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து, வெங்கடேச பண்ணையார் எங்களை துப்பாக்கியால் சுட முயன்றார். பண்ணையாரோடு தங்கி இருந்த இன்னொருவர் எங்களை கட்டையால் தாக்கினார் அதனாலேயே நாங்கள் திருப்பி தாக்க நேர்ந்தது என்று தெரிவித்து இருந்தனர். 

 

மேலும் பண்ணையார் வீட்டை திறக்க மறுத்ததால் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றோம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பண்ணையார் தங்கி இருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் காவல்துறையை தாக்கிய சம்பவங்களுக்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்பதாலும் வெங்கடேச பண்ணையாரின் என்கவுன்ட்டர் என்பது காவல்துறையின் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதாக வெங்கடேச பண்ணையார் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது.

 

இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் கோபமான பண்ணையார் தரப்பு பண்ணையார் என்கவுண்ட்டரை ஒரு மர்ம மரணம் என்ற அடிப்படையில் தீர விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். காவல்துறையின் மீது வழக்கும் பதியப்பட்டது. அப்போது நடந்த சாத்தான்குளம் மற்றும் சைதாப்பேட்டை இடைத்தேர்தல்களில் வெங்கடேச பண்ணையார் அதிமுகவிற்காக தீவிர தேர்தல் வேலை செய்தவர் என்ற அடிப்படையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் வெங்கடேச பண்ணையார் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் வெங்கடேச பண்ணையார் கொலையை தீர விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஒய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அதில் திருப்தி அடையாத வெங்கடேச பண்ணையார் தரப்பு, இது எங்கள் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. கண்டிப்பாக வரும் தேர்தல்களில் இதற்கு பலி தீர்ப்போம் என்று பதிலடி கொடுத்து வந்தனர். 

 

அதிமுகவை பலி தீர்க்க காத்திருந்த பண்ணையார் தரப்பிற்கு 2004 ஆண்டு நடந்த மக்களவை தேர்தலும் திமுக-வும் கை கொடுத்தது. 2004-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பளராக பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை அறிவித்தது திமுக. பண்ணையாரின் மரணம் தொடர்பான அந்த பகுதி மக்களின் கோபம் ராதிகா செல்வியின் தேர்தல் வெற்றியை மிக எளிதாக உறுதி செய்தது. தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் தாமோதரனை ஒரு லட்சத்து எண்பத்து ஓராயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகவும் ஆனார். 

 

அமைச்சரான ராதிகா செல்வி அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தாலும் தனது கணவர் மரணத்திற்கான நீதியை மட்டும் அவரால் கடைசி வரை வென்றடுக்க முடியவில்லை. இதனால் வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு  நீதிமன்றத்தில் முறையிட்டார் ராதிகா செல்வி. ஆனால், ராதிகா செல்வியின் அந்த மனு மீதான விசாரணை கடந்த 2017 ஆம் ஆண்டுதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  நீதிபதிகள் நாகமுத்து மற்றும் அனிதா சுமந்த் அமர்வு, இந்த வழக்கு சிபிஐ மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உகந்தது தான் என்றாலும் அதிக காலதாமதம் ஆகிவிட்டதால் விரைவான விசாரணை என்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அமைந்து விடும் என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று ராதிகா செல்வியின் கோரிக்கை  மனுவை தள்ளுபடி செய்தது. 

 

தமிழக காவல்துறை வரலாற்றில் விலகாத மர்மமாய் முடிந்த வெங்கடேச பண்ணையாரின் மரணம் அதிகாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் எல்லை எதுவரைக்கும் நீளும் என்பதற்கான சாட்சியாக இப்போது வரை பேசப்பட்டு வரப்படுகிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !