Skip to main content

இரவுக்கு ஆயிரம் கண்கள்!

ஒரு கொலை. அந்தக்கொலையை செய்தது யார்? இந்த கேள்விக்கான தேடல்தான் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ஒன்லைன். 
 

iravukku ayiram kangal

 


ஆனால், கணவன்களால் கண்டுகொள்ளப்படாத மனைவிகளின் மனநிலை. தனிமையில் இருக்கும் பெண்களுக்கு மிஸ்டுகால் மூலம் வலைவிரிக்கும் ராங்-கால் வில்லன்கள். மனைவி பிள்ளைகளை பிரிந்திருக்கும் 60+ ஜொள்ளர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் வலைவீசும்  ப்ளாக்மெயில் வில்லிகள் என படத்தில் பல லைன்கள் உள்ளன. 

வானத்துக்கும் பூமிக்கும் பறந்து பறந்து ஃபைட்டிங்... பஞ்ச் டயலாக் பேசி காதை பஞ்சர் ஆக்குவது... என்றில்லாமல் கால் டாக்ஸி டிரைவராக கேஷுவலாக வலம் வருகிறார் ஹீரோயிஸமில்லாத ஹீரோ அருள்நிதி. காதலி கடத்தி வைத்திருக்கும் இடத்தை ட்ரேஸ் செய்துகொண்டு போகும் காட்சியில் நோ சினிமாத்தனம். ஒவ்வொரு நிமிடமும் பெண் குழந்தைகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் கடத்தப்பட்ட காதலி இருக்கும் இடத்தை தேடிக்கண்டுபிடிக்கும் ஹீரோவின் ஸ்மால் யுக்தி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. அக்காட்சியிலேயே, ஹீரோவின் 'புலனாய்வு' தன்மையை ஆடியன்ஸுக்கு காண்பித்துவிடுகிறார் இயக்குனர் மு.மாறன்.

"போலீஸுக்கு தேவை உண்மை குற்றவாளி இல்ல. எஃப்.ஐ.ஆர். போட்டு உள்ள தள்ள ஒரு ஆளு" என்ற வசனம் சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டு நிரூபிக்கப்படாமல் சிறையிலேயே கொலைசெய்யப்பட்ட ராம்குமார் போன்றவர்களை நினைவுபடுத்திவிடுகிறது. 

கிரைம் கிங் ராஜேஷ்குமாரின் கிரைம் திரில்லர் கதைகளைப்போல் ட்விஸ்டுக்குள் ட்விஸ்ட்  என படம் முழுக்க ட்விஸ்ட்களால் பின்னப்பட்டிருக்கிறது. கொலையை செய்தது யார்? என்று ஹீரோ கண்டுபிடிக்கப்போகிறார் என பதைபதைப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் அதிலும் ஒரு ட்விஸ்ட் அடித்திருக்கிறார் இயக்குனர். படத்தின் எண்ட் கார்டுபோடும்வரை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பாமல் கண்களை ஸூம் பண்ணிக்கொண்டுப் பார்த்தால்தான் படத்திலுள்ள ஆயிராமயிரம் ட்விஸ்ட்டுகளுக்கான அர்த்தங்களும்  புரியும். ஒரு ஃபோன் கால் வருது அட்டெண்ட் பண்ணலாம்...பாப்கானை கையைவிட்டு குனிந்து அள்ளி சாப்பிடலாம்... பாடல் வரும்போது பாத்ரூம் போகலாம் என்று ஒரு நொடி கவனம் சிதறினாலும் ம்ஹூம் வெரி சாரி...திரும்பவும் டிக்கெட் வாங்கித்தான் படம் பார்க்கவேண்டும். 

 

 


ஒரு படத்தை காமெடியாக்குவதும் திரில்லிங் ஆக்குவதும் காட்சிகள் மட்டுமல்ல. மிக முக்கியமானது பின்னணி இசைதான். விக்ரம் வேதாவில் மிரட்டிய மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ். இப்படத்திலும் மிரட்டி திரில்லிங் படம்தான் என்பதை நிரூபித்துவிட்டார். ஒளிப்பதிவு 'கிலி'ப்பதிவு. டைட்டிலிற்கேற்ப இரவுகளையே படம்பிடித்து திகிலூட்டுகிறார் ஒளிப்பதிவாளர். 

ப்ளாக்மெயில் வில்லனாக பெர்ஃபெக்டாக நடித்துள்ளார் அஜ்மல்.  படம் முழுக்க பல படங்களில் பாராட்டுகள் பெற்ற தரமான கதாப்பாத்திரங்கள் என  திரைக்கதைக்கு வெயிட் கூட்டுகிறார்கள். குறிப்பாக, ஓப்பனிங்கில் வில்லனாக காண்பிக்கப்படும் ஆனந்தராஜ்...ஜொள்ளனாகி... 'காம'டியனாகி சிரிக்கவைத்து... கடைசியில் ஓர் நல்ல அப்பாவாக மாறிவிடுகிறார். 

கொலையை அவர் செய்திருப்பாரா? இவர் செய்திருப்பாரா? என்று க்ளைமாக்ஸ்வரை சீட்டிங் செய்யும் திரைக்கதை போலீஸையும் ஏமாற்றிவிடுகிறது.  ஆனால், ஆடியன்ஸை ஏமாற்றக்கூடாது என்பதால்... கிரைம் எழுத்தாளராக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் மூலம் உண்மையான கொலையாளியை க்ளைமாக்ஸில் 'கதை அல்ல நிஜம்' என சொல்லியிருப்பது திரைக்கதையில் புதிய யுக்தி. ஆனால், நூலளவு நுட்பத்துடன் கவனிக்கவில்லை என்றாலும் அது 'நிஜமல்ல கதை' என்று மிக மெல்லிய கண்ஃப்யூஷனை உண்டாக்கலாம். 

 

 


ஹீரோயின் மகிமா. பழமுதிர்ச்சோலையில் வைக்கப்பட்ட பளபளப்பான ஆப்பிள் போல் அழகாக இருக்கிறார். தினந்தோறும் அதைச் செய்கிறேன் இதைச்செய்கிறேன் என்று செல்லும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பின்னால் செல்லும் ஊடகங்கள் போல... ஹீரோவை பின் தொடர்ந்து...ஹீரோ வில்லன்களை புரட்டி எடுக்கும் கட்சிகளில் 'அப்படி போடு... இப்படி அடி' என்று உசுப்பேற்றும் ஹீரோயினாக இல்லை மஹிமா. ஹீரோயின் என்பதற்காக கதை முழுக்க பயன்படுத்தாமல்...கதைக்கு தேவையான இடங்களில் மட்டும் பயன் படுத்தியிருக்கிறார் இயக்குனர். 'உயிர் உறவாக' நச்சென்ற பாடலில் இச்சென்று இதயத்தில் உறவாடுகிறார். 

ஏப்பா எப்பப்பா? பாடல் இன்னும்  திரில்லிங்கை கூட்டுகிறது. படம்பார்த்துவிட்டு வெளியே வந்தபிறகு, "அந்த பச்ச கலர் பைக் எப்படி அஜ்மல் கைக்கு வந்தது?" "லட்சுமி ராமகிருஷ்ணனை கொலை செய்தது யார்?" இப்படி சிற்சில  கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தாலும் இன்னொருமுறைப் பார்க்கத்தூண்டும் படம். கதைக்குள் ஆயிரம் கதைகள், ஃப்ளாஷ்பேக்கிற்குள் ஆயிரம் ஃப்ளாஷ்பேக்குகள், ட்விஸ்ட்டுக்குள் ஆயிரம் ட்விஸ்ட்டுகள் இதுதான் இரவுக்கு ஆயிரம் கண்கள்.

புதிய திரைக்கதை... புதிய முயற்சி...  புதிய யுக்தி...புதிய இயக்குனர் மு.மாறனுக்கு வாழ்த்துகள்! கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதுபோன்ற படங்களை தேர்ந்தெடுக்கும் அருள்நிதிக்கு பூங்கொத்துகள்!