Skip to main content

பயமுறுத்தும் அளவுக்கு அமித்ஷாவிடம் என்ன இருக்கிறது? 

ddd

 

 

ரிஸ்க்கான பீகார் தேர்தலை நடத்தி முடித்து ரிலாக்ஸான இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை கமிஷனர் சுனில் அரோராவிடம், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநில தேர்தல் குறித்து விவாதித்துள்ளது பிரதமர் அலுவலகம்.

 

தென்மாநிலங்களில் இரண்டாம் நிலை கரோனா தொற்று பரவும் ஆபத்தான சூழல் இருப்பதாக மத்திய அரசிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் எச்சரிக்கை செய்துள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இந்த ஆலோசனை முக்கியத்துவமானது என்கிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள். எந்தச் சூழலிலும் தேர்தலை பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது என்கிற உத்தரவாதத்தை தந்திருக்கிறாராம் சுனில் அரோரா. இந்த நிலையில், பிரதமர் மோடியின் உத்தரவின்படி தமிழக அரசுடன் இணைந்து சில திட்டங்களை தொடங்கி வைக்க 21-ந்தேதி சென்னைக்கு வரும் அமித்ஷா, அப்படியே தமிழக பா.ஜ.க.வினருடன் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்கிடையே, தமிழக தேர்தல் பற்றி அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவுடன் விரிவான ஒரு ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார் பிரதமர் மோடி.

 

அமித்ஷா வருகை பலரையும் பயமுறுத்தும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் சொன்ன நிலையில், அமித்ஷா என்ன கொம்பனா? எனக் கேட்டார் அமைச்சர் சி.வி.சண்முகம். பயமுறுத்தும் அளவுக்கு அமித்ஷாவிடம் என்ன இருக்கிறது என டெல்லி சோர்ஸ்களிடம் கேட்டபோது, பீகார் தேர்தலில் நடத்திய அரசியல் விளையாட்டை போல, தமிழகத்திலும் விளையாட திட்டமிடுகிறது பா.ஜ.க. தலைமை. பீகாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியை சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. தொடர்ந்தது. முதல்வர் நிதிஷ்குமாருடன் சரிபாதி எண்ணிக்கையில் சீட் ஷேரிங்கை உறுதி செய்து, தேர்தலை மோடியும் அமித்ஷாவும் எதிர்கொண்டனர். கூட்டணியில் இருந்த சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை சூழ்ச்சி செய்து வெளியேற்றியது பா.ஜ.க. லோக் ஜனசக்தி தனியாக நின்றது. இதனால், நிதிஷ்கட்சிக்கு கிடைக்க வேண்டிய தலித் வாக்குகளை சிராக் பாஸ்வான் பிரித்தார்.

 

ddd

 

அதேபோல, மோடி-நிதிஷ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் வலிமைமிக்க ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணியில் இணைய திட்டமிட்டிருந்த இஸ்லாமிய தலைவரான ஓவைசியையும் தடுத்தது பா.ஜ.க. ஓவைஸியும் தனியாக களமிறங்க, இஸ்லாமிய வாக்குகள் ஆர்.ஜே.டி.-காங்கிரசுக்கு கிடைக்காமல் பல தொகுதிகளில் பிரிந்து போனது. இப்படிப்பட்ட தேர்தல் சூழ்ச்சிகளால் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் நிதிஷ்குமாரின் ஐ.ஜ.த. கட்சியைவிட அதிக இடங்களை கைப்பற்றியது பா.ஜ.க. அதாவது, தனது பார்ட்னரான நிதிஷ்குமாரை அரவணைத்தபடியே தங்களைவிட அதிக இடங்களில் ஜெயிக்க விடாமல் செய்து பலகீனப்படுத்தியிருக்கிறது மோடி-அமித்ஷா கூட்டணி. தற்போது, முதல்வராக நிதிஷ் பொறுப்பேற்றிருந்தாலும் அடுத்த 5 ஆண்டுகள்வரை அவர் பதவியில் நீடிக்க உத்தரவாதத்தை மோடி தரவில்லை.

 

இதே சூழ்ச்சியைத்தான் தமிழகத்திலும் புகுத்த மோடி-அமித்ஷா விவாதித்துள்ளனர். தற்போதுவரை ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க., எடப்பாடி-ஓ.பி.எஸ்.சை மிரட்ட துவங்கியுள்ளது. பா.ஜ.க.வுக்கு பீகாரை போல தமிழக கள நிலவரம் இல்லையென்றாலும் 100 சீட்டுகளில் ஆரம்பித்து 60 சீட்டுகளை அ.தி.மு.க.விடமிருந்து பெற்றுவிட துடிக்கிறது. முதலில், அ.தி.மு.க. தோள்மீது கைகளைப் போட்டுக்கொண்டே கூட்டணியில் அதிக இடங்களை பெறுவதும், தேர்தலில் அதி.மு.க.வை பலகீனப்படுத்து வதும் மோடி-அமித்ஷாவின் திட்டம். சென்னை வரும் அமித்ஷா, எடப்பாடி-ஓ.பி.எஸ்.சுடனான இந்த பேரத்தை துவக்கவிருக்கிறார்.

 

ddd

 

இதற்கிடையே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியை கைப்பற்றும் என தொடர்ச்சியாக ரிப்போர்ட் தந்து வருகிறது மத்திய உளவுத்துறை. தி.மு.க.வுக்கு கூட்டணி வலிமை பலமாக இருப்பது ஒருபுறமிருந்தாலும் அதன் அசைக்க முடியாத வாக்கு வங்கிதான் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கும் கூடுதல் வலிமையைத் தருகிறது என்பதே உளவுத்துறை ரிப்போர்ட்டின் சாரம்சம். அதன் அடிப்படையில் அமித்ஷாவுடனும் ஜே.பி.நட்டாவுட னும் விவாதித்திருக்கிறார் மோடி. அதில், தி.மு.க.வின் வாக்கு வங்கியை சேதாரமாக்குவதும், தி.மு.க.விடமிருந்து காங்கிரசை பிரிப்பதும்தான் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற விடாமல் தடுப்பதற்கான வழி.

 

ddd

 

தி.மு.க.வில் மாவட்டம் தோறும் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றி ஒருமுகப்படுத்தக்கூடிய வலிமையான நபர், மு.க.அழகிரி. அவரை தனிக் கட்சி ஆரம்பிக்க வைத்து தி.மு.க. அதிருப்தியாளர்களை அவர் தலைமையில் ஒருங்கிணைத்தால் தி.மு.க.வின் வாக்கு வங்கியை உடைத்து விடலாம் என விவாதிக்கப்பட்டு அதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளனர். சமீபத்தில், மத்திய உளவுத்துறையின் தென்மண்டல அதிகாரிகள் இருவர், மு.க.அழகிரியை சந்தித்துள்ளனர் என்று நம்மிடம் விவ ரிக்கிறார்கள். இந்த சூழலில்தான், தனது ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்தியுள்ள அழகிரியின் அரசியல் ஆட்டம் ஜனவரியில் துவங்கும் என்கிற அவரது ஆதரவாளர்கள், பா.ஜ.க.வில் இணைய அழகிரிக்கும் விருப்பம் கிடையாது. அதனால் தனிக் கட்சி துவக்க வைத்து தி.மு.க. வாக்கு வங்கியை சிதைக்கும் அசைன்மென்ட்டை அழகிரியிடம் திணித்துள்ளது பா.ஜ.க. தலைமை. டிசம்பர் 12ல், ரஜினியின் அரசியல் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் அழகிரியுடம் உள்ளது என்கின்றனர்.

 

ddd

 

பரபரப்பும் நெருக்கடியும் மிகுந்த நிலையில், தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டத்தைக் 23-ந்தேதி கூட்டுகிறார் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ""தேர்தலை மையப்படுத்தி தி.மு.க.வை சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடிகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆட்சியை கைப்பற்றுமளவுக்கு கட்சியின் வாக்கு வலிமையும், மக்களின் ஆதரவும் தி.மு.க.வுக்கு இருந்தாலும் எளிதாக வெற்றிபெற பா.ஜ.க. அனுமதிக்காது. அதனால் தான், எங்களிடம் ஸ்டாலின் பேசும் போது, வெற்றி அவ்வளவு எளிதானதல்ல; போராடித்தான் ஜெயிக்க வேண்டியதிருக்கும் என சொல்லி வருகிறார். அழகிரியை வைத்து பா.ஜ.க. ஆடப்போகும் விளையாட்டு ஒரு புறம், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கான சீட் ஷேரிங் மற்றொரு புறம் என சிக்கல்கள் இருக்கிறது. காங்கிரசுக்கு அதிக சீட் வேண்டாம் என மா.செ.க்களும், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதையெல்லாம், விவாதிக்கத்தான் உயர்நிலை கூட்டம்'' என்கிறார் அழுத்தமாக.

 

சீட் ஷேரிங்கில் காங்கிரஸ் பிரச்சனை செய்வதாக வரும் தகவல் குறித்து தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் நாம் பேசியபோது, ""சீட் ஷேரிங் குறித்து பேசுவதற்கான காலம் இப்போது இல்லை. காலம் வரும்போது எங்களின் எதிர்பார்ப்பை தி.மு.க. தலைமையிடம் சொல்வோம். அதேசமயம், ராகுல்காந்தியை பிரதமராக ஆதரவு தெரிவித்த ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் துணை நிற்கும். அதனால், தி.மு.க.விடம் பேர அரசியலை செய்ய மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க.-அதி.மு.க. அதிகார துஷ்பிரயோக அரசியலை முறியடிக்க தி.மு.க.வுடன் கைக்கோர்த்து தேர்தலை சந்திக்கவே முடிவு செய்திருக்கிறோம். பீகார் தேர்தல் களமும், தமிழக தேர்தல் களமும் வெவ்வேறானவை. தமிழகத்தில் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது'' என்பதோடு முடித்துக்கொண்டார் தினேஷ் குண்டுராவ்.

 

ddd

 

அதே நேரத்தில், கௌரவமான எண்ணிக்கையில் இடங்களை பெற வேண்டும் என சோனியாவை வலியுறுத்தி வருகிற காங்கிரஸ் எம்.பி.க்கள், ""சில பல புள்ளிவிபரங்களைச் சொல்லி காங்கிரசுக்கு எதிராக தி.மு.க. தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் காய்களை நகர்த்தி வருகிறார். அதையேதான் நம்மிடம் பிரயோகித்து வருகிறது தி.மு.க. பீகார் தேர்தலில் காங்கிரஸ் சறுக் கியதை தி.மு.க. சுட்டிக்காட்டினால் அதனை நாம் ஏற்கக் கூடாது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற இடங்களில் 50 சதவீதத்தை குறைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. எண் ணிக்கையை குறைப்பதை நாம் ஏற்பதாக இருந்தால் 10 சதவீத இடங்களை குறைக்க மட்டுமே சம்மதிக்கலாம்'' என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனையே, ராகுல் காந்தியிடமும் வலியுறுத்தியிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.

 

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் மண்டல பொறுப்பாளர்கள், மா.செ.க்கள் கூட்டத்தை 20-ந் தேதி ஓபிஎஸ்சும் எடப்பாடியும் கூட்டியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் அரசியலையும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் அமித்ஷாவின் வருகையும் அவரை வரவேற்பது பற்றியும் விவாதிக்கிறார்கள். அ.தி.மு.க.வின் மண்டல பொறுப்பிலுள்ள சீனியர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக இதுவரை பா.ஜ.க.வின் சொல்லுக்கு தலையாட்டினோம். ஆனா, தேர்தல் கூட்டணியில் அப்படி இருக்க மாட்டோம். தி.மு.க.வில் காங்கிரசுக்கு எத்தனை இடங்களோ அதைவிட குறைவாகத்தான் பா.ஜ.க.வுக்கு சீட்டுகளை ஒதுக்க வேண்டுமென ஓபிஎஸ்சிடமும் இபிஎஸ்சிடமும் வலியுறுத்துவோம்'' என்கின்றனர். புதன் இரவு வரை அமித்ஷாவின் பயணத் திட்டம் குறித்து தமிழக உளவுத்துறைக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. மெடிக்கல் பரிசோதனையை பொறுத்தே பயணத் திட்டம் அமையும் என்று டெல்லியிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தின் சூட்சுமக் கயிற்றைத் தன் கையில் வைத்து இஷ்டப்படி இழுக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.

(கடந்த நவம்பர் 20 - 24ல் வந்த கட்டுரை)

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்