Skip to main content

வாஸ்து கோளாறு? சைலண்ட் மோடில் தினகரன்

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

 

வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டபோது வேட்பாளர்களாக இருந்த தி.மு.க. கதிர் ஆனந்தும், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகமும், நாம் தமிழர் தீபலட்சுமியும் இப்போது மீண்டும் களம் காண்கிறார்கள். சைலண்ட் மோடில் இருக்கும் அ.ம.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. 


 

தேர்தல் நிறுத்தப்பட்டபோது போட்டியிட்ட பாண்டுரங்கன், தினகரனை நம்பி ஏராளமாக செலவு செய்து திண்டாட்டத்தில் இருக்கிறார். அதேபோல் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர்களும் கடனாளிகளாகிவிட்டனர். இங்கிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் வரிசையில் சிவசங்கரன் அ.தி.மு.க.விலும் முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் தி.மு.க.விலும் அடைக்கலமாகிவிட்டனர். மற்றவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்களாம்.


 

ttv dhinakaran



ஆகையால் தேர்தல் தோல்வியில் இருந்து தினகரன் இன்னும் எழுந்துவரலையாம். அதோட தனது தொடர் சங்கடங்களுக்கு, இப்ப இருக்கும் அடையாறு வீட்டின் வாஸ்து கோளாறுதான் காரணம்ன்னு அவர் நினைக்கிறாராம். அதனால் கொஞ்சநாள் புதுவையில் போய் ஸ்டே பண்ணலாமாங்கிற யோசனை அவருக்கு வந்திருக்காம். இந்த நிலையில் அவர் கூடாரத்தில் இருக்கும் திருச்சி மனோகரன் அ.தி.மு.க. பக்கமும், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தி.மு.க. பக்கமும் தாவப் போறதா வந்த தகவலால், தினகரன் மேலும் நொந்து போயிட்டாராம்.


 

இந்த நிலையில் திங்கள்கிழமை தருமபுரி பாப்பிரெட்டிபட்டியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அதில் அமமுக போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.