Skip to main content

எதிர்க்கட்சி தலைவர் மீது அவதூறு, ஊழல் வழக்கு கூட போடுவார்கள்... ஆனால் ஆதாரம் இல்லாமல் கொலை வழக்கு போட முடியுமா..? தேனி கர்ணன் கேள்வி!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

fg

 

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் தாமாகவே முன்வந்து பேச துவங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கில் என்னை சிக்க வைக்க முயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டினார். அரசு தரப்பில் இருந்தோ அல்லது காவல்துறை தரப்பில் இருந்தோ இந்த மாதிரியான செய்திகள் எதுவும் கூறப்படாத நிலையில், தாமாகவே எடப்பாடி பழனிசாமி இப்படி கூறியது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. அதன் பிறகு கொடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக தரப்பு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டுப் பார்த்து தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. அதிமுகவினரும் இதுதொடர்பாக என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு அதிமுக தரப்பு உச்ச நீதிமன்றம்வரை சென்றது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொடநாடு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன? 

 

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்த அனுபவ் ரவி அதிமுகவில் சிறிய அளவிலான பொறுப்பில் இருக்கிறார். அவர் ஏன் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்று தொடர்ந்து போராடுகிறார் என்ற கேள்வி அனைவருக்குமே எழுகிறது. சென்னை அளவுக்கு வந்திருந்தாலும் பரவாயில்லை, சுப்ரீம் கோர்ட் போயுள்ளார் என்றால், இதை நாம் எளிதாக கடந்து செல்ல இயலாது. அவருக்கு இதில் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் ஒரு சாட்சி; அவர் குற்றவாளி இல்லை. மறுபடியும் உன்னை விசாரித்தால் நீ ஏற்கனவே கூறியதைச் சொல்லிவிட்டு ஓடிவிட வேண்டியதுதானே. இவ்வளவு பணத்தை செலவழித்து இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று சொல்ல ரவி அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. 

 

30, 40 லட்சம் பணம் செலவழித்தாவது இந்த வழக்கை தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவருக்குப் பின்னால் இருந்து இவரை இயக்குவது எடப்பாடி பழனிசாமிதான். எந்த வழக்கிலாவது சாட்சி வழக்கை நடத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் செல்வானா? எடப்பாடி பழனிசாமி தரப்பு எனக்கு சம்பந்தமில்லை என்று கூறுவதெல்லாம் வடிகட்டிய பொய். சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் மற்றும் கொடநாடு வழக்கு ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பேசுகிறார். உடனே எடப்பாடி பழனிசாமி எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர் ஏன் பதற வேண்டும். நான் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று அவராகவே வெளியே வருவது இதன் மூலம் தெரிகிறது.

 

எந்த விசாரணைக்கும் தாயார் என்றுதானே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகிறார்கள்?  

 

அப்புறம் எதற்காக இவ்வளவு பதற்றம். முதல்வர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தரப்பின் பெயரை சட்டமன்றத்தில் கூறி உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று எப்போதாவது கூறினாரா? நீங்களாகவே எழுந்து சட்டப்பேரவையில் என்னை வழக்கில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று ஏன் கூற வேண்டும். எதற்காக உங்கள் முகத்தில் இவ்வளவு பதற்றம், பயம். தவறு இல்லை என்றால் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே. ஏன் ஓடி ஒளிய வேண்டும். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது அவதூறு வழக்கு ஏன், ஊழல் வழக்கு கூட போடுவார்கள், ஆனால் கொலை, கொள்ளை வழக்கு எல்லாம் ஆதாரம் இல்லாமல் யாராலும் போட இயலாது. அப்படி இருக்கையில் இவர்களின் பதற்றம் நமக்கு வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

 

எங்கள் ஆட்சியிலேயே இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்துவிட்டதாக அவர்கள் கூறுகிறார்களே?

 

இவர்கள் என்ன விசாரணை செய்தார்கள், நூற்றுக்கணக்கான சாட்சிகளைப் பதிவுசெய்துவிட்டு, இதுவரை எத்தனை சாட்சிகளிடம் விசாரணை செய்துள்ளீர்கள். பாதி பேரிடம் கூட விசாரணை முழுமையடையவில்லை. 40, 50 பேரிடம் மட்டுமே விசாரணை செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இவர்கள் என்ன விசாரணை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் வருவது இயற்கையான ஒன்றுதானே. குற்றம்சாட்டப்பட்டவர் தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி கொடுக்கும். அதைத்தான் சயான் கேட்கிறார். எனக்கு என்னுடைய செல்ஃபோன் வேண்டும், பாதுகாப்பு வேண்டும் என்று தொடர்ந்து அவர் கேட்கிறார். இதில் திமுக எங்கே வந்தது. எதற்காக திமுக மீது எடப்பாடி பழனிசாமி பழி சுமத்துகிறார். அதையும் தாண்டி தற்போதும் இந்த வழக்கை தமிழக காவல்துறைதான் விசாரணை செய்துவருகிறது. எனவே முந்தைய ஆட்சியில் இருந்த காவல்துறை அதிகாரிகளை இவர்கள் காட்டி கொடுக்க மாட்டார்கள். எனவே இந்த வழக்கு முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.