Skip to main content

பாலியல் டார்ச்சர்! தற்கொலைக்கு தள்ளப்படும் பெண் மருத்துவர்கள்!!!

Body
dddd

 

பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் பரிசோதித்து அதற்கான சான்றிதழ் அளிப்பவர்களே அரசு பெண் மருத்துவர்கள்தான். அப்படிப்பட்ட பெண் மருத்துவர்களே, உயரதிகாரிகளின் பாலியல் டார்ச்சருக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அதிர்ச்சி புகார்கள் நக்கீரனுக்கு வர விசாரணையில் இறங்கினோம்.

 

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவர் பெண் மருத்துவர் ஃபெமிலா. கடந்த 7 வருடங்களுக்கு மேலாக உயரதிகாரிகளின் டார்ச்சர்களுக்கு ஆளாகியிருக்கிறார். கடந்த, 2013-ல் நெல்லை மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்த ஃபெமிலாவுக்கு வடக்கன்குளம் பி.எம்.ஓ (Block Medical Officer) எனப்படும் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் மனரீதியாக நெருக்கடிகளை கொடுத்தார் என்பதுதான் இவரது குற்றச்சாட்டின் ஆரம்பம்.

 

இதுகுறித்து, ஃபெமிலா நம்மிடம், ""அப்போதைய, பி.எம்.ஓ கோலப்பன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை மக்களுக்காக பயன்படுத்தப்படும் மருந்துமாத்திரைகளை எடுத்துச்சென்று தனது சொந்த கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளிடம் விற்றுவிடுவார். அதேபோல், அவருடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இ.சி.ஜி, எக்ஸ்-ரே எல்லாம் இங்கு வரச் சொல்லித்தான் எடுப்பார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

 

இதனையெல்லாம், நான் கண்டுகொள்ளாமல் இருக்க எனக்கு பாலியல் ரீதியாக வலைவீச ஆரம்பித்தார். நான், ஒப்புக்கொள்ளாததால் ஃபோனில் அடிக்கடி இரட்டை அர்த்தங்களுடன் பேசி டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்றும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் எதையும் சாதிக்கலாம் என என்னிடம் தூது அனுப்பினார்.

 

அதனால், அப்போதைய டிடியிடம் (துணை இயக்குனர்) கூறினேன். அவர், கொஞ்சம்கூட அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இதனால், கலெக்டர் மீட்டிங்கில் கலெக்டரிடம் கூறினேன். அன்றைக்கு இரவே நான் டூட்டியில் இருக்கும்போது வெட்டும் பெருமாள் எனும் ரவுடியை வைத்து என்னை கொலை செய்ய முயற்சித்தார் கோலப்பன். இது, சம்மந்தமாக பணகுடி போலீசாரும் வழக்கு பதிவு செய்தார்களே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கல. எனவேதான், டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு உயிர் தப்பிவிடுன்னு என்னோடு வேலை பார்த்தவர்கள் சொன்னதால், கவுன்சிலிங் மூலம் டிரான்ஸ்பர் பெற்று 2017-ல் சொந்த மாவட்டத்தில் முட்டத்துக்கு வந்தேன்.

 

dddd

 

இந்த நிலையில்தான், மீண்டும் அதைவிட அதிகமான பாலியல் டார்ச்சர்கள் தொடர ஆரம்பித்தன. 2019 டிசம்பரில் குமரி மாவட்டத்துக்கு டிடியாக (துணை இயக்குனர்) வந்தார் போஸ்கோ ராஜ். இவரும் கோலப்பனின் நண்பர் என்பதால் அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை. டி.டி.யே என்னுடைய லைனுக்கு வந்து, "என்னை நீ எப்போ தனியா வந்து சந்திக்கிறியோ, அப்போதான் உனக்கு நான் உதவி செய்வேன்'' என்றார். 17 பி சார்ஜ் மெமோவை என் வீட்டு கதவில் ஒட்டவைத்தார். நிறைய டார்ச்சர். முதலமைச்சருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதுக்குமேல, என் உயிரைவிடுறதைவிட வேற வழி தெரியல'' என்கிறார் கண்ணீருடன்.

 

டாக்டர் ஃபெமிலாவின் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்று நாம் விசாரித்தபோது, "டிடி போஸ்கோ ராஜால் பாதிக்கப்படும் பெண் மருத்துவர்கள் வெளியே சொல்லக்கூடிய தைரியம் இல்லாதவர்கள். ஃபெமிலா மட்டும் துணிந்து சொல்லியும் மருத்துவதுறை இன்னும் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இத்துறைக்கே அசிங்கமாக உள்ளது'' என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள்.

 

ddd

 

அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர், "பெண் பி.எ.ஓ., விவாகரத்து ஆன இன்னொரு பெண் மருத்துவர் ஆகியோர் இதேபோன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டனர். நாகர்கோயிலில் ஒரு மருத்துவருக்கு சொந்தமான லாட்ஜைத் தான் சுகாரத்துறை துணை இயக்குனர் தனது அலுவலமாக பயன்படுத்திவருகிறார். அவரது வசூல் சென்னையில் உள்ள உயரதிகாரிகள் வரை செல்கிறது'' என்றனர்.

 

குற்றச்சாட்டுகள் குறித்து துணை இயக்குனர் போஸ்கோ ராஜிடம் நாம் கேட்டபோது, "என்னைப்பற்றி கூறுவது எல்லாமே பொய். இது சம்மந்தமாக இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளேன். அந்த பெண் மருத்துவர் ஒழுங்கா வேலைக்கு வர்றதில்ல. கையெழுத்து போட வர்றதில்ல. அவர் வேலை பார்த்த எல்லா இடங்களிலுமே இப்படித் தான் உயரதிகாரிகள்மீது புகார் கொடுத்துள்ளார்'' என்றார்.

 

வடக்கன் குளம் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பனிடம் பேசியபோது, "பணியில் அலட்சியமாக நடந்துகொண்டதால் டி.டி அவரை டிரான்ஸ்பர் செய்ததால் இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகளை வீசுகிறார். இவங்க, டார்ச்சரால பொன் சங்கர்னு ஒரு டாக்டர் டிரான்ஸ் ஃபர் வாங்கிட்டு போயிட்டார். எனக்கும் நாகர்கோயில் டிடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழக்கமும் இல்லை'' என்றார்.

 

இது, வெறும் நிர்வாக ரீதியான பிரச்சனை அல்ல. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள் உயரதிகாரிகளின் பாலியல் ரீதியான டார்ச்சர்களுக்கு ஆளானால் அது அவர்களின் பணியை பாதிக்கும். அதனால், பாதிக்கப்படுவது காசு செலவழித்து வைத்தியம் பார்க்க முடியாத ஏழை நோயாளிகளே.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்