Skip to main content

"அரசியல்வாதிகளுக்கு தேர்வு வையுங்கள்... பார்த்து எழுதினால் கூட வெற்றிபெற மாட்டார்கள்.." - சீமான் தடாலடி!

 

jkl


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பு அரசியல் குறித்து பேசினார். அவரின் பேச்சு பின்வருமாறு, " இன்று டெல்லியில் நடைபெறும் போராட்டம் என்பது ஒட்டுமொத்த குடிமக்களுக்குமான பிரச்சனையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த விவசாயச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய விலையேற்றத்தை, மிக பெரிய உணவுப் பஞ்சத்தை நம் நாட்டு குடிகள் சந்திப்பார்கள். மிக அத்தியாவசியமான உணவுப்பொருட்களை, அத்தியாவசியமான உணவுப்பொருள் அல்ல என்று இந்தச் சட்டம் அறிவிக்கிறது. அப்படி என்றால் ஒரு முதலாளி மக்களுக்குத் தேவையான பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த முடியும். ஒரு கிலோ தக்காளியை 500, 1000 என்று கூட விற்பனை செய்ய இந்தச் சட்டம் வாய்ப்பு ஏற்படுத்துகிறது. எனவே இதை போராடுகிற விவசாயிகளின் பிரச்சனையாக கருதாமல், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சனையாக கருத வேண்டும். வேளாண்மையைச் சார்ந்துதான் ஒட்டுமொத்த உலக குடிகளும் வாழ்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் வாழ்க்கையை இருட்டாக்குவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. வேளாண்மை பாதிக்கிறது என்றால் அதை நாட்டு பாதிப்பாக கருத வேண்டுமே தவிர, போராடுகிறவர்களின் பாதிப்பாக கருதக் கூடாது. 

 

இந்த கரோனா பாதிப்புக்குத் தடுப்பூசி ஒன்றை தற்போது இந்தியாவில் போடுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் போட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற நாடுகளில் எல்லாம் அந்தெந்த நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் தடுப்பூசிகளைப் போட்டு மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்கள். இந்தியாவில் அந்த முறையை பின்பற்றலாமே? பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாமே? அவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் உயிர் என்பது மிக முக்கியமான ஒன்றுதானே? அல்லது நிர்மலா சீதாராமனாவது ஊசி போட்டுக்கொள்ளட்டும். இல்லையென்றால் மருத்துவதுறை அமைச்சராவது போட்டுகொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள். இதை செய்ய ஏன் தயங்குகிறீர்கள். எதற்கெடுத்தாலும் மாணவர்களுக்குத் தேர்வு வைக்கிறீர்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு ஏன் எந்தத் தேர்வும் வைக்கமாட்டேன் என்கிறீர்கள். அவர்கள் மக்களால் தேர்வு செய்து பதவியில் வருவார்கள் என்றால் தேர்வில் வெற்றிபெற்றால்தான் முடியும் என்ற நிலையைக் கொண்டு வாருங்கள். அமித்ஷா, மோடி உள்ளிட்டவர்கள் தேர்வெழுத்தட்டும். நானும் தேர்வெழுதுகிறேன். வெற்றிபெறவில்லை என்றால் வெளியேறுகிறேன். இதற்கு அரசு ஒத்துக்கொள்ளுமா? பலபேர் பார்த்து எழுதினால் கூட தேர்வில் வெற்றிபெற மாட்டார்கள். 

 

நாட்டில் உள்ள அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு அரசு என்ன செய்ய இருக்கிறது என்று தெரியவில்லை. ரயில், துறைமுகம், விமான நிலையம் என அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு, இவர்கள் எதை சாதிக்க இருக்கிறார்கள். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டிருந்தால் இவர்களால் இவ்வாறு சிந்திக்க முடியுமா? மக்களிடம் 28 சதவீதம் வரியை வாங்கிங்கொண்டு நீங்கள் எதை நிர்வகிக்கிறீர்கள், ஒன்றும் இல்லை. உங்களை மாதிரியான ஊடகவியலாளர்கள்தான் என்னை மொழி வெறியன், இன வெறியன் என்று தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் என்னுடைய ஊர் தளவாடியில் இருக்கின்ற தமிழ் பலகையை ஒருவர் வந்து அழித்துவிட்டு செல்கிறார் என்றால் அதை எப்படி பார்த்துக்கொண்டு இருப்பது. இதை ஏன் எந்த ஊடகமும், தேசிய சிந்தனை கொண்ட ஒருவரும் கண்டிக்கவில்லை. மான உணர்வு, இன உணர்வு செத்துப் போய் விட்டதா? அதையே நாங்கள் செய்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள். இன வெறியன் என்ற ஒற்றைச் சொல்லில் எங்களை அடக்கப் பார்ப்பீர்கள். அவர்களுக்கு வந்தால் அது சொறி சிரங்கா? எங்களுக்கு வந்தால் இன வெறியா? இதில் நியாயம் இருக்கிறதா, கூறுங்கள். இதற்கு எதிர்வினை ஆற்றுவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் இருப்பதே, பிறந்ததே அதற்குத்தான். அன்புன்னா அன்பு, வம்புன்னா வம்பு. வெட்ட வரும்போது விழுந்து கும்பிடுகிற ஆள் நான் கிடையாது, வெட்ட வேண்டும் என்று நினைக்கின்ற போதே வெட்டி முடித்துவிடும் ஆள் நான், எனவே எங்களிடம் ஆட்டம் காட்டாதீர்கள்" என்றார்.