தமிழக அரசியல்வாதிகளில் சற்று வித்தியாசமானவர் தங்கதமிழ்செல்வன். அரசியல்வாதிகளுக்குரிய மொழிநடையில் பேசாமல், சாதாரண மக்களுக்கும் புரிகின்ற வகையில் அரசியல் கருத்துக்களை எதார்த்தமாக தன்னுடைய பேச்சி்ல் வெளிப்படுத்துவார் தஙங்க தமிழ்செல்வன். அவரின் இந்த செயலுக்கு கட்சிகளை கடந்தும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் திமுகவில் இணைந்த அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு, அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,
அதிமுகவில் இருந்து சமீபத்தில் தான் நீங்கள் திமுகவுக்கு வந்துள்ளீர்கள். கட்சி மாறிய பிறகு நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் வேலூர் தேர்தல். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகிறது. மூன்று வேளையும் ஹோட்டல்களில் உணவு அருந்துகிறேன். மக்களிடம் நெருங்கி பேசுகிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். அவர்களிடம் பேசியதில் இருந்து ஆளும் அதிமுகவுக்கு இங்கு எவ்வளவு எதிர்ப்பு உள்ளது என்பதை அறிந்துள்ளேன். அதையும் தாண்டி வேலூர் எப்போதும் திமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்த முறையும் அங்கு வெற்றிபெற்று அதனை உறுதிபடுத்துவோம். முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் அந்தர் பல்டிகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் அதிமுகவிற்கு பெரும் தலைவலியாக இருக்கும்.
வேலூர் பிரச்சார களத்தில் பாஜகவினர் அதிகம் பங்கேற்றவில்லை என்றும், அதிமுக மற்றும் பாஜகவுக்குமிடையே விரிசல் இருப்பதாக கூறப்படுவதை பற்றி?
பாஜக கட்சியே தமிழகத்தில் இல்லை, அப்புறம் எப்படி களத்தில் இருப்பார்கள். அதிமுக நாங்கள் பஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்பதை தைரியம் இருந்தால் மக்களிடம் பிரச்சாரத்தில் சொல்ல வேண்டியது தானே. ஏன் சொல்ல மறுக்கிறார்கள். பயம் தான் அனைத்திற்கும் காரணம். எனவே, அந்த கூட்டணியால் இருவருக்குமே எந்த பலனும் இல்லை. அதையும் தாண்டி இங்கு போட்டியிடுகிற வேட்பாளரை பற்றியும் விசாரித்தேன். அவர் ஏற்கனவே அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால், ஜெயித்த பிறகு தொகுதி பக்கமே வரவில்லை என்று இங்குள்ள மக்கள் என்னிடம் கூறினார்கள். ஆக, வேலூரில் அதிமுக வெற்றி என்பது சாத்தியமில்லாதது.
ஏ.சி சண்முகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது இடத்தை பெற்றார். அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். அவர் திமுகவிற்கு சவாலான வேட்பாளர் என்றுதானே சொல்கிறார்கள்?
நான் மக்களோடு பழகியதை வைத்து, அவர்களின் எண்ண ஓட்டத்தைத்தான் சொல்கிறேன். அவர்களின் எண்ணத்தை போன்றே திமுக இங்கு அபார வெற்றி பெறும்.
நீங்கள் அம்மானு சொல்லி இருக்கிறீர்கள், அமமுகவில் இருந்துள்ளீர்கள், இப்போது தளபதி என்று கூறுகிறீர்கள், நீங்கள் கட்சி அடிப்படையில் செல்கிறீர்களா? கொள்கையின் அடிப்படையில் செல்கிறீர்களா?
கொள்கையின் அடிப்படையில் தான் செல்கிறோம். தேனியில் நடைபெற்ற இணைப்பு விழாவில் தளபதி, எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தங்க தமிழ்செல்வன் திமுகவிற்கு வந்திருக்க மாட்டார் என்று அழகாக சொன்னாரே? இப்போது இருக்கிற அதிமுக புரட்சி தலைவர் உருவாக்கிய அதிமுகவாக இல்லை என்றும் கூறினாரே. அவர் கூறியதுதான் 100 சதவீதம் உண்மை, அதுதான் சத்தியம். அதனால்தான் அதிமுக தொண்டர்கள் யாரும் அங்கே இருக்க வேண்டாம். தமிழ் இனம், தமிழ் மொழி, இன உரிமையை பாதுகாக்கும் இயக்கமான திமுகவில் இணையுங்கள் என்று அழைப்பு விடுத்தார். மிக அருமையான செய்தியை தளபதி அதிமுக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பதே என்னுடைய எண்ணம்.
இந்த அழைப்பை திமுகவினர் ஏற்றுக்கொண்டார்களா? இதனால் கட்சிக்குள் சலசலப்பு நிலவுவதாக கூறுகிறார்களே?
அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள், திமுக, அதிமுக என யாரிடம் எந்த கேள்வியும், சந்தேகமும் எழவில்லை. ஏனென்றால் நல்ல கருத்தை அவர் சொல்கிறபோது, அதனால் என்ன பிரச்சனை வர போகிறது. அவர் ஒன்றும் இல்லாத செய்தியை கூறவில்லையே. தாய் கழகத்துக்கு அழைப்பது வழக்கமான ஒன்றுதானே. இந்த ஒரு செய்தியை அடிப்படையாக வைத்துதான் ஊடகங்களில் மூன்று நாட்கள் விவாதங்கள் நடைபெற்றது.
இப்போது நடக்கிறது ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடக்கவில்லையா?
அம்மா தவறிட்டாங்க, கலைஞர், எம்ஜிஆர் எல்லாரும் இறந்து விட்டார்கள். அவர்களை பற்றி பேசுவது தேவையில்லாத ஒன்று. இறந்தவர்களை பற்றி குற்றச்சாட்டு வைக்க வேண்டாம். நாம் இப்போது இருக்கிற ஆட்சியை பற்றிதான் பேச வேண்டும். இப்போது ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே இதனை ஊழல் ஆட்சி என்று தொடர்ந்து கூறிவருகிறோம். மக்களுக்கு நல்லது செய்கின்ற ஆட்சியை தனபதி தருவார் என்ற நம்பிக்கையில்தான் நான் திமுகவில் சேர்ந்தேன்.
டிடிவி தினகரனுக்கும் உங்களுக்குமான பிளவு பற்றி நீங்கள் கூடகங்களில் கூட வெளிப்படையாக பேசவில்லை. உங்களுக்கிடையேயான பகைக்கு என்ன காரணம்?
எல்லா முடிவுகளும் தன்னிச்சையா அவர் ஒருவர் மட்டுமே எடுத்ததுதான் பிரச்சனைக்கு காரணம். நான் பெட்டி பாம்பா அடங்கிடுவேன்னு அவர் சொல்வதெல்லாம் ஆணவத்தோட உச்சம் நிலை. ஒரு தலைவருக்கு அது அழகல்ல.
சசிகலா விரைவில் வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வெளியில் வந்தால் அதிமுகவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?
எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. எடப்பாடி, ஓபிஎஸ், தங்கமணி, வீரமணி, ஜெயகுமார் இவர்கள் இருக்கும் வரையில் எந்த மாற்றமும் அதிமுகவில் இருக்க வாய்ப்பில்லை என்பதே என்னுடைய கருத்து.
அமமுகவில் இருந்து வெளியேறுபவர்கள் பெரும்பாலும் அதிமுகவிற்குதான் செல்கிறார்கள். ஆனால், நீங்கள் திமுகவுக்கு சென்றுள்ளீர்கள். அதற்கு ஸ்டாலினின் வரலாற்றை தற்போதுதான் படித்து தெரிந்துகொண்டேன் என்று சொன்னீர்கள், இது கொஞ்சம் ஓவராக தெரியலையா?
நான் அப்படி சொல்லவில்லை, அவருடைய வரலாறு மிகப் பெரியது, பெரிய சோதனைகளை கடந்து அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக திமுகவை கொண்டுவந்துள்ளார். அவரின் உழைப்பு கடுமையானது. இந்தகைய செய்திகளை அடிப்படையாக வைத்து நான் கூறியதை தான் நீங்கள் வேறுமாதிரியாக கேள்வி எழுப்புகிறீர்கள். இவரின் உழைப்புக்கு தமிழக மக்கள் நல்ல செய்தியை விரைவில் தருவார்கள் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.