Skip to main content

இணை ஆணையர் ஆக்கிரமித்த 150 கோடி ரூபாய் கோயில் சொத்து! - குடிசைவாசிகளை மட்டும் விரட்டும் இந்து அறநிலைத்துறை!

 

“முப்பது வருசமா இங்கதான் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். எங்க குடிசைகளையே இடிக்கப்போறதா சொல்லி, சோத்துல மண்ணள்ளி கொட்டிட்டாங்க இந்து அறநிலையத்துறைக்காரங்க. எந்த நேரத்துல இடிக்க வருவாங்களோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்து பயந்து செத்துக்கிட்டிருக்கோம்.  குழந்தை குட்டிகளோடு எங்கப் போவோம்னே தெரியல” என்று இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மனு கொடுத்து கண்ணீரோடு கதறிக்கொண்டிருக்கிறார்கள் சென்னை பரங்கிமலை கிராமத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குடிசைவாசிகள்.

 

2021 ஜனவரி 12ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை & அறக்கட்டளை ஆணையர் (Hindu Religious and Charitable Endowments Department) அலுவலகத்தில் திரண்ட மக்கள், “பரங்கிமலை (St. Thomas Mount ) கிராமத்தில் குவாரிகளில் வேலை பார்த்துக்கொண்டே கடந்த 35 வருடங்களுக்கு மேலாக வசித்துவரும் 15க்கும் மேற்பட்ட குடும்பங்களின்  குடிசைகளை அகற்றப்போவதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதோடு, அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டினார்கள் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் திரிசூலம் உதவி ஆணையர் உள்ளிட்டவர்கள். அதனால், பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் குடிசைகளை இடிக்காமல் தடுக்கவேண்டும்” என்ற கோரிக்கை மனுவோடு ஆணையரை சந்திக்கச் சென்றார்கள். ‘ஆணையர் இல்லை டி.ஆர்.ஓவை பாருங்கள்’ என்றதால் அவரிடம் தங்களது மனுவை கொடுத்துவிட்டு வெளியில் வந்தார்கள்.

 

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என வந்த அப்பகுதி மக்களிடம்  நாம் பேசியபோது, “பரங்கிமலை கிராமத்துல ஜல்லி உடைக்கும் வேலை பார்த்துக்கிட்டே  இராணுவத்துக்கு சொந்தமான மற்றும் புறம்போக்கு இடத்துல குடிசைகள் அமைத்து 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துக்கிட்டிருக்கோம்ங்க. பிறகு, அந்த குவாரிகள் மூடப்பட்டதால, அக்கம்பக்கத்துல கூலிவேலைக்குப் போயித்தான் வாழ்க்கைய நடத்துறோம்.

 

திடீர்ன்னு, இந்த இடம் மாங்காளி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம்னும் இந்த இடத்தை இந்து அறநிலையத்துறை எடுத்துக்கிட்டதாகவும் நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம், எங்கள் சார்பா ஜல்லி உடைக்கும் குவாரி வைத்திருந்த ஜவஹர் அலிங்குறவர் நீதிமன்றத்தில் தடை கேட்டு சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக சொன்னாரு. அதற்குப் பிறகு, குடிசைகள் இடிக்கப்படவில்லை. ஆனா, கடந்த சில ஆண்டுகளாக இணை ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்டவங்க அனுப்பினதாகவும் பணம் கொடுத்தால் இடிக்காமல் தடுக்கலாம். இல்லைன்னா அவங்களே தூண்டிவிட்டு வழக்கெல்லாம் போடவெச்சு சட்டப்படி நெருக்கடி கொடுப்பாங்கன்னும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. நாங்களே கூலி வேலை செஞ்சு வாழ்றவங்க. எங்க குடிசைகளைப் பாருங்க. நீங்க, கேட்குற பணத்தை நாங்க எப்படி கொடுக்கமுடியும்னு சொன்னோம்.   

 

2013 ஆண்டிலிருந்து இந்த இடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம்னு சொன்னா, எங்கக்கிட்ட சட்டப்படி வரி, வாடகை எல்லாம் வசூலிச்சிருக்கலாமே? ஆனா, எதுவும் செய்யாம மிரட்டி பணம் பறிக்கிறதிலேயே குறியா இருந்தாங்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்கள். அதனாலதான், இந்து அறநிலையத்துறை ஆணையரைச் சந்தித்து, இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் குடிசைகளை இடிக்காமல் இருக்க உத்தரவிடுமாறு கோரிக்கை மனு கொடுக்கவந்தோம். இந்த, இடம் மாங்காளி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடமே இல்ல. கோயிலே புறம்போக்கு இடத்துலதான் இருக்கிறதா வி.ஏ.ஓ., தாசில்தார் ஆஃபிஸுல இருக்கிற ‘அ’ பதிவேட்டில் தெளிவா இருக்கு. அப்புறம், எப்படி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இப்படி எங்களோட வாழ்வாதாரத்தை சீரழிக்கிறாங்கன்னு தெரியல” என்று கண்ணீர் வடித்து கதறுகிறார்கள்.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தர நாச்சியம்மாள்  திருக்கோயிலுக்கு சொந்தமான, சர்வே எண்-143 லுள்ள 473 ஏக்கர் இடத்தில், சுமார் 150 கோடி  ரூபாய் மதிப்புள்ள 75 ஏக்கரை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதியின் அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களுக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, ‘நக்கீர’னில் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

 

அதாவது, இந்து அறநிலைத்துறையின் அதிகாரியாக ஜே.சி பாரதி இருக்கும்போதே தனது அப்பா பாலகிருஷ்ணன் அறங்காவலராக இருந்த, திருச்செந்தூர் வட்ட குதிரைமொழி கிராமத்திலுள்ள அருள்மிகு சுந்தர நாச்சியம்மாள் திருக்கோயிலுக்கு சொந்தமான  473 ஏக்கர்  கோயில் நிலத்திலிருந்து 75  ஏக்கர் நிலத்தைத் தனது உறவினர் தங்க வடிவம்மாளுக்கு விதிகளுக்குப் புறம்பாக 1993 ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டார்.  

 

பிறகு,  1994 பிப்ரவரி-24 ந்தேதி தங்கவடிம்மாளிடமிருந்து தன்னுடைய  அப்பா பாலகிருஷ்ணன் பெயருக்கு (ஆவண எண் -866867/94)  போலியாக தனிநபர் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை தனிநபர் பட்டா மாற்றம் செய்வதே சட்டப்படி குற்றம். அதற்குப்பிறகு, 2014  நவம்பர்-26 ந்தேதி இணை ஆணையர் பாரதியின்  சகோதர்கள் ராஜன், மாணிக்கம் ஆகியோரின் பெயர்களுக்கு தனிநபர் பட்டா மாற்றம் (ஆவண எண் 2547/2014) செய்யப்பட்டுள்ளது.

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் பாரதிக்கு இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கியபோது, மீண்டும்  இந்நிலத்தின்  பட்டாவை  தனது அப்பா ஜி.ஆர் பாலகிருஷ்ணன், சகோதரர்கள் ராஜன், மாணிக்கம், அம்மா எஸ்தர் கனி என்கிற கனகம் அம்மாள் மற்றும் உறவினர்கள் பெயர்களுக்கு 2019 மே மாதம் மோசடியாக மாற்றியிருக்கிறார் இணை ஆணையர் பாரதி. இந்த மோசடிக்கு திருசெந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் துணையாக இருந்திருக்கிறார்கள். இதுகுறித்து, அப்போதைய நிர்வாக அதிகாரி எசக்கியப்பன் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் விசாரணை செய்து, மோசடி நடந்திருப்பது உண்மைதான் என உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்.

 

வீடுகளைக் காலி செய்யவேண்டும் என்று பரங்கிமலை கிராம மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய இணை ஆணையர் ஹரிப்பிரியா மீதும் பல்வேறு ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், ஹரிப்ரியா மீது ஒப்பிலியப்பன் கோவில் புராதனமான ஆபரணங்களை உருக்கிட அனுமதி அளித்த குற்றச்சாட்டுக் குறிப்பாணையின் விதி 17(b) மெமோ கொடுக்கப்பட்டு சஸ்பெண்ட் (தற்காலிக பணி நீக்கம்) செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து, இணை ஆணையர் ஹரிப்பிரியாவிடம் நாம் கேட்டபோது, “அரசாங்க பதிவேட்டில் அந்த இடம் மாங்களி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்று உள்ளது. அது, புறம்போக்கா பட்டாவா என்பதை ஆராயத் தேவையில்லை. அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் அந்த கோயில் வருவதால் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றச் சொல்கிறோம். ஏற்கனவே, நான் நோட்டீஸ் அனுப்பியபோது யாருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டோ அந்த மக்கள் ஆஜராகவில்லை. நான், பணம் கேட்டு யாரையும் அனுப்பவில்லை. அவர்கள், இந்து அறநிலையத்துறை ஆணையரிடம்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர்தான், அந்த இடத்திலிருந்து அம்மக்களை அகற்றுவதா? அல்லது அந்த இடத்துக்கான வாடகை வசூலிப்பதா என்பது குறித்து முடிவுசெய்வார்” என்றார் விளக்கமாக.   

 

dddd

 

பரங்கிமலை கிராம மக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறும் குவாரி உரிமையாளர் ஜவஹர் அலியிடம், 15 குடும்பங்களுக்காக என்ன மாதிரியான சட்டப் போராட்டடத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்று நாம் விளக்கம் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து எந்த தகவலையும் கூறமுடியாது என்று முழுமையாக விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

 

இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர்களே 150 கோடி ரூபாய் கோயில் சொத்துக்களை அபகரித்துக்கொள்வதும் ஊழல் முறைகேடுகள் என கொள்ளை அடிப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதி காக்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், தங்களது வாழ்வாதாரத்துக்காக கூலிவேலை செய்து வாழ்க்கையை ஓட்டும் குடிசைவாசிகளின் வீடுகளை இடித்து நடுத்தெருவில் நிற்கவைத்து, சட்டம் - நீதியை நிலைநாட்ட துடிப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. மேலும், 15 குடும்பங்களையும் எப்படியாவது விரட்டிவிட்டு தங்களது வியாபாரத்திற்காக அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ளலாம் என்று அப்பகுதி அரசியல் புள்ளிகள் காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு, இந்து அறநிலைத்துறை துணைபோய்க்கொண்டிருக்கிறது.