Skip to main content

உரிமையை தர மறுக்கும் பாஜக மக்களுக்கு 'வேல்' கொடுக்க முன் வருவது ஏன்..? - திருமா சீற்றம்!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
fhg

 

 

மனுநீதி நூலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் சர்ச்சை எழுந்த நிலையில் இதுதொடர்பான பேராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் அந்த சர்ச்சைகள் தொடர்பாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியாதாவது, "இன்றைக்கு வேலை தூக்கிக்கொண்டு செல்கிறார்களே, அவர்கள் என்றைக்காவது சமூக நீதிக்கு எதிராக பேசி இருக்கிறார்களா? ஓபிசி மக்களுக்கு முக்கியமான தேவை என்பது சமூக நீதி. அதற்கு தற்போது பாதிப்பு வந்துள்ளது. இதற்காக இன்றைய வரையில் அவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா? மண்டல் பரிந்துரைகளை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது அதனை எதிர்த்து யார் போராட்டம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் வரலாற்றை அறியாதவர்களுக்கு சில செய்திகளை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். சமூக நீதி காவலர் வி.பி சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த எத்தனித்த போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் என்ற ஒரு தலித் தலைவர். அவர் இதை எதிர்த்தாரா? அல்லது வேறு எந்த இயக்கமாவது ஓபிசிக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்களா, அப்படி இருந்தால் கூறுங்கள் பதில் சொல்கிறோம். 

 

உங்களால் காலம் முழுவதும் தேடினாலும் சொல்ல முடியாது. அனைத்து தலித் தலைவர்களும் அந்த ஒதுக்கீட்டு முறைக்கு ஆதரவு தந்தார்கள். அதுகூட அதனை எதிர்ப்பவர்களுக்கு பிடிக்காமல் போனது. நீங்கள் ஏன் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்ற கேள்வியெல்லாம் சாதி வெறியர்கள் எழுப்பினார்கள். ஆனால் அவர்களின் வெற்று கூச்சலுக்கெல்லாம் எந்த தலித் தலைவர்களும் விலை போகவில்லை. தமிழ்நாட்டில் அதனை விடுதலை சிறுத்தைகள் அப்போது ஆதரித்தது. ஆனால் அத்வானி அவர்கள் ரத யாத்திரை சென்றார்கள். எதற்காக? ஓபிசி பிரிவினருக்கு எந்த இட ஒதுக்கீடும் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி தானே வீதி வீதியாக சென்றார்கள். கல்லூரியில் படிக்கு அந்த இனத்தை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடினார்களே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தர கூடாது என்பதை வலியுறுத்தி தானே! இதற்கு முன்பு அவர்கள் எதற்காகவாவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறார்களா? இதற்கு மட்டும் எதற்காக தெருவில் வந்து போராடினார்கள். திருமாவளவனை எதிரி என்று கூறும் டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் அத்வானியை அல்லவா எதிரி என்று கூற வேண்டும். 

 

ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராடிய திருமாவளவன் உங்கள் எதிரியா அல்லது இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறி யாத்திரை சென்ற அத்வானி உங்கள் எதிரியா என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வங்கி தேர்வில் ஒபிசி மாணவர்களுக்கு ஆறு சதவீத ஒதுக்கீட்டை போராடி பெற்று கொடுத்த விடுதலை சிறுத்தைகள் உங்கள் எதிரியா அல்லது அதை வேண்டாம் என்று கூறிய பாஜக உங்கள் எதிரியா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை கூட தெரியாமல் நீங்கள் "வேல் வேல் வால் வால்" என்று கத்திக்கொண்டு இருக்கிறீர்கள். உன் கையில் எதற்காக வேல் கொடுக்கிறான், படிக்க திருக்குறள் புத்தகம் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் எதற்காக இதை தூக்கிக்கொண்டு செல்லுங்கள் என்று அப்பாவி மக்களை வற்புறுத்துகிறார்கள், அவர்களின் நோக்கம் மதத்தின் பெயரால் மக்களை முட்டாளாக்கி வாக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணம்தான் பிரதானமாக இருக்கிறது. அவர்களின் நோக்கம் எப்போது நிறைவேறாது என்பதை மட்டும் இந்த நான் இப்போது தெளிவாக கூறுகிறேன்" என்றார்.