Skip to main content

"இப்போது விட்டுவிட்டால் பிணத்தை எடுத்துவரக் கூட இந்தி பேசச் சொல்லுவார்கள்..." - வைரமுத்து காட்டம்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

hkj

 

இந்தியாவில் மீண்டும் இந்தி தொடர்பான பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுப் பணிகளுக்கு வருபவர்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் சூழ்நிலையில், இதுதொடர்பான எதிர்ப்பு போராட்டங்களும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாடலாசிரியர் வைரமுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். 

 

அவர் பேசியதாவது, " ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதனை எதிர்த்துக்கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு இது 85வது ஆண்டு. இத்தனை ஆண்டுகளாக ஒரு அரசு இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. அதனைத் தமிழக மக்களும், அரசும் எதிர்த்து வருகிறார்கள். இது சாதாரண நிகழ்வு அல்ல. தமிழை அதிகாரத்தால் அழிக்கப் பார்த்தார்கள்.சாஸ்திரத்தால் அழிக்கப் பார்த்தார்கள், தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்கப் பார்த்தார்கள். தற்போது சட்டத்தால் தமிழை அழிக்கப் பார்க்கிறார்கள். 

 

இது ஒன்றும் காகிதத்தால் எழுந்த மொழி அல்ல, அவ்வளவு எளிதில் யாராலும் எளிதில் எதுவும் செய்ய முடியாது. இந்த மொழியைச் சாஸ்திரத்தாலும் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்பு நடைபெற்ற இந்தித் திணிப்பு எல்லாம் கொசுக் கடிப்பதைப் போல இருந்தது. அது நம்மைக் கடிப்பதும், அதை நாம் அடிப்பதும் நம் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் தற்போது ஆட்டுக்குட்டிக்கு மஞ்சள் தெளித்து பூ போட்டு வெட்ட அரிவாள் தயாராகிக்கொண்டிருப்பதைப் போல ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். 

 

இதுவரை பலமுறை தமிழகத்தில் இந்தித் திணிப்பு போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இந்த முறை 1937ம் ஆண்டு நடைபெற்றதை விட, 1965ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை விடத் தமிழர்கள் 2022ம் ஆண்டு இன்னும் வீரியமாக இருக்க வேண்டும்.  மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி, பயிற்று மொழியாக இந்தி என்ற முறைக்கு இவர்கள் வரத் துடிக்கிறார்கள். குறிப்பாக இந்திய அயலக பணித் தேர்வு இந்தியில் மட்டுமே நடக்கும் என்றால் அந்தத் தேர்வில் வெற்றிபெற்று வெளிநாட்டுத் தூதரகத்தில் பணியாற்றும் ஒருவரிடம், ஒரு தமிழருக்கோ, மலையாளிக்கோ, பஞ்சாபிக்கோ பிரச்சனை என்றால் தூதரகம் சென்று எப்படி தங்களின் பிரச்சனைகளைக் கூறுவார்கள். பிணத்தை எடுத்துவரக் கூட இந்தி தெரிந்தால் தான் முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

 

நாங்கள் தமிழை வாழ்வுக்கானதாக நினைக்கிறோம், ஆங்கிலத்தை வசதிக்கானது என்று நினைக்கிறோம். நாங்கள் வாழ்வோடும் இருப்போம். வசதியோடும் இருப்போம். இந்தியைப் படித்தால் ஊமைகளாக, அறிவற்றவர்களாக, மூன்றாம் தரக் குடிமக்களாக இருக்க இது வழி செய்துவிடும். அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆங்கிலத்தை அகற்றப் பார்க்கிறீர்கள். ஆங்கிலம் எங்களுக்கு அந்நிய மொழிதான். ஆனால் அறியாத மொழி அல்ல. இந்தி உள்நாட்டு மொழி தான். ஆனால் எங்களுக்கு அந்நிய மொழி. ஆங்கிலத்தை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியாது.

 

200 ஆண்டுகள் இந்தியத் தேசத்தில் பேசப்பட்ட, பேசப்பட்டு வரும் மொழி, அவ்வளவு எளிதில் அதனை யாராலும் புறந்தள்ளி மாற்று மொழியைக் கொண்டுவர முடியாது.  இந்தி இந்தியத் தேசத்து மொழிதானே அதைக் கற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் இந்தியை அனுமதித்தால் என்ன நடக்கும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முந்திரி மூட்டையில் 10 வண்டுகளை நுழையவிட்டால் என்ன நடக்குமோ அதுதான் இந்தியை அனுமதித்தால் நடக்கும். 10 வண்டுகள் தானே என்று இரண்டு மாதம் கழித்து நாம் மூட்டையைத் திறந்து பார்த்தால் மூட்டையில் முந்திரி இருக்காது, வண்டுகள்தான் இருக்கும். தமிழ் முந்திரி மாதிரி, இந்தி வண்டுகள் போல, எனவே நாம் வண்டுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றார்.


 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.