Skip to main content

திருமலை நாயக்கரின் தீரம்! -மதுரையை மாற்றியமைத்த மாமன்னர்! 

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
thirumalai


‘தைப்பூச நாயகர் திருமலை நாயக்கருக்கு 436-வது பிறந்தநாள் விழா’ என மதுரையில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சாதி அமைப்புக்கள், அரசியல் கட்சிகள்  வரிந்து கட்டிக்கொண்டு திருமலை நாயக்கர் ஜெயந்தி விழாவுக்கு மக்களை அழைத்தன. 21-ஆம் தேதி தமிழக அரசும் விழா எடுத்தது.  
 

இத்தனை சிறப்புக்குரிய மன்னர் திருமலை நாயக்கர் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இதோ – 
 

thirumalai nayakar


மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வரிசையில், ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர். இவருடைய மகன்கள்தான் முதலாம் முத்துவீரப்ப நாயக்கரும் திருமலை நாயக்கரும். ஆறாவது மன்னராகப் பொறுப்பேற்ற முத்து வீரப்ப நாயக்கருக்கு வாரிசு இல்லை. அதனால், அவருடைய தம்பியான திருமலை நாயக்கர் ஏழாவது மன்னர் ஆனார். இவருடைய ஆட்சிக்காலம் 1623 – 1659 ஆகும். 
 

திருமலை நாயக்கர் காலத்தில்தான், டெல்லி சுல்தான் படைகளாலும், இஸ்லாமிய அரசுகளாலும் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனாலும், தீரத்துடன் ஆட்சி நடத்தி,  தனது நாட்டைச் சிதைந்துவிடாமல் காப்பாற்றினார். அன்றைய பாண்டி நாட்டின் பெரும்பகுதி இவருடைய ஆட்சிப் பகுதிக்குள் அடங்கியிருந்தது. 
 

கட்டிடக்கலை மீது பேரார்வம்!
 

திருச்சிராப்பள்ளியிலிருந்து மீண்டும் மதுரைக்குத் தலைநகரை மாற்றியவர் திருமலை நாயக்கர். ஸ்மார்ட் சிட்டியாக இனி மாறவிருக்கும் மதுரையை அன்றே விழா நகரமாகவும், கலை நகரமாகவும் மாற்றியமைத்தார். கலைகள் மீது ஆர்வமுள்ள இவர், கட்டிடக் கலை மீது பேரார்வம் காட்டினார். பழைய கோவில்களைத் திருத்தி அமைத்ததில் இவருடைய பங்களிப்பு அதிகம்.  கி.பி. 1636-இல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட அரண்மனைதான் திருமலை நாயக்கர் மகால். திராவிட மற்றும் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட அரண்மனை இது. 
 

தென்னிந்திய அதிசயம்!
 

அப்போது, இந்திய மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்தது மதுரை. அந்தத் தொடர்பில், ஒரு இத்தாலியக் கட்டிடக் கலைஞரைப் பணியில் அமர்த்தி, இந்த அரண்மனையைக் கட்டியதாகவும் பேசப்படுகிறது.  பளபளப்பான தோற்றம் பெறுவதற்காக சுண்ணாம்புடன் முட்டையின் வெள்ளைக்கருவும் இதன் கட்டுமானப் பணியில் கலவையாகப் பயன்படுத்தப்பட்டது. தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருமலை நாயக்கர் மகாலின் தூண்கள் உலகளவில் பிரசித்தி பெற்றது. தூணின் உயரம் 82 அடியாகவும், அகலம் 19 அடியாகவும் உள்ளது. தற்போது காணப்படும் கட்டிடத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது அன்றைய அரண்மனை வளாகம். 
 

ஆண்டாள் உச்சிகால பூஜைக்குப் பிறகே உணவு!
 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாளின் தீவிர பக்தராக இருந்திருக்கிறார் திருமலை நாயக்கர். ஆண்டாள் கோவிலில் உச்சிகால பூஜை முடிந்தபிறகே மதிய உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். அதனால், ஆண்டாள் கோவில் பூஜை மணி ஓசையை அறிந்துகொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை வரையிலும் வழிநெடுக பல மணி மண்டபங்களைக் கட்டினார். அந்த மண்டபங்களில் சிலவற்றை இப்போதும் காணலாம். 

 

o3


திருச்செந்தூரில் டச்சுப் படையினரோடு போர்!
 

முருக பக்தராகவும் இருந்திருக்கிறார் திருமலை நாயக்கர். 1648-இல் கடல் மார்க்கமாக வந்த டச்சுப் படையினர் திருச்செந்தூர் முருகன் கோவிலைக் கைப்பற்றினர். டச்சுப் படையினர் மிகவலிமை பெற்றிருந்தும், திருமலை நாயக்கர் பெரும் படையைத் திரட்டிச் சென்று எதிர்த்துப் போரிட்டார். 
 

மதுரையின் முத்திரை நாயகன்!
 

ஆரம்ப காலத்தில் மதுரை அருகிலுள்ள சோழவந்தானில்தான் சித்திரைத் திருவிழா நடந்து வந்தது. அத்திருவிழாவை மதுரை நகருக்கு மாற்றியவர் திருமலை நாயக்கர். விழாக்களுக்குப் பெயர்போன மதுரையின் முத்திரைத் திருவிழா என்றால் அது சித்திரைத் திருவிழாதான். அதுபோலவே, திருமலை நாயக்கரும்  நாயக்க மன்னர்களின்  ஆட்சிக்காலத்தில் முத்திரை பதித்தவராக இருக்கிறார். 

 

 

 

Next Story

“இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?” - இ.பி.எஸ். விளக்கம்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
"Why the By-Election Boycott?" - EPS Explanation

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

"Why the By-Election Boycott?" - EPS Explanation

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக போட்டியிடாதது குறித்து பேசுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர்.

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்தார். 

Next Story

"மீண்டும் வெற்றி பெற்ற தோழர்” - சசிகுமார் வாழ்த்து 

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
sasikumar wishes su venkatesan mp

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசனுக்கு இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற தோழர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்” என்றார். மேலும் சு.வெங்கடேசனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சு.வெங்கடேசன் மொத்தம் 4,30,323 வாக்குகள் பெற்றிருந்தார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை விட 2,09,409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக மதுரை தொகுதியில் பெற்றுள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு அதே தொகுதியில் 4,47,075 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 1,34,119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.