இளம் ஊடகவியலாளர் ஷாலினி எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கவிதை எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்ட அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அவரின் கவிதைகளை தொகுத்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட அவரின் நண்பர்கள் முடிவு செய்தனர். இந்த கவிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளன் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து...
"விபத்தில் காலமான அருமை தங்கை இரா.ஷாலினி அவர்களின் நினைவை போற்றும் வகையில், அவருடைய எண்ணங்களை எல்லாம் தொகுத்து கவிதை நூலாக வடித்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் இதை வெளியிட்டுள்ள ஷாலினியின் நண்பர்களை நான் பாராட்டுகிறேன். மானுடம் இன்னும் சாகவில்லை, மனித நேயம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு ஏற்ப, ஷாலினியின் நண்பர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதிய கவிதைகளை இங்கு நூலாக வெளியிட்டுள்ளனர். எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், எவ்வளவு இணக்கமாக இருந்தாலும் இந்த பரபரப்பான உலகில் நட்பு எளிதில் முறிந்து விடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஷாலினியின் நண்பர்கள் உள்ளபடியே இன்று வரலாற்று பதிவை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அந்த வகையில் நான் மெய் சிலிர்ப்போடு உங்களை வாழ்த்தவும், பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.
நட்பு குறித்து அவர், ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் தமிழ் மீது கொண்டுள்ள பற்று பற்றி இங்கு தோழர்கள் எடுத்துக் கூறினார்கள். அவருக்குள்ள பார்வை பெரியாரிய பார்வையாக, புரட்சியாளர் அம்பேத்காரிய பார்வையாக, ஒரு சமத்துவ பார்வையாக இருக்கிறது. ஆனால், இந்த சமத்துவ பார்வையை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாகவே காண முடிகிறது. ஆனால், தங்கை ஷாலினியிடம் அத்தகைய சமத்துவ பார்வை மேலோங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தான் இந்த கவிதைத் தொகுப்பு. அதில் நட்பு குறித்து அவர் எழுதியிருக்கிற இந்த கவிதை, "நட்பே வா, நடக்க இன்னும் தூரம் உண்டு, கடக்க இன்னும் வழிகள் உண்டு, ஒருவேளை மரணம் முந்திக்கொண்டால் நான் வீழ்ந்து கிடக்க உன் மடியும் உண்டு" நண்பர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது அவருக்கு. என் நண்பர்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்பதில் ஷாலினிக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது. தன் நண்பர்கள் தன்னை தாங்குவார்கள் என்பதை அவர் தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
உலகம் உருண்டை என்கிறான் விஞ்ஞானி, ஆனால் ஒரு உருண்டை சோறு தான் உலகம் என்கிறான் விவசாயி. இப்படி பாட்டாளி வர்க்க பார்வையோடு தன்னுடைய சிந்தனைகளை பதிவு செய்திருக்கிறார் தங்கை ஷாலினி. சமத்துவப் பார்வை அனைவருக்கும் உண்டா என்றால், அது விவாதத்துக்கு உரியது. பாட்டாளி வர்க்க வரிசையி்ல் இடம் பெற வேண்டிய ஷாலினியை நாம் இழந்திருக்கிறோம். மரணம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை ஒவ்வொருவரும் உணர்கிறோம். பிறந்தால் இறந்தாக வேண்டும் என்பது இயற்கை. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நாம் போராட வேண்டியிருக்கிறது. மனிதன் ஒரு உணர்ச்சியின் தொகுப்பாகத்தான் இருக்கிறான். இந்த உணர்ச்சிகளை நெறிப்படுத்தத் தெரிந்தவன், இந்த உணர்ச்சிகளை முறைப்படுத்தத் தெரிந்தவன், இந்த உணர்ச்சிகளை கையாளத்தெரிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். இந்த உணர்ச்சியை கையாள்வதற்கு ஒரு வல்லமை தேவைப்படுகிறது. பயம் என்கிற உணர்ச்சிதான் மனிதனை வீழ்த்த கூடிய பகை உணர்ச்சி.
நம்மை ஒருவருக்குக் கீழாக நினைக்கும் போது பயம் நம்மை ஆட்டுவிக்கிறது. ஒருவனுக்கு பயம் வந்துவிட்டால் அவன் பலவீனம் அடைந்துவிட்டான் என்பது பொருள். மனிதன் மரணத்தை எதிர்கொள்வதில்தான் தடுமாறிப் போகிறான், மரணத்தை சந்திப்பதில்தான் திணறிப் போனான். இந்த மரணத்தை எதிர்கொள்வதற்காக அவன் தேடித் தேடி மேற்கொண்ட முயற்சியின் விளைவாக அவனே உருவாக்கிக் கொண்ட ஒரு பாதுகாப்பு அரண்தான் கடவுள் என்கிற ஒன்று. மனிதனே தன்னுடைய மரண பயத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அவனே கண்டுகொண்ட ஒரு கண்டுபிடிப்புதான் கடவுள். ஆகவே விபத்து ஏன் நேர்ந்தது, எல்லோரும் வாழ இங்கு இடம் இருக்கின்ற போது, என் பிள்ளை ஷாலினிக்கு மட்டும் இடமில்லையா என்ற கேள்வி எழும். இறப்பு எப்படியும் நிகழும். அதனை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே, ஷாலினியை இழந்து வாடும் அவரின் பெற்றோருக்கும், அவரின் தங்கைக்கு ஆறுதல் கூறவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஷாலியின் ஆற்றலை நாம் வியப்பதை காட்டிலும், ஷாலினியின் பங்களிப்பை போற்றுவதை காட்டிலும், ஷாலினியின் இழப்பை ஈடுசெய்வதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சியை காட்டிலும், ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதுதான் நம்முடைய கடமை. அந்த வகையில் அன்புத் தங்கை ஷாலினியை இழந்து வாடும் அவரின் பெற்றோருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்."