Skip to main content

வைரமுத்து மன்னிப்பு கேட்கக் கூடாது: வன்னி அரசு

Published on 14/02/2018 | Edited on 14/02/2018

ஆண்டாளை தேவதாசி என்று வைரமுத்து கூறியதாக கூறி, அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று முதலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய ஜீயர், பிறகு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இப்போது அவர் மீண்டும் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறி போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு நக்கீரன் இணையதளத்திடம் கூறியது:-

 

vanni arasu


 

கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்து அப்போதே இந்த பிரச்சனையை முடித்துவிட்டார். நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார் ஜீயர். உண்ணாவிரதம் இருந்தபோது யார் யாரோ தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக தெரிவித்தார். சோடா பாட்டில் வீசவும் தெரியும் என்று பேசிவிட்டு பின்னர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டுவிட்டதாக ஜீயர் சொல்கிறார். பிரச்சனை முடிந்த பின்னர், கெடு விதித்த 3ஆம் தேதியையும் கடந்து இடைவெளி விட்டு தற்போது மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால், ஏதோ ஒரு ஆலோசனை நடந்துள்ளது. அந்த ஆலோசனையில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்பதை ஜீயர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
 

யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை. தன் பின்னால் யாரும் இல்லை. தன்னை யாரும் இயக்கவில்லை என்று ஜீயர் சொல்கிறாரே?
 

அது ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்தி அல்ல. சமாளிக்கிறார்கள். இதன் பின்னால் பாஜக, இந்து மத அமைப்புகள் உள்ளன. ஜீயர்கள், ஆதினங்கள் இதுவரை மக்களுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டார்களா?  வைணவம், சைவம் மடங்களை உருவாக்க வேண்டும். இந்து அறநிலையத்துறையை வைணவம், சைவம் அறநிலையத்துறையாக மாற்ற வேண்டும், நாங்கள் இந்துக்கள் இல்லை என்று மதுரை ஆதினம் சொல்லியிருக்கிறாரே. அதற்கு எதிராக இவர் போராட்டம் நடத்தினாரா. கேள்வி எழுப்பினாரா. இலங்கையில் ஏகப்பட்ட இந்து கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினார்கள். இந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்போது இந்த ஜீயர் போராடினாரா. ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இதற்கெல்லாம் ஜீயர் எதிர்த்து போராடியிருந்தால், இவர் உண்மையிலேயே இந்து மதத்திற்காக குரல் கொடுக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியும். இப்போது அவர் உள்நோக்கத்தோடு உண்ணாவிரதம் இருக்கிறார். இவர்களை வைத்து தமிழ்நாட்டில், பெரியார் மண்ணில் எப்படியாவது இந்துத்துவா அரசியலை, பாஜகவை வளர்ப்பதற்காக சிலர் ஜீயர் மூலமாக முன்னெடுக்கிறார்கள். அதற்காக ஜீயர் பலிகாடா ஆகியிருக்கிறார். இந்த உண்ணாவிரதம் முற்றிலும் ஏமாற்று வேலை. இதனை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
 

சூத்திரர்கள் என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இழிவுப்படுத்தியது இதே இந்து மதம்தான். அதற்காக இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமேயொழிய, வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது நடக்காத காரியம். இது தொடர்பாக வைரமுத்து அவர்கள் மன்னிப்பு கேட்கக் கூடாது. ஆண்டாள் கோவிலுக்குப்போய் விளக்கம் கொடுப்பதும் சரியல்ல என்றார்.